Wednesday, October 22, 2014

"அண்ணே... நான் ‘எலி’ண்ணே!” வனவாச மர்மம் சொல்லும் வடிவேலு

"அண்ணே... நான் ‘எலி’ண்ணே!”
வனவாச மர்மம் சொல்லும் வடிவேலு
ம.கா.செந்தில்குமார், ஜியா உல் ஹக், படங்கள்: எம்.உசேன்
''சரித்திரப் படங்களில் ராசா வேஷம் நிறையப் போட்டாச்சுல்ல... இனிமே வேற ரூட்ல வண்டியை விட வேண்டியதுதான்!'' - கனமழை பெய்து ஓய்ந்த ஒரு மாலை நேரத்தில், 'தனது காட்டில் அடைமழை பொழிய இருக்கிறது’ என முன்னோட்டம் கொடுத்து கபகபவெனச் சிரிக்கிறார் வடிவேலு.
''தெனாலிக்கு அப்புறம் 'எலி’!
நான்தான் அந்த எலி. 'தெனாலிராமன்’ இயக்குநர் யுவராஜ் தம்பிதான் இதுக்கும் டைரக்டர். நல்ல கதைண்ணே. 1970 காலகட்டத்துல நடக்குற கதை. 'தெனாலிராமன்’ல செந்தமிழ்னா, 'எலி’ பழைய நக்கல் தமிழ்ணே. ஒரு ஸ்பை கேரக்டர். இப்ப எலியைப் பார்த்தீங்கன்னா புயல், பூகம்பம், வெள்ளம், வெடி விபத்துனு எந்தச் சூழ்நிலையிலும் தப்பிச்சிடும். ஒரு ஓட்டையை அடைச்சாக்கூட, 'நீயா நானானு பாத்துடலாம்டா’னு அதுவா இன்னொரு ஓட்டையைத் தோண்டி வெளியேறிடும். 'வடிவேலு எலியா நடிக்கப்போறான்’னு புரிஞ்சுக்கப்போறாங்க. கேரக்டர்தான் எலி. நான் பண்ற வேலைகள் எல்லாம் புலி. ஒரு உளவாளி கேரக்டர். சின்ன ஆளுதான், ஆனா பெரிய மேட்டரை கேட்ச் பண்ற மாதிரி கதை!'' என்பவர் சின்ன இடைவெளிவிட்டு சந்தேகத் தொனியில் கேட்கிறார்... ''ஏம்ண்ணே... 70-ல நடக்கிற கதைனு சொன்னா, 'கொஞ்சம் பழசுனு பரப்பிவிட்ருவாய்ங்களோ? ரொம்ப சூதானமாப் பேச வேண்டி இருக்குண்ணே. அப்புறம் முக்கியமா.... இதுல பாலிட்டிக்ஸ் கிடையாது. ஒன்லி ஜாலிட்டிக்ஸ். அதை மறக்காம எழுதிவிட்ருங்க!''
''அப்ப இனி ஹீரோவா மட்டும்தான் நடிப்பீங்களா?''
''ஏண்ணே, பேட்டினு கூப்பிட்டு பொடனியில அடிக்கிறீங்க. அப்படி இல்லண்ணே... நாம எல்லாமும் பண்ணுவோம். ஆனா, ஒரு சின்ன கேப் விட்டு வந்திருக்கோம்ல. வர்றப்ப இப்படிப் பெருசா வந்தோம்னா நல்லா இருக்கும்ல... அதான்!
'எலி’ தவிர இன்னும் நாலு படங்கள் நடிக்கிறேன். அதுல வேற ஒரு ஹீரோவும் இருப்பாங்க. நான் அவங்களோட படம் முழுக்க வருவேன். 'எம்டன் மகன்’ மாதிரினு வெச்சுக்கங்களேன். இப்படிப் பண்ணிட்டு, பிறகு பழையபடி டிராக் பண்ணலாம்னு இருக்கேண்ணே. ஆனா, நாம லேசா ரெஸ்ட் போட்ட சமயம், இங்க காமெடி டிராக் பண்ண ஆளே இல்லை பார்த்தீங்களா? பண்ணா திரும்ப நாமதான் பண்ணணும்!''
''அந்த நாலு படத்துக்கு டைரக்டர் யார், என்ன மாதிரியான கதை?''
