Saturday, June 22, 2019

ஆத்மா சாந்தி அடைய...

By சி.வ.சு. ஜெகஜோதி | Published on : 22nd June 2019 01:30 AM

படித்தவர்கள் பலரும் பங்கேற்ற திருமண ஊர்வலம் ஒன்று நகரின் பிரதான சாலையில் அமைதியாக நகர்ந்து சென்று கொண்டிருந்தது. அந்த ஊர்வலம், நான்கு சாலைகள் கூடும் மையப் பகுதிக்கு வந்தவுடன் மணமகனின் நண்பர்கள் சிலர் சுமார் அரை மணி நேரமாவது வெடித்துக் கொண்டே இருக்கக்கூடிய ஐந்தாயிரம் வாலா பட்டாசுகளை வெடிக்கச் செய்தனர்.
சாலைகளின் நாலாபுறமும் போக்குவரத்து ஸ்தம்பித்ததும் பட்டாசுகளை வெடிக்கச் செய்த இளைஞர் பட்டாளம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. போக்குவரத்து சீரானவுடன் மணமக்களை கடந்த வாகன ஓட்டிகள் நல்லா படிச்சவங்க மாதிரி தெரியறாங்க, போக்குவரத்துக்கு இடையூறு செய்கிறோம் என்கிற அறிவே இல்லையே என புலம்பிக்கொண்டு சென்றனர்.
அண்மைக் காலமாகவே திருமண ஊர்வலங்களை நடத்துபவர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக பட்டாசுகளை வெடிக்கச் செய்வதும், அதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதும் குறித்துக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. புது தில்லியில் நடைபெற்ற ஒருவரின் திருமணத்தின்போது அவரது உறவினர் ஒருவர் உற்சாக மிகுதியில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார். அப்போது துப்பாக்கியிலிருந்த குண்டு ஒன்று குதிரை மீது அமர்ந்திருந்த மணமகன் மீது விழுந்தது. உடனடியாக அவர் உயிரிழந்தார்.

திருமணத்துக்கு வந்தவர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கினர். போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து தொடர்புடைய நபரைக் கைது செய்ததுடன் அவருக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்றும் விசாரணை நடத்தினர். உற்சாக மிகுதி ஒருவரின் உயிரையே பறித்துவிட்டது. தற்போது நடக்கும் திருமண விழாக்களில் சாலைகளை ஆக்கிரமித்து விளம்பரப் பதாகைகளை வைப்பதாலும், ஜாதித் தலைவர்களின் படங்கள் அந்த விளம்பரங்களில் இடம்பெறுவதாலும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படும் மத ஊர்வலங்களில் தலையில் ரிப்பன்களை கட்டிக்கொண்டு கூட்டம் கூட்டமாக ஆடுவது, விசில் அடிப்பது, பிற மத வழிபாட்டுத் தலங்களைக் கடக்கும்போது கூச்சலிடுவது, தடை செய்யப்பட்ட பகுதிகளில்தான் செல்வோம் என காவல் துறையினரிடம் வாக்குவாதம் செய்வது போன்றவை தொடர்ந்து நடந்து வருகின்றன.
முன்பெல்லாம் இறுதி ஊர்வலங்கள் செல்லும்போது அதில் பங்கேற்பவர்கள் மிகவும் சோகத்துடன் செல்வதைப் பார்த்திருப்போம். ஆனால், குடித்து விட்டு குத்தாட்டம் போடுவதற்காகவே இன்றைய இறுதி ஊர்வலங்களில் பெரும்பாலானவை நடத்தப்படுகின்றன. இறந்து விட்டால் வருத்தப்படுவதற்குப் பதிலாக மகிழ்ச்சி அடைகிறார்களே என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. 

இறந்துபோன நபரின் இறுதி ஊர்வலம் புறப்படும் வரை பக்கத்தில் வசிப்பவர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அதிகாலையிலேயே தாரை, தப்பட்டைகளை காதுகள் கிழிந்து விடும் வகையில் அடிப்பதும், ஒட்டக்கூடாத இடங்களில் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகளை ஒட்டுவதும் என அந்தப் பகுதி முழுவதும் தெரியப்படுத்தி இறுதி ஊர்வலம் புறப்படுவது தொடர்கிறது.

பெரும்பாலான இறுதி ஊர்வலங்களில் ஆபத்தான முறையில் பட்டாசுகளை வெடிப்பதும், சடலங்களின் மீது போடப்படும் மாலைகளைப் பிய்த்து தூவுவதிலும், பறை கொட்டுவதிலும் விதிமுறைகள் மீறப்படுகின்றன.
சென்னை அம்பத்தூரில் அண்மையில் ஒருவரது இறுதி ஊர்வலத்தின்போது, சடலத்தின் மீது இருந்த மாலையைப் பிய்த்து அதன் நாரை ஊர்வலம் சென்றோர் மேலே தூக்கி வீசியதில் மின் கம்பியில் சிக்கியது; விளைவு, 24 மணி நேரத்துக்கு 30 தெருக்களில் மின் தடை ஏற்பட்டது. சாலைகள் முழுவதும் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டு விட்ட நிலையில், சமுதாய அக்கறையற்ற இத்தகையோரை காவல் துறையினர் மூலம் குறைந்தபட்சம் எச்சரிக்கையாவது செய்யலாம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாமக்கல்லில் ஒரு பாட்டியின் இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்கச் செய்தபோது, அந்தப் பாட்டியின் பெயரன் உயிரிழந்தார். திருவையாறு நடுக்காவிரி அரசமரத் தெருவில் நடந்த ஒருவரது இறுதி ஊர்வலத்தின்போது பட்டாசு வெடிப்பதில் தகராறு ஏற்பட்டு, அதே பகுதியை சேர்ந்தவர்கள் இரு கோஷ்டிகளாக மோதிக் கொண்டனர். இரு தரப்பையும் சேர்ந்த 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் இறுதி ஊர்வலம் ராமேசுவரத்தில் நடந்தபோது சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒருவர்கூட மது அருந்தவில்லை; விசில் அடிக்கவில்லை; குத்தாட்டம் போடவில்லை; சிறு சட்டம்-ஒழுங்கு பிரச்னை எதுவுமே ஏற்படவில்லை; எந்த மீனவரும் மீன்பிடிக்கப் போகவில்லை; கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் தேசியக் கொடிகள் அனைத்தும் அரைக்கம்பத்தில் பறந்தன.

பிரதமர் உள்பட உலகத்தலைவர்கள் பலரும் எவ்வித பிரச்னையும் இல்லாமல் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றனர். எந்த அரசியல் கட்சியையும் சாராத முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதி ஊர்வலம் அமைதியாக நடந்தது. இந்த நிலையில், படித்தவர்களும், பண்பாளர்களுமே பொதுமக்களுக்கு இடையூறாக ஊர்வலங்களை நடத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது?

அமைதியாகக் கூடவும், அமைதியாக நகர்ந்து செல்லவும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடமுள்ளது.
ஆனால், அதற்கு நியாயமான கட்டுப்பாடுகள் உள்ளன. பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கக் கூடிய எந்தச் செயலையும் செய்யக் கூடாது என்றும் அதே அரசியலமைப்புச் சட்டம்தான் வலியுறுத்தியிருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். இனிமேலாவது நாம் கலந்து கொள்ளும் எந்த ஊர்வலத்திலும் பொதுமக்களுக்கு இடையூறாக இல்லாமல் இருந்தால் மட்டுமே பங்கேற்பது என உறுதியேற்போம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024