''சின்ன வயசுல வீட்டுல சேட்டை பண்ணினா, 'அடுத்த வருஷம் ஹாஸ்டல்ல சேர்த்து விட்டிருவேன்’னு மிரட்டியிருக்காங்க. ஆனா, இங்க வந்ததுக்கு அப்புறம்தான் தெரியுது, ஹாஸ்டல் ஒரு சொர்க்கம்னு!''
- சென்னை, அண்ணா பல்கலைகழகம் மற்றும் ராமச்சந்திரா நிகர்நிலை பல்கலைகழக ஹாஸ்டல் கேர்ள்ஸோட கோரஸ் இது. 'அப்படி என்ன இருக்கு ஹாஸ்டல்ல?’னு கேட்டா, ''என்ன இல்ல சொல்லுங்க?!''னு வரிந்துகட்டி வந்த கேர்ள்ஸ், வாரிக் கொட்டின தங்களோட ஹாஸ்டல் ஆனந்த விஷயங்கள் இதோ!
''நல்ல தூக்கம் வேணுமா? போதும் போதும்னு சொல்ற அளவுக்கு வீட்டுல மரியாதை வேணுமா? வாழ்க்கையை ஃப்ரெண்ட்ஸ்கூட அன்லிமிட்டடா என்ஜாய் பண்ணணுமா? அத்தனையும் கிடைக்கும் ஒரே இடம், காலேஜ் ஹாஸ்டல்!'' - இப்படி அசத்தல் விளம்பர குரல்ல ஆரம்பிச்சாங்க ரூம் மேட்ஸ் கோமதி, ரம்யா மற்றும் காவ்யா.
''ஹாஸ்டல்ல இருந்து அவுட்டிங் போய் பாத்திருக்கியா? அதுக்காக பொய் சொல்லி மாட்டி, வார்டன்கிட்ட மொக்க வாங்கியிருக்கியா? காசே கொடுக்காம ஓசியில ஸ்நாக்ஸ் வாங்கி சாப்பிட்டிருக்கியா? ஒவ்வொரு வீட்டு ஸ்நாக்ஸும் ஒன்றரை கிலோ வெயிட்டும்மா!'' என்று 'சிங்கம்’ சூர்யா ஸ்டைலில் கோரஸியவர்கள்,
''வீட்டுல இருந்தா சனி, ஞாயிறுகூட நிம்மதியா தூங்க விடாம காலையிலே எழுப்பி கழுத்தறுப்பாங்க. இங்க நாம நினைக்கிற நேரம்தான் சூரியன் வரும். புது படம் எதையும்விட மாட்டோம். அதுவும் நைட் டைம்ல லைட்ஸை எல்லாம் ஆஃப் பண்ணிட்டு, மொக்க பேய் படத்துக்குக் கூட ஃப்ரெண்ட்ஸ கட்டிப்புடிச்சி கத்தி, மத்த ரூம்ல இருக்கிறவங்க தூக்கத்தையும் சேர்த்துக் கெடுக்கறப்போ வர்ற சந்தோஷம் இருக்கே... சான்ஸே இல்ல!''னு ரசிச்சு சொல்றாங்க கேர்ள்ஸ்.
ஒசூரிலிருந்து வந்திருக்கும் ஐஸ்வர்யா, ''இங்க வர்ற வரைக்கும் புதுசா யார்கிட்டயும் பேச, பழக ரொம்பத் தயங்குவேன். இப்போ எல்லாமே மாறிப்போச்சு. சேட்டிங், ஷேரிங், ஃபைட்டிங்... இது மூணையும் எனக்குக் கத்துக் கொடுத்த குருஜி இவங்கதான்!''னு கல்பனாவையும், சுமாவையும் கையைக் காட்ட, ''இவள இவங்க வீட்ல வெயிலுக்கே காட்டாம வளத்துட்டாங்களாம். முதல் முறை இந்த குலவிளக்கை அவுட்டிங் அழைச்சிட்டுப் போக நாங்க பட்ட பாடு இருக்கே... ஐயையோ!''னு சிரிக்கிறாங்க சுமா.
''ரூம் மேட்ஸ்குள்ள சண்டை வராம இருக்க ஃபாலோ பண்ண வேண்டிய முக்கியமான ரூல்ஸ் மூணு இருக்கு. மத்தவங்க போன் பேசிட்டு இருக்கும்போது அவங்களோட பெர்சனல் விஷயத்தை ஒட்டுக் கேட்கக் கூடாது, மத்தவங்க மொபைலை எடுத்து மெசேஜ் பார்க்கக் கூடாது, 'நம்ம ஸ்நாக்ஸ் நமக்கு மட்டும்தான் சொந்தம்' என்ற சாத்தான் எண்ணம் மட்டும் மனசுக்குள்ள வந்துடவே கூடாது!''னு கண் சிமிட்டிறாங்க இந்து!
''எட்டரை மணி கிளாஸுக்கு, எட்டு இருபதுக்கு பெட்ல இருந்து எழுந்தாகூட, அட்டெண்டன்ஸ் போட்டுடலாம் என்பது ஹாஸ்டலோட வரப்பிரசாதம்!''னு ஆரம்பிச்சாங்க ட்வின்ஸான சாய் சகோதரிகள். ''நாங்க ட்வின்ஸ் என்பதால, ஸ்கூல் டேஸ்ல எனக்கு அவ, அவளுக்கு நான்னு இருப்போம். இங்க வந்ததுக்கு அப்புறம்தான் எங்களைத் தாண்டி எவ்ளோ உலகம் இருக்குனு புரிஞ்சது. ஃப்ரெண்ட்ஸ், நைட் 12 மணிக்கு பர்த்டே பார்ட்டி, அவுட்டிங், அரட்டைனு இங்க ஒன்லி ஜாலி அலவ்டு. அப்பா அம்மா நம்மை எவ்வளவு லவ் பண்றாங்கனு இங்க வந்ததுக்கு அப்புறம்தான் அதிகமா உணர்வோம்!''னு பேசின சாய் சௌத்ரியை இடைமறித்த சாய் சநிஹித்தா, ''வீட்ல இருந்து படிக்கிறப்ப எதாவது சந்தேகம்னா ஒண்ணு தலையை பிய்ச்சுக்கிடணும், இல்ல ஃப்ரெண்டுக்கு போன் போடணும். ஆனா, இங்க அந்த தொல்லை இல்ல. ஏன்னா, குரூப் ஸ்டடில ஈஸியா படிக்கவும், சந்தேகம் தீர்த்துக்கவும் முடியுது. யார் யாருக்கு, என்னென்ன டேலன்ட் இருக்குனு ஹாஸ்டல் வந்த பிறகுதான் தெரியுது’ என்று சென்டிமென்ட்டாக பேசினார்.
''காலேஜ்ல ஏதாவது காம்படிஷன்னு வந்தா, 'நீ இதுக்கு பெயர் கொடு’, 'ஏய் உனக்கு இது வரும்ப்பா... கலந்துக்க’னு எல்லோரும் எல்லோரையும் மோட்டிவேட் பண்ற அழகிருக்கே! எல்லாத்தையும்விட டீம் ஸ்பிரிட் என்பதை இந்த ஹாஸ்டல் லைஃப் எல்லார் மனதிலும் லைஃப் டைம் வேலிடிட்டியோட ரீசார்ஜ் பண்ணி விட்டுடும்!''னு சென்டிமென்ட்டா முடிச்சாங்க சன்னி!
....
No comments:
Post a Comment