ஜிகர்தண்டா படத்தின் மெகா வெற்றியில் குஷியாகியிருக்கிறார் லட்சுமி மேனன். தற்போது விஷால் ஜோடியாக மூன்றாவது முறையாக சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். கௌதம் கார்த்திக் ஜோடியாக நடித்திருக்கும் சிப்பாய் படம் விரைவில் வெளியாக இருக்கும் உற்சாகததுடன் நம்மிடம் பேசினார்...
நடிகை லட்சுமி மேனன் இப்போ பாடகி லட்சுமி மேனனாவும் ஆயிட்டீங்க. பாட்டு பாடுவது தொடருமா?
கண்டிப்பா தொடரும். அதில் என்ன சந்தேகம். நான் பாடினதை நம்பவே முடியல. ஒரு நாள் இமான் சார் போன் பண்ணி, ஒரு பாடல் பாட வேண்டியதிருக்கு வர்றீங்களான்னு கேட்டார். என்னது பாட்டுப் பாடணுமான்னு ஆச்சரியமா போனேன். முதல்ல டம்மியா சில வரிகளைப் பாடச் சொன்னார். இயக்குநர் கண்ணன் மற்றும் பாடலாசிரியரை வைத்து வரிகளை எழுதி மறுபடியும் பாடச் சொன்னார். பாடிவிட்டு வெளியே வந்தவுடனே இமான், சூப்பரா பாடியிருக்கீங்க. பாட்டு நல்ல வந்திருக்குன்னு சொன்னார். நாம பாடகியாக ஆயிட்டோம்னு அப்போதான் நம்பினேன். பாடுவதற்கு வாய்ப்பு வந்தால் கண்டிப்பாகப் பாடுவேன்.
பள்ளிக்கும் போறீங்க. படப்பிடிப்புக்கும் தவறாமல் போறீங்க. அந்த ரகசியத்தைச் சொல்லுங்க..
ரகசியம் எல்லாம் ஒண்ணும் இல்லீங்க. கஷ்டமாதான் இருக்கு. என்ன பண்ண முடியும் சொல்லுங்க. கஷ்டப்பட்டாதானே முன்னுக்கு வரமுடியும். அதனால், கஷ்டத்தை நான் ஒரு பொருட்டாக எடுத்துகிறதில்லை.
விஷாலோடு மூன்றாவது முறையா ஜோடி சேர்றீங்களே?
முதல் விஷயம், விஷால் என்னோட நெருங்கிய நண்பர். அவருக்காக என்ன வேண்டுமானாலும் பண்ணுவேன். சுசீந்திரன் - விஷால் கூட்டணி சேர்ந்து படம் பண்றாங்கன்னு கேள்விப்பட்ட உடனே ரொம்ப சந்தோஷப்பட்டேன். என்னைப் பார்க்க வந்து நீங்க நடிச்சா நல்லாயிருக்கும்னு கேட்டாங்க. ப்ரீயா இருக்கிற நேரத்தில்தான் என்னால் பண்ண முடியும்னு சொல்லிட்டேன். எனக்காகக் காத்துட்டு இருக்காங்க. டிசம்பரில் ஷுட்டிங் போயிடுவேன். எனக்கு விஷாலோடு நடிக்கும்போது மட்டும் ரொம்ப சவுகரியமா இருக்கு.
பள்ளியில் உங்க நடிப்பு பற்றி எல்லாம் பேசுவாங்களா? என்ன சொல்றாங்க உங்க தோழிகள்?
அய்யோ… அவங்க எல்லாம் என்னை ஒரு நடிகையா பார்க்கவே மாட்டாங்க. ஒரே ஜாலி, கேலி, கிண்டல், அரட்டைதான். டி.வியில் எப்போதாவது என்னோட பாடல்களைப் பார்ப்பாங்க. இந்தப் படத்துல நடிச்சிருக்கியா அப்படின்னு கேட்பாங்க. ஆமா என்று சொல்லுவேன். அவ்வளவுதான். நானா போய், இந்தப் படத்துல நடிச்சிட்டு இருக்கேன்னு சொல்றதில்லை. அவங்களும் கேட்கறதில்லை. இன்னொரு ரகசியம் சொல்லவா.. நான் ஒரு படத்துல நடிச்சு முடித்த உடனே அதைப் பற்றி யோசிக்கிறதில்லை. நான் நடிச்சிருந்தாலும் ‘ஜிகர்தண்டா’, அப்புறம் ‘மஞ்சப் பை’ ஆகிய படங்களை இன்னும் நான் பார்க்கவே இல்லை. ஸ்கூலுக்குப் போனால் நடிப்பை மறந்துடுவேன். ஷூட்டிங்கிற்குப் போனால் ஸ்கூலை மறந்துடுவேன்.
உங்க ஃபேஸ்புக் கணக்கில் செல்ஃபி படங்கள் வருதே அதெல்லாம் நீங்க எடுக்கிறதுதானா?
ஆமாம். அஞ்சாவது படிக்கும்போதே பேஸ்புக்ல கணக்கு வைச்சிருந்தேன். ட்விட்டர் தளத்தில் எல்லாம் நான் கிடையாது. நண்பர்களோட பேசுறது, என்னைப் பற்றிச் சொல்றதுக்கு ஏதாவது ஒரு தளம் வேண்டும் இல்லயா.
விக்ரம் பிரபு, விஷால் இப்போ கார்த்தி. எப்போ பெரிய நாயகர்களுக்கு ஜோடியா பார்க்குறது...
சான்ஸ் கொடுத்தா நான் நடிக்க மாட்டேன்னா சொல்லப் போறேன். ரஜினி சாரோட ஸ்டைல், கமல் சாரோட நடிப்பு, விஜய்யின் நடனம், அஜித் விதவிதமான பாத்திரங்களில் நடிப்பது, சூர்யாவோட உடலமைப்பு, விக்ரமோட உழைப்பு, தனுஷிடம் அவரோட எளிமை, சிம்புவோட நடனம், அவரோட பார்வை… இப்படி ஒவ்வொருத்தர் பத்தியும் சொல்லிக்கொண்டே போகலாம். எல்லார்கூடயும் எனக்கு நடிக்க ஆசைதான்.
கேரளாவில் இருக்கீங்க. ஆனால் மலையாள சினிமாவில் அதிகம் நடிக்க மாட்டேக்கிறீங்களே.. ஏன்?
வாய்ப்பு வந்தாத்தானே தொடர்ந்து நடிக்க முடியும். வந்தால் கண்டிப்பாகப் பண்ணியிருப்பேன். எனக்கு தமிழ் சினிமாவில்தான் அதிகமான வாய்ப்புகள் வருது. அதனால் தொடர்ச்சியா தமிழில் பண்ணிட்டு இருக்கேன். மலையாளத்தில் வாய்ப்பு வந்தால், கண்டிப்பாக பண்ணப் போறேன்.
சமீப காலமா நல்ல நல்ல கதையம்சம் கொண்ட படங்கள், உங்களுக்கு மட்டும் அமையுதே. எப்படி?
நான் நடித்த சில படங்களோட கதையைக் கேட்காமல் தான் நடித்தேன். உடன் நடிக்கும் நடிகர்கள், இயக்குநர் இவங்கள வைச்சு யூகித்துக்கொள்வேன் அவ்வளவுதான். ஒரு சில படங்கள் கதையைக் கேட்டு தான் நடித்தேன். எனக்கு மட்டும் அமையுதுன்னு நீங்க சொல்றப்போ சந்தோஷப்படுறேன். கடவுளுக்குதான் நன்றி சொல்லணும்.
No comments:
Post a Comment