Tuesday, October 28, 2014

விடுதலையாகும் கூண்டுக்கிளிகள்

பொதுவாக யார் மீதாவது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தால், 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். நீதிமன்றம் அவர்களை காவலில் வைப்பதற்காக சிறையில் அடைக்க உத்தரவிடும். இவர்களை ரிமாண்டு கைதிகள் என்று அழைப்பார்கள். 15 நாட்களுக்குள் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். சில குற்றங்களுக்கு 60 நாட்களுக்குள்ளும், சில குற்றங்களுக்கு 90 நாட்களுக்குள்ளும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தவுடன் கோர்ட்டில் வழக்கு நடத்த வேண்டும். இவ்வாறு வழக்கு நடத்தும் காலத்தில் அந்த கைதிகள் விசாரணை கைதிகள் என்று அழைக்கப்படுவார்கள். ரிமாண்டு கைதிகளாக இருக்கும்போதும், விசாரணை கைதிகளாக இருக்கும்போதும், அந்த கைதிகள் சிறை கைதிகளுக்கான உடை அணிய வேண்டியது இல்லை. அதுபோல, சிறை கைதிகளுக்கான வேலையும் செய்யவேண்டியது இல்லை. வழக்கு விசாரணை முடிந்தபிறகு, நீதிபதி குற்றவாளி என்று தண்டனை விதிக்கவும் செய்யலாம் அல்லது நிரபராதி என்று விடுதலையும் செய்யலாம்.

எந்த ஒரு குற்றவாளியும் அவரது குற்றம் நிரூபிக்கப்படும் வரை, குற்றவாளியாகவும் இருக்கலாம், நிரபராதியாகவும் இருக்கலாம். பல வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் ஏற்படும் தாமதத்தால், அதன்பிறகுதான் ஜாமீன் பெறமுடியும் என்ற நிலையில் சிறையில்தான் வாடவேண்டும். அதுபோல ஜாமீன்பெற வசதியில்லாதவர்கள், அந்த நடைமுறைகளைத் தெரியாதவர்கள் தீர்ப்புவரும் வரையில் சிறையில்தான் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். பலகாலம் ரிமாண்டு கைதிகளாகவும், விசாரணை கைதிகளாகவும் இருப்பவர்கள், நீதிமன்ற தீர்ப்பில் அவர்களில் சிலர் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டால், சிறையில் அடைக்கப்பட்ட காலத்துக்கு யாரை பொறுப்பாக்குவது? என்பதுதான் காலம்காலமாக உருவெடுக்கும் கேள்வியாகும்.

இந்த நிலையில், 1973–ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குற்றவியல் நடைமுறைச்சட்டம் 436–ஏ பிரிவின்படி, ஒரு விசாரணை கைதி எந்த குற்றத்தின்கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாரோ, அந்த குற்றத்துக்காக சட்டம் கூறும் தண்டனையின் அளவில் பாதிகாலத்தை சிறையில் கழித்து இருந்தால், அவரை தனது சொந்த ஜாமீனில் பிணைத்தொகையோடோ அல்லது பிணைத்தொகை இல்லாமலோ நீதிமன்றம் விடுதலை செய்யலாம் என்று குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், நடைமுறையில் பலர் இந்த சட்டத்தை பயன்படுத்தவில்லை. இந்த நிலையில், உச்சநீதிமன்ற பெஞ்சு ஒரு பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள சிறைகளில் உள்ள கைதிகளில் 60 சதவீதம் பேர் விசாரணை கைதிகள். மாஜிஸ்திரேட்டுகள், செசன்சு நீதிபதிகள், தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டுகள், தங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சிறைகளுக்கு வாரம் ஒருமுறை சென்று, இப்படி பாதிகாலம் சிறையில் விசாரணை கைதிகளாக இருப்பவர்களை விடுதலை செய்ய அங்கேயே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் நவம்பர் மாதத்தில் வாரம் ஒருமுறை செசன்சு நீதிபதிகளும், மாஜிஸ்திரேட்டுகளும் சிறைச்சாலைகளுக்கு சென்று நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள். கூண்டுக்கிளிகள் விடுதலையாகப்போகின்றன.

தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட மிகவும் வித்தியாசமானது. மற்ற மாநிலங்களில் சிறைகள் நிரம்பி வழிகிறது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள 136 சிறைகளிலும் மொத்தம் 22,101 கைதிகளை அடைத்து வைக்கமுடியும். ஆனால், சமீபத்தில் எடுத்த கணக்குப்படி கைதிகளின் எண்ணிக்கை 13,769 தான். இதில் ரிமாண்டு கைதிகளின் எண்ணிக்கை 5,920. விசாரணை கைதிகளின் எண்ணிக்கை 1,669 தான். இவர்களில் 670 பேர் இந்த நடவடிக்கையால் விடுதலை செய்யப்பட இருக்கிறார்கள். இந்த 670 வழக்குகளில் தாமதம் ஏற்படுத்திய காவல் நிலையங்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். மற்ற மாநிலங்களைவிட, தமிழ்நாட்டில் இவர்களின் எண்ணிக்கை குறைவுதான் என்றாலும், இந்த அளவுக்குக்கூட இல்லாத அளவுக்கு போலீசார் குறிப்பிட்ட காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கை விரைவாக நடத்த வேண்டும். இதற்கு அரசு வக்கீல்களும், நீதிமன்றங்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வழக்கும் எவ்வளவு காலத்துக்குள் முடிக்கப்பட வேண்டும்? என்பதை காவல்துறையும், நீதித்துறையும் முடிவு செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024