கோயம்பேடு – ஆலந்தூர் இடையே முதலாவது மெட்ரோ ரயில் போக்குவரத்தைத் தொடங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன. ஆனால், தமிழக அரசியல் மாற்றங்களால் திட்டமிட்டபடி தைப் பொங்கல் நாளில் போக்குவரத்தை தொடங்க முடியுமா என்று அதிகாரிகள் கவலையில் உள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைச் சமாளிப்பதற்காக ரூ.14,600 கோடியில் மெட்ரோ ரயில்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக இரு வழித்தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் பாதை மற்றும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக கோயம்பேடு – ஆலந்தூர் இடையே 10 கி.மீ. நீள பறக்கும் பாதையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை தைப் பொங்கல் நாளில் தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் ஏறக்குறைய நடந்து முடிந்துவிட்டன.
அதிநவீன சிக்னல்
மெட்ரோ ரயில் பாதையில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன சிக்னல் செயல்பாடு குறித்து ‘சீமென்ஸ்’ நிறுவனம் ஆய்வுசெய்து, ‘இண்டிபென்டன்ட் சேப்டி அசெஸர்’ சான்று அளிக்க வேண்டும். அதைத்தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர், மெட்ரோ ரயிலை வேகமாக இயக்கி இறுதிக்கட்ட ஆய்வு மேற்கொண்டு அனுமதிச் சான்று அளிப்பார். இந்த 2 பணிகளும் டிசம்பர் மாதத்துக்குள் முடிந்துவிடும்.
ஆனால், தற்போது தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் திட்டமிட்டபடி தைப் பொங்கல் நாளில் முதலாவது மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்க முடியுமா என்று அதிகாரிகள் கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோயம்பேடு – ஆலந்தூர் இடையே உலகத் தரத்தில் ரயில் தண்டவாளம், 7 ரயில் நிலையங்கள், 10 மெட்ரோ ரயில்கள், கோயம்பேட்டில் பணிமனை மற்றும் கட்டுப்பாட்டு அறை என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. சோதனை ஓட்டமும் நடந்து கொண்டிருக்கிறது.
7 ரயில் நிலையங்கள்
கோயம்பேடு, சென்னை புறநகர் பேருந்து நிலையம் (சி.எம்.பி.டி.)., அரும்பாக்கம், வடபழனி, கே.கே.நகர், சிட்கோ, ஆலந்தூர் ஆகிய 7 ரயில் நிலையங்களில் 98 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் இறுதிக்கட்ட ஆய்வு முடிந்ததும் பறக்கும் ரயில் நிலையங்களில் வர்ணம் தீட்டும் பணி ஒரு வாரத்தில் முடிக்கப்படும்.
மனிதத் தவறை துல்லியமாகக் கண்டறிய ரயில் நிலையம் மற்றும் மெட்ரோ ரயில்களில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காபி ஷாப், ஏடிஎம், புக் ஸ்டால் போன்றவற்றை அவுட்சோர்ஸிங் முறையில் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான பணிகள் நடக்கின்றன.
குறைந்தபட்ச கட்டணம் ரூ.10
சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டண விவரம் குறித்து,மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்ட அறிக்கைக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டது. அதை தமிழக அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளோம். குறைந்தபட்ச கட்டணம் ரூ.10ஆகவும் ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் ரூ.5 வீதம் கூடுதலாக கட்டணம்வசூலிக்கப்படும். இக்கட்டணத்தை தமிழக அரசு அப்படியே அறிவிக்கலாம் அல்லது குறைக்கலாம்.
மெட்ரோ ரயில் நிலையம் ஒவ்வொன்றும் ரூ.100 கோடியில் அமைக்கப்பட்டுள்ளன. 2 அடுக்குகொண்ட ஆலந்தூர் ரயில் நிலையம் மட்டும் ரூ.200 கோடி செலவில் அமைந்துள்ளது. கோயம்பேடு – ஆலந்தூர் இடையேயான மெட்ரோ ரயில் பணிகளுக்கு மட்டும் ரூ.4 ஆயிரம் கோடி செலவாகியுள்ளது.
கட்டமைப்புகள் வீணாகும்
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களால் முதலாவது மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்படுமோ என்று கவலையாக உள்ளது. குறித்த காலத்தில்போக்குவரத்தை தொடங்காவிட்டால், ரூ.4 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் கட்டமைப்புகள் பொலிவிழந்துவீணாகும். அதைத் தடுக்க வேண்டுமானால் குறிப்பிட்ட காலத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment