Monday, October 20, 2014

மறக்க முடியாத ‘தபால் கார்டு’



டித தொடர்புக்கு பயன்படுத்திக்கொண்டிருக்கும் தபால் கார்டு 145 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானது. 1869–ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், முதல் தபால் கார்டு ஆஸ்திரியா நாட்டினரால் வெளியிடப்பட்டது. வியன்னா ராணுவ கழகத்தை சேர்ந்த,  டாக்டர் இம்மானுவேல் ஹெர்மன் என்பவர் இதனை வடிவமைத்தார். 1875–ல் சர்வதேச தபால் யூனியன் உருவான போது அப்போதையை இந்திய தபால்துறை டைரக்டர் ஜெனரலாக இருந்த மோன்டீத் என்ற ஆங்கிலேய அதிகாரியின் முயற்சியால் 1879–ல் தபால்கார்டு முறை இந்தியாவில் அறிமுகமாகியது. இங்கிலாந்தில் 1870–ம் ஆண்டிலும், இந்தியாவில் 1.7.1879–ம் ஆண்டிலும் தபால் கார்டுகள் அறிமுகமாயின. 

1879–ம் ஆண்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தபால்கார்டுகள் அறிமுகமாயிற்று. ராணியின் தலை உருவத்தை பழுப்பு நிறத்துடன் அச்சிட்ட உள்நாட்டு தபால் கார்டுகளின் விலை காலணா. ஒன்றரை அணா மதிப்புள்ள வெளிநாட்டு உபயோகத்திற்கான நீல நிற கார்டுகளும் அவ்வாண்டு வெளியிடப்பட்டன.

மேற்கண்ட இரண்டு வகை கார்டுகளும் லண்டனில் உள்ள தாமஸ்–டி–லாரு அண்டு கம்பெனியால் 1.7.1879–ல் வெளியிடப்பட்டது. அரசுப்பணிகளுக்கென 1880–ல் சர்வீஸ் போஸ்ட் கார்டு அறிமுகமாயிற்று, 1883–ல் பதில் தபால் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டது.  

24–6–1922–ல் கார்டின் விலை காலணாவிலிருந்து அரையணாவாயிற்று. 15–2–1932 முதல் அதன் விலை முக்கால் அணாவாயிற்று. 24–6–1931–ல் விமான சேவை தபால் கார்டு அறிமுகமாயிற்று. 

சுதந்திரத்திற்கு முன்பு ராணி உருவம் பதித்த தபால் கார்டுகளும், ஜார்ஜ் மன்னர் உருவம் பொறித்த தபால் கார்டு களும் வெளியிடப்பட்டன. சுதந்திரத்திற்கு பின் சில மாதங்கள் வரை ஜார்ஜ் மன்னர் தபால் கார்டு அரையணா மதிப்பில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

1955–ல் பழுப்பு நிற அரையணா உள்ளூர் கார்டுகள் வெளியிடப்பட்டன. 1957–ல் அசோக சக்கரம் முத்திரை கொண்ட தபால் கார்டுகள் வெளியாகின.

1.4.1957–ல் இருந்து கார்டின் விலை 5 பைசா. 1.4.1965–ல் இருந்து 6 பைசா. 15.5.1968 முதல் 10 பைசா ஆனது. 15.5.1978–ல் இருந்து  1.6.1997 வரை 19 வருடங்களுக்கு 15 பைசாவாக  புழக்கத்திலிருந்த தபால் கார்டு, பின்பு 25 பைசாவாக உயர்ந்தது. 

2.7.1979–ல் இந்திய தபால் துறை தபால் கார்டின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பிரத்தியேக தபால் கார்டை வெளியிட்டது. போட்டிகளுக்கான தபால் கார்டுகளும் வெளியிடப்பட்டன. 

3 பைசாவிற்கு அறிமுகமான தபால்கார்டு  தற்போது 50 பைசாவிற்கு விற்கப்படுகிறது.   தபால்கார்டை அச்சடிக்க அரசிற்கு அதிகப்படியான செலவு ஏற்பட்டாலும் மலிவான தகவல் போக்குவரத்து சாதனம் தேவை என்பதால் மிகக் குறைந்த விலைக்கு தபால் கார்டுகள் விற்கப்படுகின்றன.  

இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு மேத்தூத் தபால் கார்டுகளை ஆகஸ்டு 2002–ல் அறிமுகப்படுத்தியது.  இதில் விலாசத்திற்கு இடதுபுறம் உள்ள பகுதியில் விளம்பரத்தை பெற்று அக்கார்டை 25 பைசாவிற்கு விற்கிறார்கள். இந்த தபால் கார்டில் முதன் முதலில் இடம்பெற்ற விளம்பரம் ரஜினியின் பாபா  திரைப்படம் ஆகும். 

தபால் கார்டில் முதலில் இடம்பெற்ற நடிகர் ரஜினி என்பது மட்டுமல்ல, பிந்தைய படமான எந்திரனும் தபால் கார்டில் இடம்பெற்றுள்ளது. இன்றைக்கும் 25 பைசா செலவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்லக்கூடிய அரசு தகவல் தொடர்பு சாதனம் மேத்தூத் தபால்கார்டுதான்.  

தகவல்: ஹரிஹரன் (தேசிய விருது பெற்ற முன்னாள் தபால் துறை அலுவலர்) கோவைப்புதூர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024