Monday, June 3, 2019

பாப்பா... எழுந்திரு! பள்ளிகள் இன்று திறப்பு; மாணவர்கள் உற்சாகம்

Updated : ஜூன் 03, 2019 03:38 | Added : ஜூன் 03, 2019 01:21

திருப்பூர்:கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. சீருடை, ஸ்கூல் பேக், எழுது பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க, திருப்பூர் கடை வீதிகளில் நேற்று பெற்றோருடன் குட்டீஸ் குவிந்தனர்.கோடை விடுமுறை முடிந்து, அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்படுகின்றன. 

இந்தக் கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய பணி குறித்து தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு கல்வித்துறை ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. முதல் நாளிலேயே, அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு முதல் பருவப்புத்தகம் வழங்க, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிக்கும் புத்தகங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
காலை இறை வணக்கக் கூட்டம் முடிந்ததும், மாணவருக்கு புத்தகம் வழங்கப்படும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தேவையான நோட்டு, பேனா, பென்சில், பேக் வாங்க கடை வீதிகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வெளியூர் சென்றவர்கள் திருப்பூர் திரும்பியதால், பழைய பஸ் ஸ்டாண்டில் பெற்றோர், குழந்தைகள் சகிதமாக கூட்டத்தை காண முடிந்தது. ரயில்களில் எதிர்பார்த்த கூட்டமில்லை.

குழந்தைகளை கவர்ந்த, மிக்கி மவுஸ், டோரா, சோட்டாபீன், பென்டென், பவர்ரேஞ்சர், மிஸ்டர் பீன் பொம்மைகள் அச்சிட்ட ஸ்கூல் பேக் கடைகளில் விற்கப்படுகின்றன. இத்தகைய பேக்குகளை சிறுவர்கள் விரும்புவதால், அதிகளவில் விற்பனையாயின. ஸ்கூல் பேக்குகளின் விலை சராசரியாக 450 ரூபாய் முதல் 500 வரை இருந்தது.

பிராண்டட் ஸ்கூல் பேக்குகளின் விலை ஆயிரம் ரூபாயைக் கடந்திருந்தாலும், அவற்றின் விற்பனையும் அதிகரித்திருந்தது. லோக்கல் மற்றும் பிராண்டட் தயாரிப்பு ஷூ விற்பனையும் ஜோராக நடந்தது. கடந்தாண்டை காட்டிலும் 10 சதவீதத்திற்கு மேல் விலை அதிகரித்திருந்தது.சிறுவர்கள் பலர், பள்ளிகளில் தண்ணீர் குடிப்பதையே மறந்துவிடுகின்றனர். தண்ணீர் குடிக்கத் துாண்டும் வகையில் விதவிதமான 'ஹாட் அண்ட் கோல்டு' கார்பன் பாட்டில், 'ஐஸ் கியூப்' பாட்டில்கள் போன்றவை விற்பனைக்கு வந்தன.

இவற்றை வாங்கவும் கூட்டம் அலைமோதியது. பேனா, பென்சில், ரப்பர், நோட்டுகள் உட்பட எழுதுபொருட்களின் விற்பனையும் களைகட்டியது. வண்ண வண்ண லஞ்ச் பாக்ஸ்கள், குழந்தைகள் கவனத்தை ஈர்த்தன.அதேசமயம், தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சீருடை துணி மற்றும் ரெடிமேடாக விற்கப்படும் சீருடைகளை வாங்க புதுமார்க்ெகட் வீதி, திருப்பூர் பெரிய கடை வீதியில் உள்ள ஜவுளிக் கடைகளில் கூட்டம் குவிந்தது.

அரசு பள்ளி மாணவர்களுக்காக, ஜவுளிக்கடையில் விற்கப்பட்ட சீருடைகளை வாங்கவும் ஏராளமானோர் ஆர்வம் காட்டினர்.முதன்மை கல்வி அலுவலர் சாந்தி கூறுகையில், 'கல்வியாண்டு துவக்கத்தில் ஒவ்வொரு தலைமை ஆசிரியர், ஆசிரியர் பின்பற்ற வேண்டிய நடவடிக்கை, வழிமுறை குறித்து விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

அதனை தவறாமல் பின்பற்ற வேண்டும். மாணவர்கள் துவக்கம் முதலே படிப்பின் மீது கவனம் செலுத்த வேண்டும்.படிப்பை காட்டிலும் ஒழுக்கமுடையவராக ஒவ்வொரு மாணவரும், மாணவியரும் உருவாக வேண்டும். தனிநபர், பள்ளி பெயரை காப்பதில் ஒவ்வொருவரும் அக்கறையுடன் இருக்க வேண்டும்,' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024