Monday, October 27, 2014

இதுதான் சரி!


பிரதமர் நரேந்திர மோடியை தனிப்பட்ட முறையில் சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். சிலர் அவருடன் கொள்கை அடிப்படையில் கருத்து வேறுபடலாம். அரசியல் ரீதியாக வேறு சிலர் அவரை எதிர்க்கக்கூடும். ஆனால், பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு நிர்வாக ரீதியாக அவர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அனைத்தும் அவர்களேகூட வரவேற்றுப் பாராட்டும் விதத்தில் அமைந்திருக்கின்றன.

நரேந்திர மோடி பிரதமரான பிறகு அவரால் அறிவிக்கப்பட்ட, முன்னுதாரண கிராமங்கள் அமைப்பது, இந்தியாவை உலகின் உற்பத்தி கேந்திரமாக மாற்றுவதன் மூலம் பரவலாக வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது, அனைவருக்கும் வங்கிக் கணக்குத் திட்டம், தூய்மை இந்தியா திட்டம் போன்றவை அகில இந்திய அளவில் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கின்றன.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தில்லியிலுள்ள மத்திய அரசின் அனைத்து அலுவலகங்களும் தூய்மையாகக் காட்சி அளிக்கின்றன. சுவரோரங்களில் பான்பராக் போட்டுத் துப்புகின்ற அநாக

ரிகம் அடியோடு மறைந்து விட்டிருக்கிறது. கடிகாரம் ஒன்பது அடிப்பதற்கு முன்னால் அத்தனை அரசு ஊழியர்களும் - அமைச்சரவைச் செயலரிலிருந்து கடைநிலை ஊழியர்வரை - அலுவலகம் வந்து தத்தம் பணிகளைத் தொடங்கி விடுகின்றனர். அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படாமல் இப்படியொரு மாற்றம் ஏற்பட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

எந்தவொரு கோப்பும் ஒரு வாரத்துக்கு மேல் எந்தவொரு மேசையிலும் இருக்கக் கூடாது என்பது மோடி நிர்வாகத்தில் எழுதப்படாத சட்டம். "ஒரு வாரத்துக்குள் முடிவெடுங்கள். உங்களால் முடிவெடுக்க முடியாவிட்டால் என்னிடம் அனுப்புங்கள்' என்பதுதான் அமைச்சர்களுக்குப் பிரதமரின் வழிகாட்டுதல். முடிவெடுக்காமல் பிரதமர் அலுவலகத்திற்குக் கோப்பை அனுப்பி வைத்தால், தாங்கள் துணிச்சலுடன் செயல்படுவதில்லை என்று பிரதமர் கருதிவிட்டால் என்ன செய்வது என்பதால், அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து விரைந்து முடிவெடுக்கிறார்கள் அமைச்சர்கள்.

கடந்த ஆட்சியில் இருந்தாற்போல அமைச்சர்களும் அதிகாரிகளும் பத்திரிகையாளர்களை அடிக்கடி சந்திப்பதில்லை, உரையாடுவதில்லை என்பது என்னவோ நிஜம். ஆனால், எந்தவொரு முடிவு எடுக்கப்பட்டாலும் உடனுக்குடன் அதை சுட்டுரை (டுவிட்டர்), முகநூலில் (பேஸ் புக்) பதிவு செய்து, அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுவதால், தகவல் தடை இல்லாமல் இருக்கிறதே, அது போதாதா? பத்திரிகையாளர்களையும் சந்திக்காமல், தகவலும் தரப்படாமல் இருந்தால்தான் தவறு.

நரேந்திர மோடி பிரதமரானவுடன் கடந்த ஜூன் மாதம், பல்வேறு அமைச்சகங்களின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் 70 முக்கியமான துறைகளின் செயலாளர்களை அழைத்துப் பேசினார். அவர்கள் சட்டப்படி துணிந்து செயல்படலாம் என்றும், முடிவுகள் எடுப்பதில் அவர்களுக்கு முழுச் சுதந்திரமும் அளிப்பதாகவும் உறுதி அளித்தார். "துணிந்து முடிவுகளை எடுங்கள். அதே நேரத்தில் நீங்கள் எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் நீங்களே பொறுப்பாளியாகவும் இருப்பீர்கள்' என்று கூறியதுடன் நின்றுவிடாமல், "எந்த நேரத்திலும் நீங்கள் என்னைத் தொலைபேசியிலோ, மின்னஞ்சலின் மூல

மாகவோ, நேரிலோ தொடர்பு கொள்ளலாம்' என்று உறுதியும் அளித்தார். இதுவரை இருந்த எந்தவொரு பிரதமரும் இப்படி வெளிப்படையாக அதிகாரிகளிடம் பேசியதாகத் தெரியவில்லை.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல, பிரதமர் அலுவலகம் கடந்த வாரத்தில் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறது. அதன்படி, எந்தவொரு உத்தரவாக இருந்தாலும் அதை எழுத்து மூலம் பெற்றால் மட்டுமே அதிகாரிகள் செயல்பட வேண்டும்.

அமைச்சர்களும், அவர்களது உதவியாளர்களும் பிறப்பிக்கும் வாய்மொழி உத்தரவுகளின் அடிப்படையில் இனி எந்த அதிகாரியும் செயல்படத் தேவையில்லை. அதேபோல், மேலதிகாரிகளின் வாய்மொழி உத்தரவுகளுக்கு அடிபணிய வேண்டிய அவசியமும் இனி அரசு ஊழியர்களுக்கு இல்லை. நரேந்திர மோடி பிரதமரான பிறகு முன்புபோல அரசு செலவில் உலகம் சுற்ற முடியவில்லை என்று அங்கலாய்த்து வந்த அதிகாரிகள், இரவு பகல் பாராமல் வேலை பார்க்க வேண்டியிருக்கிறது என்று அலுத்துக் கொண்டவர்கள், இப்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.

எழுத்து மூலம் மட்டுமே உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்றும், எந்தவொரு உத்தரவுக்கும் அதைப் பிறப்பித்தவர் பொறுப்பேற்றாக வேண்டும் என்றும் நடைமுறை வந்துவிட்டால், ஊழலும் முறைகேடுகளும் கணிசமாகக் குறைந்துவிடும். இந்தியாவில் அரசும் நிர்வாகமும் இப்போதுதான் சரியான பாதையில் பயணிக்கத் தொடங்கி இருக்கிறது!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024