Friday, October 31, 2014

கத்தி' படத்தில் வரும் செல்போன் நம்பரால் ரசிகர்களின் போன் அழைப்புகளின் தொல்லை தாங்காமல், "அது நான் இல்லே" என கதறிக்கொண்டிருக்கிறார்.


கத்தி' படத்தில் வரும் செல்போன் நம்பரால் ரசிகர்களின் போன் அழைப்புகளின் தொல்லை தாங்காமல், "அது நான் இல்லே" என கதறிக்கொண்டிருக்கிறார்.

தீபாவளி ரிலீஸாக வெளியான நடிகர் விஜய் நடித்த, ‘கத்தி‘ படம் தமிழகம் முழுவதும் ஏராளமான திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில், கதாநாயகி சமந்தா தனது காதலன் விஜய்யிடம் தன்னை அழைப்பதற்காக ஒரு செல்போன் எண்ணை கொடுப்பார். நாயகன் விஜய், இந்த எண்ணை பலமுறை சொல்லிக்கொண்டே, அந்த எண்ணில் அழைக்கும் போது, சென்னை மாநகராட்சி ஊழியர் எடுத்து, இது மாநகராட்சிக்கான எண் எனவும், தாங்கள் நாய் பிடிக்கும் பிரிவு எனவும் கூறுவதாக படத்தில் வேடிக்கையான காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.

கத்தி திரைப்படத்தில் விஜய் பலமுறை திரும்ப திரும்பக் கூறிய அந்த செல்போன் எண்தான் தற்போது கன்னியாகுமரி மாவட்டம், அருமனை என்ற இடத்தை சேர்ந்த ஜெகதீஷ் என்ற ஆசிரியரை கதற வைத்துக்கொண்டிருக்கிறது. ஏனெனில் படத்தில் விஜய் கூறும் அந்த எண், அந்த ஆசிரியருடையது.

தீபாவளிக்கு படம் வெளியான தினத்திலிருந்தே ஜெகதீஷுக்கு ஏகப்பட்ட போன் அழைப்புகள். "தலைவா படம் சூப்பர்; சமந்தாவிடம் பேச முடியுமா?; அடுத்த படம் எப்போ?.; அந்த காட்சி அப்படி இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்; காதல் காட்சியில் நடிக்கும்போது எப்படி இருந்தது?...என்ற ரீதியில் ஒருதரப்பு ரசிகர்கள் கேட்டால், மறுபக்கம் படத்தை திட்டியும், விமர்சித்தும் பேசிக்கொண்டே போகிறார்கள் ரசிகர்கள்.

ரசிகர்கள்தான் இப்படி போன் செய்கிறார்கள் என்றால் மாணவிகள், இளம்பெண்களும் ஒருபக்கம் விஜயிடம் பேசுவதாக நினைத்துக்கொண்டு, " நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. உங்க படம்னா எனக்கு உயிர்..." என்றெல்லாம் பேச, கிர்ரடித்துப் போயுள்ளார் ஆசிரியர் ஜெகதீஷ். போதாதற்கு சிங்கப்பூர், மலேசியா, இலங்கை என வெளிநாடுகளிலிருந்தும் ஏகப்பட்ட அழைப்புகள் வருகிறதாம்.

போனை எடுத்து ஹலோ சொல்லி, "நான் விஜய் இல்லை!" எனக் கூறுவதற்கு முன்னதாகவே, எதிர்முனையில் இருப்பது விஜய்தான் என நினைத்துக்கொண்டு ரசிகர்கள் பேசிக்கொண்டே போக, செய்வதறியாமல் திகைத்துபோயுள்ளார் ஜெகதீஷ்.

தீபாவளி விடுமுறை முடிந்தும், போன் தொல்லை அதிகமாகவே, போனை தான் வேலை பார்க்கும் பள்ளிக்கு கொண்டு செல்லாமல், வீட்டிலேயே வைத்துவிட்டு செல்கிறார் ஜெகதீஷ். இதனால் அவரை ஆத்திர அவசரத்திற்கு அழைக்க முடியாமல் திண்டாடிப்போகின்றனர் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்.

வீட்டிற்கு வந்து பார்த்தாலோ தினமும் 400 முதல் 500 வரை மிஸ்டு கால்களாக இருப்பதாக புலம்புகின்றார் ஜெகதீஷ். இதனால் போன் நம்பரையே மாற்றிவிடலாமா? என்ற அளவுக்கு சிந்திக்க தொடங்கிவிட்டார் ஜெகதீஷ்.

வேறு சிலரோ இந்த எண் இயக்குனர் முருகதாஸுடையது என்று நினைத்துக்கொண்டும் பேசுகிறார்களாம். அதுமாதிரி ஒரு பெண் தென்னாப்பிரிக்காவிலிருந்து" உங்களை போனில் அழைத்தேன். ஆனால் நீங்கள் எடுக்கவில்லை. உங்களை நேரில் பார்த்து பேச வேண்டும்" என எஸ்.எம்.எஸ். அனுப்பி உள்ளாராம்.

இந்நிலையில் தனது சொந்த உபயோகத்திற்கான போன் நம்பர் கத்தி படத்தில் எப்படி இடம்பெற்றது? எனத் தெரியாமல் குழம்பும் ஆசிரியர் ஜெகதீஷ், இது தொடர்பாக 'கத்தி' படத்தின் இயக்குனர் முருகதாஸை இது சம்பந்தமாக சந்திக்கப்போவதாக கூறியுள்ளார்.

முருகதாஸ் என்ன விளக்கம் சொல்லப்போகிறாரோ?

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024