சென்னை: ஐந்து நிமிடம் தாமதமாக விமான முனையத்திற்கு சென்றதால் 15 பயணிகளை விமானத்திற்குள் ஏற அனுமதிக்காமல், கெடுபிடி செய்த ஏர் இந்தியா விமான அதிகாரிகளால் சென்னை-பெங்களூர் பயணிகள் கடும் அவதிப்பட்ட சம்பவம் இன்று நடந்துள்ளது.
பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் டெலிவரி மேனேஜராக பணியாற்றும், மதன் ராமகிருஷ்ணனுக்கும், டிசைன் இன்ஜினியராக வேலை பார்க்கும் லாரல் மார்ஷலுக்கும் இன்றைய தினத்தையும், ஏர் இந்தியாவையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அவசரமாக பெங்களூர் வர இருந்தவர்களை ஆற அமர ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்து 'புண்ணியம் கட்டிக்கொண்ட' ஏர் இந்தியாவை ஈசியாக மறக்க முடியுமா என்ன? மதன்ராமகிருஷ்ணன், லாரல் மார்ஷல் மட்டுமல்ல, அவர்கள் உட்பட 15 பேருக்கு இன்று ஏர் இந்தியா தனது சுயரூபத்தை வெளிக்காட்டியுள்ளது. சென்னையில் இருந்து பெங்களூருக்கு காலை 6 மணிக்கு கிளம்பும் ஏர் இந்தியா விமானத்தில் பயணிப்பதற்காக, ஏர்போர்ட் வந்தார் மதன் ராமகிருஷ்ணன். பெங்களூருக்கு வழக்கமாக உள்நாட்டு முனையத்தில் இருந்துதான் ஏர் இந்தியா விமானங்கள் கிளம்பும் என்பதால் அந்த முனையத்துக்கே சென்றுள்ளார்.
ஆனால், திடீரென அங்கிருந்த அதிகாரிகள், பெங்களூர் விமானம், சர்வதேச முனையத்தில் இருந்து கிளம்புவதாக அறிவித்து குண்டை போட்டுள்ளனர். சரி நடந்து செல்லும் தூரம்தானே என்று நினைத்து சர்வதேச முனையத்துக்கு ஓட்டமும் நடையுமாக சென்றுள்ளார் மதன் ராமகிருஷ்ணன். அவருடன் லாரல் மார்ஷல் உட்பட மொத்தம் 15 பேர் இப்படியாக திடீர் அலைக்கழிப்புக்கு உள்ளாகி வேறு முனையத்திற்கு ஓடியுள்ளனர். ஆனால் அங்குதான் பெரும் அதிர்ச்சி அவர்களுக்கு காத்திருந்தது. கேட்டை இழுத்து மூடிய அதிகாரிகள், நேரமாகிவிட்டது, இனிமேல், விமானத்தில் உங்களை ஏற்ற மாட்டோம் என்று கறாராக உத்தரவு போட்டுள்ளனர். இது என்னய்யா கொடுமை.. ஏதோ ஒருவர் என்றாலும் பரவாயில்லை, மொத்தமாக 15 பேர் தாமதமாக வந்துள்ளோம் என்றால், அதன் பின்னால் ஒரு காரணம் இல்லாமலா இருக்கும் என்று பயணிகள் கேட்ட நியாயமான கேள்வி அதிகாரிகள் காதுகளில் ஏறவில்லை.
இத்தனைக்கும், அரை மணிநேரம் தாமதமாக அவர்கள் வரவில்லை. ஐந்து நிமிட தாமதமாகவே வந்துள்ளனர். அதுவும் ஏர் இந்தியா செய்த முனைய குழப்பத்தால். சிறு பிள்ளைகளுக்கு சொல்வதைப்போல அனைத்து பயணிகளும் இதை எடுத்துச் சொல்லியும், மூடிய கேட் மூடப்பட்டதுதான் என்று கட்-அண்ட் ரைட்டாக கூறியுள்ளனர் அதிகாரிகள். தேவைப்பட்டால் சிசிடிவி கேமராக்களை வேண்டுமானாலும் செக் செய்து பாருங்கள், நாங்கள் 45 நிமிடங்களுக்கு முன்பே ஏர்போர்ட்டிற்குள் வந்துவிட்டோம். முனைய குழப்பத்தால் தாமதமாகிவிட்டது என்றும் பயணிகள் கெஞ்சியுள்ளனர். பயணிகளே இல்லாவிட்டாலும் எங்கள் பிளைன் பறக்கும் என்று கூறி, கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறையாக பயணிகளிடம் நடந்துகொண்டனராம் ஏர் இந்தியா அதிகாரிகள். இவர்கள் வேலைக்கு உதவமாட்டார்கள் என்று, ஏர்போர்ட் காவல் நிலையத்திற்கு ஓடிச் சென்று தங்கள் நிலையை எடுத்துச் சொல்லி விமானத்தில் ஏற்ற உதவுமாறு கேட்டுள்ளனர் பயணிகள். ஆனால் காவல்துறையினரோ, எங்களால் விமான இயக்க விவகாரத்தில் தலையிட முடியாது என்று தங்கள் இயலாமையை தெரிவித்துவிட்டனராம். மேலும், "இது முதல்முறை கிடையாது. இதுபோல பலமுறை நடந்துள்ளது. பயணிகள் எங்களிடம் ஓடி வருவார்கள். ஆனால் போலீசாரால் இந்த விவகாரங்களில் தலையிட முடியாது" என்றும் ஏர்போர்ட் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பயணிகளிடம் நிலைமையை எடுத்துக்கூறியுள்ளார்.
ஆத்திரமடைந்த பயணிகள், கோபத்தில் சாபமிட்டபடியே, வாடகை கார்களிலும், ரயில்களிலும் பெங்களூரை நோக்கி புறப்பட்டனர். சிலர் வேறு விமானத்தில் கிளம்பியுள்ளனர். இதில் மற்றொரு வேதனை என்னவென்றால், எந்த ஒரு பயணிக்கும் விமான கட்டணத்தை திருப்பி தரமுடியாது என்று கூறிவிட்டதாம் ஏர் இந்தியா. ரயிலில் பெங்களூர் நோக்கி பயணித்தபடியே, மதன் ராமகிருஷ்ணன், லாரல் மார்ஷல் ஆகியோர் 'ஒன்இந்தியாவை' தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் மனக்குமுறலை தெரிவித்தனர். இனியாவது திருந்துமா ஏர் இந்தியா?
No comments:
Post a Comment