Friday, October 31, 2014

ஒரு முதல்வரின் மனைவி பணியில் இருக்கும் சிறப்பு வேறு எவருக்கும் கிடைக்காத ஒன்று



மகாராஷ்டிரா முதல்வராக இன்று பதவியேற்கும் பாஜவின் தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா, தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். ஒரு முதல்வரின் மனைவி பணியில் இருக்கும் சிறப்பு வேறு எவருக்கும் கிடைக்காத ஒன்று. நாக்பூரில் உள்ள அந்த தனியார் வங்கியின் கிளையில் இணை துணைத் தலைவராகப் பணியாற்றுகிறார் அம்ருதா. பட்னாவிஸ் முதல்வராகப் பொறுப்பேற்பதால், தலைநகர் மும்பைக்கு இடமாற்றம் கோரியுள்ளார். நாக்பூரைச் சேர்ந்த டாக்டர் தம்பதியின் மகளான அம்ருதாவுக்கும், பட்னாவிசுக்கும் கடந்த 2006ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு திவிஜா என்ற 5 வயது பெண் குழந்தை உள்ளார். நாக்பூரில் உள்ள பள்ளியில் கே.ஜி. படித்து வருகிறார். திருமணத்தின்போதும் வங்கியில் பணிபுரிந்த அம்ருதா, அதைத் தொடர்கிறார். தனது கணவர் முதல்வராகப் பொறுப்பேற்பதால், பணியில் இருந்து விலகப் போவதில்லை என்று கூறியுள்ள அவர், மும்பைக்கு இடம் மாறுதல் கோரியுள்ளார். இன்று நடைபெறும் பதவியேற்பு விழாவுக்காக விடுமுறையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து அம்ருதா கூறியதாவது: பட்னாவிஸ் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தோம்.

பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். அவர் முதல்வராகப் பொறுப்பேற்பதால் மும்பைக்கு செல்ல வேண்டும். எனது வேலையை விட்டுவிடும் எண்ணம் எதுவுமில்லை. பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். குழந்தை தற்போது படித்து வருவதால், மும்பைக்கு இடம்பெயர்வது குறித்து கணவருடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்றார். இதனிடையில் பேத்தி திவிஜாவுக்காக மும்பைக்கு செல்லவிருப்பதாக பட்னாவிசின் தாயார் சரிதா கூறியுள்ளார். திவிஜாவுக்கு எப்போதும் வீட்டில் யாராவது இருக்க வேண்டும். மும்பையில் முதல்வருக்கான அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷா, மிகவும் பெரிய இடம். அதனால் திவிஜா தனிமையை உணரக் கூடாது என்பதால் நானும் மும்பை செல்ல உள்ளேன் என்றார் சரிதா.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024