''விட்டா ஸ்கிரிப்ட் எல்லாத்தையும் கேட்டு ரெண்டு வாரம் வெச்சிருந்து ஃபுல்லா படிச்சிட்டுத்தான் குடுப்பீங்கபோல! பூரா டைரக்டர்ஸும் புது ஆளுங்க. எல்லாரும் நம்ம ரசிகர்ங்க. நம்மளை மாதிரியே நடிச்சுக் காட்டி, அதுல இருந்து ஏகப்பட்ட விஷயங்களை கேட்ச் பண்றாங்க. ஒண்ணு, ரெண்டு பேர், 'தமிழ் சினிமாவுல உங்களை மனசுல வைச்சுதாண்ணே பல இடங்கள்ல டிஸ்கஷன் போட்டுட்டு, அப்புறம் வேற நடிகர்களைப் போட்டு படம் எடுக்குறாங்க’னு ஆரம்பிப்பாங்க. 'ஏம்பா... அந்தக் கடைக்கு இங்கே வியாபாரம் பண்ற? நம்ம கடை யாவாரத்தை மட்டும் பார்ப்போம்யா’னு ஓப்பனிங்லயே ஒன் வே கேட்டைப் போட்டுருவேன். 'இப்படி ஒரு டபுள் மீனிங் போடுவோம்ணே’னு ஏதாவது சொன்னாக்கூட, 'அது வேணாம் ராசா... அதை வேற ஆளுக்கு வெச்சுக்கங்க. திறந்த வேகத்துல கடையைச் சாத்திட்டுப் போக வெச்சிடாதீங்கய்யா’னு சொல்லிடுவேன்.''
''நடுவுல பெரிய இடைவெளி விழுந்துருச்சில்ல..!''
''என்னண்ணே ஏதோ ஓசோன்ல ஓட்டை விழுந்த மாதிரி சொல்றீங்க. என் நண்பன் ஒருத்தன். கல்யாணத்துக்கு முன்ன இருந்தே பழக்கம். அவனுக்குக் கல்யாணமாகி நாலைஞ்சு வருஷத்துல ரெண்டு குழந்தைங்க பிறந்து, அந்தக் குழந்தைங்களும் இப்போ நம்மளைத் தேடுதுங்க. ஒரு ஊர்ல ஒரு அம்மா புருஷன் திட்டிட்டார்னு கதவைச் சாத்திட்டு தூக்கு மாட்டிக்கப் போயிருக்கு. கதவை ஒடைச்சிட்டு உள்ள போய்ப் பார்த்தா, தூக்குக் கயித்தை இழுத்துப் புடிச்சுட்டு டி.வி-ல நம்ம காமெடியைப் பாத்து கெக்கபிக்கேனு சிரிச்சுக் கிடந்திருக்கு. பிறகு போலீஸ் கேஸாகி, அந்த போலீஸ் அதிகாரி என் நம்பரைப் புடிச்சுப் பேசினார். அந்தம்மாகிட்டயும் போனைக் குடுத்துப் பேசச் சொன்னார். 'புருஷன் திட்டிப்புட்டாருனு கயித்தை மாட்டினேன். டி.வி-யை அமத்த மறந்துட்டேன். அந்த நேரம் உங்க காமெடி ஓடிட்டு இருந்துச்சுண்ணே’னுச்சு. 'அப்படி என்ன காமெடி தாயி பார்த்த?’னு கேட்டேன். அந்த அம்மாவுக்குப் பயங்கர வெக்கமாயிடுச்சு. 'என்ன கையைப் பிடிச்சு இழுத்தியா?’னு சொல்லிட்டுச் சிரிக்க ஆரம்பிச்சிருச்சு. அப்புறம், 'அண்ணே நீங்கதான்ணே என் கடவுள். என்னைக் காப்பாத்துன கடவுள். இல்லைனா நான் செத்து ஏழு மணி நேரம் ஆயிருக்கும்ணே’னு கதறுச்சு. 'உனக்கு நான் கடவுள் இல்லம்மா... காமெடிதான் கடவுள்’னேன். இப்படி நிறையப் பேர் பேசிட்டுத்தாண்ணே இருக்காங்க. அவங்களுக்குலாம் 'தெனாலிராமனுக்கு’ப் பிறகு நிறையப் படங்கள்ல நடிக்கலையே’னு கோபம். டிசம்பர்ல இருந்து பாருங்க... தடதடனு அடிச்சிடுவோம்; கவலைப்படாதீங்க!''
''உங்ககூட ஏற்கெனவே வேலைபார்த்த இயக்குநர்கள், ஹீரோக்கள் படங்கள்ல வொர்க் பண்ணுவீங்கள்ல?''
