Sunday, October 19, 2014

பிளஸ் 2 படிக்காமல் நுழைவு தேர்வு மூலம் பட்டப்படிப்பு : தமிழ் புலவர்களுக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவு



சென்னை : 'பிளஸ் 2 படிக்காமல், நுழைவுத் தேர்வு மூலம் தொலைதூர கல்வியில் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு, பதவி உயர்வு வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

உயர்நிலைப் பள்ளிகளில், தருமன், உமா, சுகுணா உள்ளிட்ட, ஆறு பேர், ஓவிய ஆசிரியர்களாக, 1985 முதல் 1987 வரையிலான கால கட்டத்தில், நியமிக்கப்பட்டனர். இவர்கள், 10ம் வகுப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்துள்ளனர்.

மனு தாக்கல் : சென்னை பல்கலைகழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய நுழைவு தேர்வை எழுதி, தொலைதூர கல்வி மூலம், பி.லிட்., படிப்பில் சேர்ந்து, பட்டம் பெற்றனர். அதைத்தொடர்ந்து, தமிழ் பண்டிட் பயிற்சியை சிலரும், பி.எட்., பட்டத்தை சிலரும் பெற்றனர்.

தமிழ் பண்டிட் பதவிக்கான, தகுதி பட்டியலை, பள்ளி கல்விக்கான இணை இயக்குனர், கடந்த ஆண்டு, ஜனவரியில் வெளியிட்டார். அதில், 131, பெயர்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால், தருமன் உள்ளிட்ட ஆறு பேர், இடம் பெறவில்லை.

அதற்கு, 'பட்டப் படிப்பில் சேர்வதற்கு முன், பிளஸ் 2 முடித்திருக்கவில்லை' என, காரணம் கூறப்பட்டது. இதையடுத்து, பதவி உயர்வு பட்டியலை ரத்து செய்யவும், தமிழ் பண்டிட் ஆக, பதிவு உயர்வு வழங்கவும் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், தருமன் உள்ளிட்ட, ஆறு பேரும், மனுத்தாக்கல் செய்தனர்.

மனுவில், 'பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி.,) விதிகளின்படி, நாங்கள் பெற்ற பட்டங்கள் செல்லும்; யு.ஜி.சி., விதிகளில், ஒருவர் பிளஸ் 2 படிக்கவில்லை என்றாலும் கூட, பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று, பட்டப் படிப்பில் சேரலாம் என, கூறப்பட்டுள்ளது. எனவே, பதவி உயர்வு பெற, எங்களுக்கு தகுதி உள்ளது' என, கூறப்பட்டது.

மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் ஆர். சசீதரன், கல்வித் துறை சார்பில், கூடுதல் அரசு பிளீடர் ரவிச்சந்திரன், சென்னை பல்கலை சார்பில், வழக்கறிஞர் திலகவதி ஆஜராகினர்.


மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன், பிறப்பித்த உத்தரவு: யு.ஜி.சி., விதிமுறைகளின்படி, திறந்தவெளி பல்கலை முறையில், முதுகலை படிப்பில் சேர வேண்டும் என்றால், பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். அண்ணாமலை பல்கலைக்கழக வழக்கில், 'யு.ஜி.சி., விதிமுறைகளுக்கு முரணாக, முதுகலை பட்டம் பெற்றால், அது செல்லாது' என, உச்ச

நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.

பட்டப் படிப்பில் சேர்வதைப் பொறுத்தவரை, யு.ஜி.சி., விதிமுறைகளின்படி, பிளஸ் 2 முடித்தவர்கள் அல்லது கல்வி பின்னணி இல்லாதவர்களும், சேரலாம். ஆனால், கல்வி பின்னணி இல்லாதவர்களைப் பொறுத்தவரை, பட்டப் படிப்பில் சேர்வதற்கு முன், அந்த பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தவரை, மனுதாரர்கள், பிளஸ் 2 படிக்காமல், தொலைதூர கல்வி மூலம், பட்ட படிப்பு முடித்துள்ளனர். ஆனால், இவர்கள், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று, பட்டப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

சிறப்பு விதிகள் : இவர்கள் பெற்ற பட்டம் செல்லும் என, பல்கலைக்கழகங்களும் தெரிவித்துள்ளன. எனவே, யு.ஜி.சி., விதிமுறைகள், தமிழ்நாடு கல்வி அலுவலர் பணிக்கான சிறப்பு விதிகள், அண்ணாமலை பல்கலை வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஆகியவற்றை பார்க்கும் போது, பதவி உயர்வு பட்டியல், சட்டவிரோதமானது. எனவே, மனுதாரர்களுக்கு தகுதியில்லை என்ற உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. எட்டு வாரங்களுக்குள், மனுதாரர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...