Monday, October 27, 2014

மழையை விரட்டும் மாயக்குடை




ஒரு வாரமாக மழை கொட்டித் தீர்க்கிறது. மழையில் நனையாமல் இருக்க குடை, ஷவர் கேப், ரெயின் கோட்டு என எடுத்துக்கொண்டு வெளியே கிளம்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. ரெயின் கோட் போட்டால் பார்க்கவே பயங்கரமாக இருக்கும். குடை பிடித்தபடி இரு சக்கர வாகனங்களை ஓட்ட முடியாது. நடந்து சென்றால்கூடப் பேருந்து ஏறி இறங்கும்போது குடையை விரித்து, மடக்குவதற்குள் நனைந்துவிடுவோம். இவை எல்லாவற்றிற்கும் ஓர் எளிய தீர்வைக் கண்டுபிடித்திருக்கிறது சீனாவைச் சேர்ந்த ஓர் இளைஞர் குழு.
சீனாவில் இருக்கும் நான்ஜிங்க் பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஆஸ்ட்ரோநாட்டிக்ஸ் பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர்கள் புரட்சிகரமான ஒரு குடையை உருவாக்கியுள்ளார்கள். குடையின் முக்கிய பாகம் என்ன? அரை வட்டத்தில் ஒரு விரிப்பு போன்ற வடிவம் தானே! இவர்கள் கண்டுபிடித்திருக்கும் குடைக்கு விரிப்பே கிடையாது. அட குடையே இல்லாத குடையா? எப்படி? இது ‘காற்றுக் குடை’. அதி வேகமாக வீசப்படும் காற்றின் மூலம் மழைத் துளிகள் நம் உடல் மேல் விழாமல் சிதறியடிக்கும் நவீனத் தொழில்நுட்பம் கொண்ட குடை.
மைக் போன்ற காற்றுக் குடை
பிளாஸ்டிக் மைக் போல் காட்சியளிக்கிறது இந்தக் காற்றுக் குடை. இதன் உட்புறத்தில் ஒரு மோட்டார், மற்றும் லித்தியம் பாட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. வெளிப்புறத்தில் ஒரு பட்டன் இணைக்கப்பட்டுள்ளது. பட்டனை அழுத்தியதும், மோட்டார் சுற்றுப்புறக் காற்றை உள்ளிழுத்து பின்பு அதி வேகமாக அதே காற்றை உந்தித்
தள்ளும். அப்போது வெளியே வரும் காற்று கிட்டத்தட்ட 1 மீட்டர் நீளம்வரை மழை நீரைச் சிதறியடிக்கும். இதை நீங்கள் கையில் பிடித்துக்கொண்டு சென்றால் ஏதோ மாயாஜால வித்தை புரிவது
போல பார்ப்பவர்கள் ஆச்சரியப் படுவார்கள். ஒரு சமயத்தில் இருவர் இந்தக் குடையைப் பிடித்தபடி நனையாமல் பயணிக்கலாம். “எல்லா இடங்களிலும் இருப்பது காற்று. காற்றின் வேகம் கூடக் கூட அதிக ஆற்றல் உருவாகும். பொருள்களின் பாதையைக்கூடக் காற்றால் மாற்ற முடியும். நாங்கள் காற்று வீசும் விதத்தைப் பயன்படுத்திக்கொண்டோம் அவ்வளவுதான்” என்கின்றனர் காற்று குடையை உருவாக்கிய இளம் பொறியாளர்கள்.
கிக்ஸ்டார்ட் ஆன கிக்ஸ்டார்ட்டர்
காற்றுக் குடையைப் பெரிய அளவில் தயாரிப்பதற்காக கிக்ஸ்டாட்டர் கேம்பெய்ன் (Kickstarter Campaign) என்ற அமைப்பை நிறுவி நிதி திரட்டி வருகிறது இந்தக் குழு. இவர்களை ஊக்குவிக்கும் வகையில் இதுவரை 3 கோடியே 68 லட்சம் ரூபாய் உலகின் பல்வேறு முனைகளிலிருந்து வந்து குவிந்துள்ளது.
ஆனால், இந்தக் காற்றுக் குடையில் ஒரு சிக்கல் இருக்கிறதாம். நம்ம தமிழ் பேய்ப் படங்களில் ஹீரோவைப் பேயிடமிருந்து காப்பாற்ற ஒரு அமானுஷ்யமான சாமியார் மந்திரிக்கப்பட்ட தாயத்தை ஹீரோ கையில் கட்டிவிடுவார். ஆரம்பத்தில் தாயத்து இருக்கும் தைரியத்தில் ஹீரோ பேயை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்குவார். ஆனால் கொஞ்ச நேரத்துல தாயத்தோட பவர் ஃபியூஸ் போயிடும். அது போல, காற்றுக் குடையில் 30 நிமிடங்கள்தான் பாட்டரி சார்ஜ் நிற்கும். நல்ல மழை கொட்டும்போது காற்றுக் குடையை ஸ்டைலாகத் தலை மேலே தூக்கிப் பிடித்துக்கொண்டு கிளம்பினால் ரிஸ்க் இருக்கு. அரை மணி நேரத்திற்குள் அந்த இடத்தைச் சென்றடையவில்லை என்றால் 30 நிமிடங்கள் கடந்த அடுத்த நொடியில் குடையில் இருந்து காற்று அடிப்பது நின்றுவிடும். அவ்வளவுதான் தொப்பலாக நனைந்துவிடுவோம்.
ஆனால் கேலி செய்வதற்கில்லை. இந்தத் துடிப்பான இளைஞர் படையினர் காற்றுக் குடையின் தோற்ற அழகு, பயன்பாட்டுத் திறன், பாட்டரி வாழ் நாள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த தொடர்ந்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இப்போது ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் இவர்களுடைய ஆராய்ச்சி 2015-ல் முடியுமாம். “மேம்படுத்தப்பட்ட காற்றுக் குடையை உலகச் சந்தைக்கு 2015 டிசம்பரில் அறிமுகம் செய்வோம். அப்போது அனைவரும் விரும்பிப் பயன்படுத்தும் குடையாக இது இருக்கும்” எனத் தன்னம்பிக்கையோடு கூறுகிறார்கள் கிக்ஸ்டார்ட்டர் இளைஞர்கள்.
‘காற்றுக் குடை’ பற்றிய சுவாரஸ்யமான வீடியோ மற்றும் தகவல் அறிய:https://www.kickstarter.com/projects/1243275397/air-umbrella

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024