''அண்ணே, இப்ப படம் பாக்க வர்ற பூரா ஆளுங்களும் விஷயமா இருக்காங்கண்ணே. ஒரு டயலாக் பேசி கேப் விட்டா, தியேட்டர்ல உள்ள வாண்டுங்க, அந்த கேப்புல நாலைஞ்சு பன்ச் போட்டு ஃபில்லப் பண்ணுதுங்க.  'காமெடி சீன் முடிஞ்சிடுச்சுடா. இதுல பத்து சீன்தானாம்டா. முடிஞ்சதும் போலாம்’னு தியேட்டருக்குள்ளேயே போன்ல பேசிட்டு தெறிச்சு ஓடுறானுங்க. 'வடிவேலு காமெடி முடிஞ்சிடுச்சு. வாடா போலாம்’னு நம்ம காமெடிக்கு வந்த ரெஸ்பான்ஸ்தாண்ணே நமக்கு பிளஸ், மைனஸு எல்லாம். 'என்னய்யா இவன் காமெடியைப் பாக்கறதுக்குணே வர்றானுங்க, படத்தைப் பாக்க மாட்டேங்குறானுங்க’னு அதுல நாலு பேருக்கு என் மேல கோபம் வரும் இல்லையா? 'இவன் இல்லாம இருந்தா எப்படி இருக்கும்? அதுக்கு முயற்சி பண்ணுவோம்டா’னு கூட்டம் கூட்டமா நிறைய மீட்டிங்லாம் நடந்துச்சு. அந்த மீட்டிங்குக்கு என்னை மட்டும்தாண்ணே கூப்பிடலை. ஊர்ல உலகத்துல மத்த எல்லாரையும் கூப்பிட்டிருக்காங்க. நல்லா இருந்துட்டுப் போவட்டும்ணே. நாம டிராக் மாறுறோம்னு நினைக்கிறேன். நீங்க அடுத்த கேள்வியைக் கேளுங்க!''
''ஆனா, நீங்க நடிக்காத இடைவெளியே தெரியாத அளவுக்கு, இன்னும் டி.வி-க்கள்ல உங்க காமெடிகள்தான் களைகட்டுது. அந்த பன்ச் எல்லாம் எங்கே எப்படிப் புடிச்சீங்க?''
''இதைத்தான் ஒரு ட்ரிப்பு இளையராஜா அண்ணே இப்படிச் சொன்னார், 'நீ காமெடி பண்றது பெருசு இல்லடா... தரையில நடக்கிறதை அப்படியே திரையில கொண்டு வந்து வைக்கிற பாரு... அதுதான்டா பெரிய விஷயம்’. யோசிச்சா, அதுதாம்ணே  ரொம்பக் கஷ்டம்.  ரூம் போட்டு யோசிச்சாலும் அதுலாம் வராதுண்ணே. கார்ல போகும்போது வரும்போது அப் அண்டு டவுண் அவ்வஞ்சு சீன் புடுச்சிடுவேன்.''
'' 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ இரண்டாம் பாகம் வர்றதா சொன்னாங்களே... என்னாச்சு?''
''ஹிஸ்ட்ரிக்கு எல்லாம் கொஞ்ச நாள் லீவு விட்டாச்சுண்ணே! ஏன்னா, அதை சினிமாவா பண்ணிக் கொண்டுபோய் சேர்க்குறது பெரும்பாடா இருக்கு. ரொம்ப சின்ன சங்கடம் சொல்றேனே... தமிழ்ல பேசுறதுகூட கஷ்டமா இருக்கு கூட நடிக்கிறவங்களுக்கு! 'அரசே’னு சொல்லச் சொன்னா, 'அர்சே’ங்றார் ஒருத்தர். இன்னொருத்தர் 'மன்னா’வை 'இன்னா’னு சொல்றார். மனோபாலா, 'உனக்கு நாங்க என்னடா துரோகம் பண்ணோம். வேற கதையே கிடைக்கலையா?’னு நொந்துக்குவார்!''
''இப்ப உள்ள காமெடிகளை ரசிக்கிறீங்களா?''
