Thursday, December 19, 2019

களைகட்டுகிறது கறி விருந்து: ஆணையத்திற்கு அடுத்த நெருக்கடி

Added : டிச 19, 2019 00:17

சென்னை :உள்ளாட்சி பதவிகள் ஏலம் போனதாக எழுந்த புகார்களை தொடர்ந்து கறி விருந்துகள் களைகட்ட துவங்கியதால் மாநில தேர்தல் ஆணையத்திற்கு அடுத்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு டிச., 27 மற்றும் 30ல் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் தஞ்சாவூர், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்டமாவட்டங்களில் பல இடங்களில் உள்ளாட்சி பதவிகள் பல லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளன.

பதவிக்காக கிராமத்தில் கோவில் கட்டுதல் உள்ளிட்ட வாக்குறுதிகளும் தரப்பட்டுள்ளன.இது மாநில தேர்தல் ஆணையத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள். அதன்பின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டோர் விபரங்களும் வெளியிடப்படும். அதன் பின்னரே எந்தெந்த உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்பட்டன என்ற உறுதியான தகவல்கள் கிடைக்கும்.இதற்காக மாநில தேர்தல் ஆணைய பார்வையாளர்கள் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் வாக்காளர்களை கவனிக்க கறி விருந்துகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.

பண்ணை வீடுகள், தோட்டங்கள், அரிசி ஆலைகள் உள்ளிட்ட இடங்களில் விருந்துகள் களைகட்டுகின்றன; மது சப்ளையும் உண்டு.திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த பிரியாணி விருந்து நேற்று சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.இதுபோன்று நடக்கும் கறி விருந்துகள் மாநில தேர்தல் ஆணையத்திற்கு அடுத்த நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து விருந்து உபசரிப்புகளை கட்டுப்படுத்துவது குறித்து கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.க்களுடன் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி மற்றும் செயலர் சுப்பிரமணியன் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்.இதில் தேர்தல் பிரிவு டி.ஜி.பி. சேஷசாயி, எஸ்.பி. கண்ணம்மாள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024