Monday, October 27, 2014

வேண்டாம் இனியும் மவுலிவாக்கம்.

ண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு என்பதுதான் ஒவ்வொரு மனிதனின் அடிப்படை தேவையாகும். இதில் உணவும், உடையும் தொடர் செலவுகள். வீடு என்பது ஒரே நேரத்தில் வாழ்நாள் முழுமைக்கும் மட்டுமல்லாமல், வாரிசுகளுக்கு விட்டுச்செல்வதற்குமாகும் செலவாகும். எல்லோருக்குமே சொந்த வீடு என்பது ஒரு கனவாகும். ஆளுக்கொரு வீடு என்பதையே மத்திய அரசும், மாநில அரசும் குறிக்கோளாகக்கொண்டு செயல்படுகிறது. 

பா.ஜ.க.  தனது  தேர்தல் அறிக்கையில்கூட இந்தியாவின் 75–வது சுதந்திர நாளின்போது, ஒவ்வொரு குடும்பத்துக்கும் அனைத்து வசதிகளுடனும் கூடிய வீடு இருக்கும் வகையில், குறைந்த செலவிலான வீடுகளை கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியிருந்தது. இதை நிறைவேற்றும் வகையில், நகர்ப்புறங்களில் உள்ள ஏழைகள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், குறைந்த வருவாய் பிரிவினருக்கான வீடுகள் கட்ட குறைந்த வட்டியில் கடன்கொடுக்க தேசிய வீட்டு வசதி வங்கிக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசும் அனைவருக்கும் வீடு என்ற குறிக்கோளை வைத்து செயல்படுகிறது. இந்த உன்னதமான நோக்கத்தை மத்திய–மாநில அரசுகளால் மட்டுமே நிறைவேற்றிவிடமுடியாது. அவரவருக்கு ஏற்ற பட்ஜெட் வீடுகளை கட்டிக்கொடுக்கும் முயற்சியில் தனியார் நிறுவனங்களும் ஈடுபடவேண்டும். இப்போதுள்ள சூழ்நிலையில், எல்லோராலும் நிச்சயமாக தனி வீடு கட்டவும் முடியாது, அதற்கான இடவசதிகளும் நகர்ப்புறங்களில் இல்லை. அடுக்குமாடி குடியிருப்புகள்தான் இப்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில் பெரும்பாலானோருக்கு முடியும். 

வீடு கட்டும் தொழில் வேகமாக நடந்து கொண்டிருந்த நிலையில், சென்னை போரூர் மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பொல பொலவென்று இடிந்து விழுந்து தரைமட்டமாகியது, மொத்தம் 11 மாடி கட்டிடம் இடிந்து, கட்டிட பணியில் ஈடுபட்டு வந்த 61 பேர் மரணம் அடைந்தனர். இந்த வீடுகளுக்காக அங்கே இங்கேயென்று கடன் வாங்கியும், தங்கள் சேமிப்பையெல்லாம் போட்டும் பணம் கட்டியவர்கள் நிர்க்கதியாக நிற்கிறார்கள். இந்த சம்பவம் அடுக்குமாடி குடியிருப்புகள் பக்கமே மக்களை
போகவிடாமல் தடுத்துவிட்டது. சென்னை புறநகர்ப் பகுதிகளில் மட்டும் கட்டி முடிக்கப்பட்ட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் விற்கப்படாமல் அப்படியே இருக்கின்றன. 

சென்னையில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் இதுதான் நிலை. பொதுவாக நீர்நிலைகள் அருகில் உள்ள வீடுகளுக்கு தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று கடும் கிராக்கி இருக்கும். ஆனால், மவுலிவாக்கம் சம்பவத்துக்கு பிறகு நீர்நிலைகளின் அருகில் உள்ள வீடு என்றாலே பெரும் தயக்கம் இருக்கிறது. கட்டுமான தொழில் இப்படி முடங்கிக் கிடப்பது சமுதாயத்துக்கு நல்லதல்ல. அனைவருக்கும் வீட்டு வசதி என்ற உன்னதமான குறிக்கோளை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், இந்த தொழிலை சார்ந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். கட்டுமான தொழிலுக்கு சப்ளை செய்யும் சிமெண்டு, செங்கல், இரும்பு கம்பி, பெயிண்ட், மின்சார சாதனங்கள் உள்பட எத்தனையோ பொருட்களை சப்ளை செய்யும் வியாபாரம், அந்த தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர் களின் வாழ்வாதாரம் அனைத்தும் பாதிக்கப்படக்கூடிய அபாயம் இருக்கிறது.

ஏற்கனவே இதுபோல கட்டப்பட்டுள்ள வீடுகளின் உறுதிதன்மையை அரசு பார்த்து சான்றிதழ் கொடுத்து, மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இதுமட்டுமல்லாமல், தமிழக வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம் மூலமாக விற்கப்பட்ட வீடுகள் பல இடங்களில் பழுதடைந்து இடிந்துவிழும் நிலையில் இருக்கின்றன. ஏற்கனவே நாங்கள் விற்றுவிட்டோம்,
எங்களுக்கு பொறுப்பு இல்லை என்று வாரியங்கள் சொல்லிவிடமுடியாது. 

அந்த வீடுகளுக்கு ஏதாவது பழுது ஏற்பட்டு மவுலிவாக்கம் போல ஒரு ஆபத்து நேர்ந்தால் நிச்சயமாக கட்டுமானம் சரியில்லை, அதனால்தான் விழுந்தது என்று இந்த வாரியங்களைத்தான் குறைசொல்வார்கள். எனவே, 25 ஆண்டுகளுக்கு மேலான அனைத்து குடியிருப்புகளையும் வீட்டுவசதி வாரியமும், குடிசை மாற்று வாரியமும் பார்த்து எந்த குடியிருப்புகள் வலுவாக இருக்கிறது?, எவையெல்லாம் ஆபத்தான நிலையில் இடிந்துவிழும் நிலையில் இருக்கிறது? என்பதை அறிவித்து உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். 

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024