Wednesday, October 22, 2014

இந்தியாவில் மட்டுமல்ல, பிரிட்டனுக்கு வெளியே உள்ள காமன்வெல்த் நாடுகள் அனைத்தையுமே எடுத்துக்கொண்டாலும், மிகவும் பழைமையான நகராட்சி அமைப்பு நமது சென்னை மாநகராட்சிதான்.

இரண்டு நாள் மழையில் சென்னை நீரில் மூழ்கி இருந்தால்கூடப் பரவாயில்லை, நாறிவிட்டது. தெருக்களில் மழைத் தண்ணீர் மட்டும் ஓடவில்லை. சாக்கடை நீர் கலந்தல்லவா ஓடியது. இதன் விளைவாக என்னென்ன தொற்று நோய்கள் பரவப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்தியாவில் மட்டுமல்ல, பிரிட்டனுக்கு வெளியே உள்ள காமன்வெல்த் நாடுகள் அனைத்தையுமே எடுத்துக்கொண்டாலும், மிகவும் பழைமையான நகராட்சி அமைப்பு நமது சென்னை மாநகராட்சிதான். 1687 டிசம்பர் 30-ஆம் தேதி இங்கிலாந்தின் இரண்டாம் ஜேம்ஸ் மன்னனின் அரச உத்தரவுப்படி, 1688 செப்டம்பர் 29-ஆம் தேதி தொடங்கப்பட்ட சென்னை நகராட்சிதான் இந்தியாவிலுள்ள ஏனைய நகராட்சிகளுக்கு எல்லாம் முற்பட்டது. இருந்தும் என்ன பயன்? 326 ஆண்டுகளாகியும் இன்னும் சரியாகவும் முறையாகவும் மழைத் தண்ணீரைக்கூட அகற்ற முடியாமல் அல்லவா தவிக்கிறது!
சென்னை நகரத்துக்கான கழிவுநீர் வெளியேற்றும் திட்டம் 1910-இல் உருவாக்கப்பட்டது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையின் மக்கள் தொகை ஏறத்தாழ ஏழு லட்சமாக இருக்கக்கூடும் என்கிற தொலைநோக்குப் பார்வையுடன்தான் கழிவுநீர்க் குழாய்களும், சாக்கடைகளும் ஏற்படுத்தப்பட்டன. மீண்டும் 1958-இல் போடப்பட்ட விரிவாக்கத் திட்டமும் 1976, 1991-ஆம் ஆண்டுகளில் ஏற்படக்கூடிய வளர்ச்சியையும் மனதில் கொண்டுதான் செயல்படுத்தப்பட்டன.
கடலை ஒட்டிய நகரமாக இருப்பதால் கழிவுநீரை அகற்றுவது என்பது நியாயமாகப் பார்த்தால், தமிழகத்திலுள்ள ஏனைய மாநகராட்சிகளைப் போலல்லாமல் சென்னைக்கு இயற்கையாகவே சுலபம். அது மட்டுமல்ல, சென்னையின் நடுநாயகமாக கூவம், அடையாறு என்று இரண்டு ஆறுகள் அமைந்திருப்பது அதைவிட வசதியானது. அப்படி இருந்தும் மழைநீர் அகற்றப்படவும், சாக்கடை நீர் அகற்றப்படவும் முடியாத நிலைமை இருக்கிறது என்றால் அதற்கு நிர்வாகம்தான் பொறுப்பாக இருக்க முடியும்.
கூவம், அடையாறு என இரண்டு ஆறுகள் இருப்பது போதாதென்று சென்னையில் பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி கால்வாய், கேட்பன் காட்டன் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், மாம்பலம் கால்வாய் என 16 கால்வாய்கள் வேறு இருக்கின்றன. சென்னையின் 98 சதவீதப் பகுதிகளில் கழிவுநீர்க் குழாய்களும், சாக்கடைகளும் அமைக்கப்பட்டு, அவை ஏதாவது ஒரு கால்வாயிலோ அல்லது கூவம், அடையாறு ஆற்றிலோ கலப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டிருக்கின்றன.
மழைநீர் வடிகால்களையும், கழிவுநீர் வடிகால்களையும் அமைப்பதற்கும், பராமரிப்பதற்கும் அரசு போதிய நிதி ஒதுக்கீடு வழங்காமல் இல்லை. சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் துறை,
2012 - 13-இல் ரூ.136.05 கோடி, 2013 - 14-இல் ரூ.215 கோடி என்று செலவழித்து, மழைநீர் வடிகால் சிறப்பாகச் செயல்படுவதாக அடிக்கடி கூறி வருகிறது. நடப்பு 2014 - 15-ஆம் ஆண்டும் சரி ரூ.450 கோடி ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. மழைநீர் வடிகால் குழாய்கள் வழியாகத் தண்ணீர் வடிகிறதோ இல்லையோ, ஒதுக்கப்பட்ட மக்கள் வரிப்பணம் வடிந்து விட்டிருக்கிறது என்பதை வெள்ளம் தேங்கிக் கிடக்கும் சாலைகள் வெளிச்சம் போடுகின்றன.
அடுத்தபடியாக, வாரந்தோறும் கூட்டம் போட்டு, நேரடியாக மேற்பார்வையிட்டு, மழைநீர் வடிகால் குழாய்கள் அடைப்பு இல்லாமல் காணப்படுகின்றனவா என்பதை மாநகராட்சி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். சாலைக்கு மேலே இருக்கும் குப்பையை அகற்றுவது எவ்வளவு முக்கியமோ அதேபோல, சாலைக்கு கீழே உள்ள குழாய்களும், சாக்கடைகளும் தூர் வாரப்பட்டு இருப்பதில் மாநகராட்சி நிர்வாகம் முனைப்புக் காட்டுவதில்லை என்பதைத்தான் சமீபத்திய மழை உணர்த்துகிறது.
சென்னையிலுள்ள கால்வாய் ஒன்றுகூட சுத்தமாகத் தூர் வாரப்பட்டதாகக் காணப்படுவதில்லை. தூர் வாரினாலும் உடனடியாக அகற்றப்படுவதில்லை. மாநகராட்சி உறுப்பினர்களுக்கும், சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் பகுதி / தொகுதி மேம்பாட்டு நிதி மழைநீர், கழிவுநீர் கடப்பான்களின் பராமரிப்புக்குச் செலவிடப்பட்டு, கண்காணிக்கப்பட்டாலே போதும், இந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டுவிடும்.
முந்தைய தி.மு.க. ஆட்சியில் சென்னை மாநகராட்சியை விரிவுபடுத்தப் போடப்பட்ட திட்டத்தை, இன்றைய அரசு ஏற்றுக் கொண்டது மிகப்பெரிய தவறு. குப்பைக் கூளங்கள் இல்லாமலும், மழைநீர் வடிகால் குழாய்கள் முறையாகச் செயல்படும் விதத்திலும் தில்லியில் நிர்வாகம் நடத்தப்படுவதற்கு மாநகராட்சி மூன்றாகப் பிரிக்கப்பட்டதுதான் காரணம்.
சென்னை மாநகராட்சியைக் குறைந்தது இரண்டாகப் பிரிப்பதுதான் எல்லாப் பிரச்னைகளுக்கும் நிரந்தரத் தீர்வாக இருக்கும்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024