Friday, October 24, 2014

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மரணம்!

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மரணம்!
சென்னை: உடல் நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 86.
 
சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள வீட்டில்  குடும்பத்துடன் வசித்து வந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு சில தினங்களுக்கு முன் திடீர் உடல்  நலக்குறைவு ஏற்பட்டது. வாந்தி எடுத்து மயங்கி விழுந்த ராஜேந்திரன், உடனடியாக மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குடலில் நோய் தொற்று மற்றும் சளித்தொல்லைகள் இருந்ததால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

நேற்று அவரது உடல் நிலை மோசம் அடைந்ததால் அவரச சிகிச்சை  பிரிவில் செயற்கை சுவாசம் பெபருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை எஸ்.எஸ்.ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

எஸ்.எஸ். ராஜேந்திரன் ஆரம்பத்தில் நாடக நடிகராக இருந்து பிறகு சினிமாவுக்கு வந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர். சிவாஜி காலத்தில் முன்னணி கதாநாயகனாக இருந்தார். படங்களில் இவர் பேசிய  தெளிவான வசன உச்சரிப்பு ரசிகர்களை கவர்ந்தது.
 
பராசக்தி, மனோகரா, ரத்தக்கண்ணீர், குல தெய்வம், முதலாளி, தைபிறந்தால் வழிபிறக்கும், சிவகங்கை சீமை, ராஜா தேசிங்கு, குமுதம், முத்து மண்டாம், ஆலய மணி, காஞ்சித் தலைவன், குங்குமம், பூம்புகார், மணி மகுடம் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். முதலாளி படம் சிறந்த படத்துக்கான  தேசிய விருது பெற்றது.

அரசியலிலும் ஈடுபட்டார். 1962ல் தி.மு.க. சார்பில் தேனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்திய நடிகர்களில் முதன் முதலாக எம்.எல்.ஏ. ஆனது எஸ்.எஸ்.ராஜேந்திரன்தான். பின்னர் மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு அ.தி.மு.க.வில் இணைந்து  1981ஆம் ஆண்டு ஆண்டிப்பட்டி  தொகுதியில் போட்டியிட்டு  எம்.எல்.ஏ. ஆனார். அரசு சிறு சேமிப்பு திட்ட துறையில் துணை தலைவராகவும் பணியாற்றினார்.

பெரியார் மற்றும் அண்ணாவின் சுயமரியாதை கொள்கைகளில் தீவிர பற்று கொண்டவர். இதனாலேயே இலட்சிய நடிகர் என்ற பட்ட பெயரோடு அழைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024