''நீங்களே சொல்லுங்கண்ணே... இந்தக் கேள்விக்கு என்னண்ணே பதில் சொல்லலாம்? நாம யாரையும் குறை சொல்லலை. அது ஒரு ஸ்டைல்ல பண்றாங்க. ஒண்ணு, ரெண்டு பார்ப்பேன். ஒரு மாதிரி அப்படியே டல்லாயிடுவேன். எல்லாம் அங்ஙனக்குள்ள சிரிச்சிட்டுப் போற காமெடியா இருக்குண்ணே. அதுக்காக மத்தவங்களைக் குறை சொல்ற அளவுக்கு நாம பெரிய ஆளு இல்லை. அதை மறக்காம எழுதிப்புடுங்க. காமெடியன் முக்கியம் கிடையாதுண்ணே... காமெடிதான் பெருசு. நல்ல காமெடியா இருந்தா, யாரோட காமெடியா இருந்தாலும் ரசிக்கத்தானே போறோம். 'என்னய்யா அந்தப் படம் எப்படி இருக்கு. தியேட்டர்ல சிரிக்கிறாங்களா?’னு நண்பர்ட்ட கேட்டேன். 'திரையில் நடிக்கிறவங்க மட்டும் சிரிச்சுக்கிறாங்கண்ணே.. தியேட்டர்ல ஆளுங்கள்லாம் வெறிக்கிறாங்க’ன்னார். அப்ப அவர் காமெடியா ஒரு வார்த்தை சொன்னாரே, 'எங்கம்மா சத்தியமா சொல்றேண்ணே, நீங்க இப்படியே ஒதுங்கியிருந்தா உங்க வீட்டுக்கு முன்னாடி வந்து போராட்டம் நடத்த வேண்டி வரும். சீக்கிரம் நடிங்கண்ணே’னார். நான் சிரிச்சுட்டேன்!''
''ஊருக்கெல்லாம் போறீங்களா? அம்மா என்ன சொல்றாங்க?''
''ஒவ்வொரு முறை போறப்பவும் அம்மாவையும் குலசாமி அய்யனாரையும் கும்பிட்டுட்டு பெத்தது, பொறந்ததுனு பழகிட்டுதான் வர்றது. அம்மாவுக்கு வயசாச்சுல்ல, அப்பப்ப போய் செல்லுக்கு சார்ஜ் ஏத்துற மாதிரி பார்த்துட்டு வந்துடுவேன். எத்தனையோ முறை கூப்பிட்டுட்டேன். இங்க வர மாட்டேன்னுது. வம்பா அழைச்சிட்டு வந்தா, இங்கே அதுக்கு மொத எதிரி வாட்ச்மேன்தாண்ணே. 'கதவைத் திறக்க மாட்டேங்குறான்’னு புகார். அவன் கேட்டைப் பூட்டிட்டு, 'இந்தக் கோட்டைத் தாண்டி நானும் வர மாட்டேன்... நீயும் போகக் கூடாது’ங்கிற மாதிரியே அம்மாவைப் பாக்கிறான். இது அவனை முறைக்குது. அவன் பாவம்... நேபாளி!''
''ஊருக்குள்ள எங்கேயும் போனீங்களா... யாரையும் பார்த்தீங்களா... ஏதாச்சும் பேசுனீங்களா?''
''நான் எங்கயுமே போறதில்லைண்ணே. எந்த ஃபங்ஷனுக்கும் போறது இல்லை. எங்கேயாச்சும் என்னையைப் பார்த்திருக்கீங்களா? வீடு விட்டா ஆபீஸ், ஆபீஸ் விட்டா வீடு. அம்மாவைப் பார்க்க மதுரைக்குப் போவேன். அப்புறம் டிஸ்கஷன். நாம எங்கேயாவது சும்மா போய் நிப்போம். கரெக்ட்டா வாய்க்குள்ள மைக்கைத் திணிச்சு, 'என்ன நினைக்கிறீங்க?’ம்பாங்க. எதைப் பத்தி, என்ன ஏதுனு புரியாம, நமக்கு அப்படியே பீதியா இருக்கும். கூட்டங்கூட்டமா கேமரா, கோன் ஐஸ் மைக்குகளைப் பாத்தாலே... நான் ரூட்டை மாத்தித் திரும்பிருவேன்!''
''ரஜினிகூட நீங்க அதகளம் பண்ண 'சந்திரமுகி’ சூப்பர் டூப்பர் ஹிட். ஆனா, 'லிங்கா’வுல நடிக்கக் கூப்பிட்டும் நீங்க மறுத்துட்டதா சொல்றாங்களே... உண்மையா?''
''ரஜினியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவருக்கு என்னைப் பிடிக்கும்ணே. அது ரெண்டு பேருக்குமே தெரியும்ணே. மத்தபடி அந்தப் படத்துல நான் இல்லண்ணே... அவ்வளவுதான்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024