Saturday, October 25, 2014

திருமணங்களை யார் நடத்துவது?

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதோ, இல்லையோ, இருமனங்கள் ஒன்றுபடும் திருமணம்தான் மகிழ்ச்சியான திருமணமாக இருக்கமுடியும். அதனால்தான், அனைத்து மதங்களிலும், அனைத்து இனங்களிலும் திருமணத்தை நடத்திவைக்கும்போது, மணப்பெண்–மணமகன் இருவருக்குமே இந்த திருமணத்தில் விருப்பம் இருக்கிறதா? என்று கேட்பார்கள்.

ஆனால், சமீபகாலங்களில் பல திருமணங்கள் வக்கீல்கள் அறையில் நடக்கிறது. இயற்கையான ஈர்ப்பு காரணமாக சிறுவயதிலேயே இளம்பெண்கள் இதுதான் காதல் என்று நினைத்துக்கொண்டு, காதலனின் எண்ணப்படி இதுபோல ரகசிய திருமணங்களுக்கு சம்மதித்து விடுகிறார்கள். 2009–ம் ஆண்டுக்கு முன்பு எந்த ஒரு திருமணம் என்றாலும் சரி, கட்டாயம் பதிவு செய்யப்படவேண்டும் என்று சட்டம் கிடையாது. விருப்பப்பட்டவர்கள் மட்டுமே பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்துகொள்ளலாம் என்று இருந்தது.

ஆனால், உச்சநீதிமன்றம் சீமா பிஸ்வால் வழக்கை விசாரித்தபிறகு, எந்த மதம் என்றாலும் சரி, அனைத்து திருமணங்களும் கட்டாயமாக பத்திரப்பதிவு
அலுவலகங்களில் பதிவு செய்யப்படவேண்டும், இதற்குரிய சட்டங்களை அனைத்து மாநிலங்களும் நிறைவேற்றவேண்டும் என்று உத்தரவிட்டது. தமிழக அரசு 2009–ம் ஆண்டு தமிழ்நாடு திருமண பதிவு சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டத்தை நிறைவேற்றிய நேரத்தில் பத்திர பதிவுத்துறையை கலந்து ஆலோசிக்கவில்லை, அவர்களுக்குத்தானே நடைமுறை சிக்கல்கள் தெரியும் என்று அப்போதே ஒரு குறை கூறப்பட்டது.

அப்போது எந்த திருமணம் என்றாலும் சரி, அது நடந்த இடம் எந்த சார்பதிவாளர் அலுவலகத்துக்குட்பட்ட பகுதியில் இருக்கிறதோ, அந்த அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டு ஒரு விண்ணப்பபாரத்தில் மணமக்கள் இருவரின் படத்தையும் ஒட்டி நேரடியாகவோ, தபால் மூலமாகவோ அனுப்பினால் மட்டும்போதும் என்று இருந்தது. ஆனால், இந்த முறையில் பல தவறுகள் நடக்கின்றன என்று பல குறைபாடுகள் கூறப்படுகின்றன.

பதிவு செய்வதற்கு முன்னால், திருமணங்கள் இறைவழிபாட்டு தலங்களிலோ, மதஅடிப்படையிலோ, பெரியவர்கள் பலர் முன்னிலையில் சீர்திருத்த திருமணங்களாகவோ நடக்கவேண்டும். ஆனால், சமீபகாலங்களாக வக்கீல்கள் முன்னிலையில் நடந்ததாக பதிவு செய்யப்படுவதாக கூறப்படுவது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இதுபோன்ற ஒரு திருமணம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நடந்த ஒரு வழக்கில் ஒருபெண், தன் வீட்டில் வேலை பார்க்க வந்த ஒரு தச்சுதொழிலாளி, தனக்கு தெரியாமலேயே தன்னை அவருடைய மனைவி என்று பதிவு செய்துவிட்டதாக தெரிவித்திருந்தார். ஐகோர்ட்டு உத்தரவின் பேரில், போலீஸ் சூப்பிரண்டு ஜெயகவுரி, இதுபோல பதிவு செய்யப்பட்ட திருமணங்கள் தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்து ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

இதில், கடந்த ஆண்டில் மட்டும் 120 வக்கீல்கள் வடசென்னை பதிவாளர் அலுவலகத்தில் மட்டும் 1,559 திருமணங்கள் தங்கள் முன்னிலையில் நடந்ததாக பதிவு செய்துள்ளனர் என்றும், ராயபுரம் பதிவாளர் அலுவலகத்தில் 48 வக்கீல்கள் 1,937 திருமணங்களை பதிவு செய்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். ஜார்ஜ்டவுன் கோர்ட்டு வக்கீல்கள் சங்க அறையில் மட்டும் ஒரே ஒரு வக்கீல் 205 திருமணங்களை நடத்திவைத்ததாக பதிவு செய்துள்ளார்.

திருமணங்களை யார் நடத்தி வைப்பது? இப்படி ரகசிய திருமணங்கள், போலி திருமணங்கள் நடப்பதால் சமுதாயம் என்ன ஆகும்? என்று அனைவரும்
கவலைப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில், நீதிபதிகள் எஸ்.ராஜேசுவரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளனர். வக்கீல்கள்
அறையிலோ, வக்கீல்கள் முன்னிலையிலோ நடந்ததாக கூறப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இதுபோல திருமணங்களை நடத்திவைக்கும் வக்கீல்கள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

யார் முன்னிலையில், எவ்வாறு திருமணங்கள் நடத்தப்பட வேண்டும்?, பொதுவாக சார்பதிவாளர் அலுவலகங்களில் உள்ள வேலைப்பளு காரணமாக திருமணங்களை நன்கு விசாரித்து பதிவு செய்ய நேரம் இருக்காது. எனவே, உண்மைத்தன்மையை நன்கு கண்டறியும் திறமைகொண்ட சிறப்பு திருமண பதிவாளர் அலுவலகங்கள் வேண்டும். பதிவு செய்ய வரும்போது மணமக்கள் இருவரும் ஆஜராக வேண்டும், இருவரின் மனப்பூர்வமான சம்மதத்துடன்தான் இந்த திருமணம் நடந்தது என்பதை உறுதிப்படுத்தவேண்டும் என்பதுபோல, அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு திருத்த சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றுவதே இந்த பிரச்சினைக்கு தீர்வாக முடியும்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...