Sunday, October 26, 2014

சுமை தாங்கிகளைத் தேடி ஒரு பயணம்..!

சுமை தாங்கிகள்... மனிதர்கள் தங்கள் இடப்பெயர்வுக்கு தங்கள் கால்களை மட்டுமே நம்பி இருந்த காலகட்டத்தில், பயணத்தின் போது ஏற்படும் அயர்ச்சியை நீக்கும் ஒன்றாகவும்,  பயணத்துணையாகவும் விளங்கியவை சுமைதாங்கிகள்.

அவை வெறும் கற்களால் மட்டும் உருவாக்கப்பட்டவை அல்ல. இதில் முதன்மையான மூலப்பொருளாக மனிதநேயம் புதைந்து கிடந்தது. சுமை தாங்கி கற்களை அமைத்தவர்களின் எதிர்பார்ப்பு மிகவும் உன்னதமானது. நெஞ்சம் நிறைய, சுகமான சுமையாக, மனிதாபிமானத்தை சுமந்தவர்கள், தங்கள் சொந்த செலவில்... யாரோ கண்ணுக்கு தெரியாத பாதசாரிகளின் பாரத்தை இறக்கி வைப்பதற்காக சுமை தாங்கிகளை உருவாக்கினார்கள். ஆனால் தற்போது பழமையின் மிச்சமாக கூட, சுமை தாங்கிகளை காண முடியவில்லை.

சுமை தாங்கிகளை தேடி ஓர் நீண்ட பயணம் மேற்கொண்டோம். பல கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தும் ஒரு சுமை தாங்கியும் கூட கண்ணில் தென்படவில்லை. தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட கிராமங்களில் வசிக்கும் நண்பர்கள், உறவினர்களிடம் எல்லாம் விசாரித்தோம். ‘‘ஆஹா... எங்க ஊர் மெயின் ரோட்ல கூட இருந்துச்சு... நாலஞ்சு வருசத்துக்கு முன்னாடி, எங்க ஊர் பக்கம் நேஷனல் ஹைவேஸ் போட்டப்ப அதை எடுத்துட்டாங்க.  அதுக்கு முன்னாடி எல்லாம் எங்க ஊரோட அடையாளமாவே அதுதான் இருந்துச்சு.’’ என்ற பதிலே பெரும்பான்மையாக வெளிப்பட்டது.

ஏமாற்றத்தின் இடையே ஆறுதலாக 70 வயதை கடந்த கிராமத்து பெரியவர்கள், சுமை தாங்கி கற்கள் பற்றிய தங்களது நினைவுகளை என்னிடம் பகிர்ந்துகொண்டனர். ‘‘வாகன வசதிகள் அதிகம் இல்லாத எங்க காலத்துல, மக்கள் பெரும்பாலும் நடந்தேதான் எல்லா இடங்களுக்கும் போவாங்க. ஒரு ஊர்ல இருந்து இன்னொரு ஊருக்கு போக, பல மைல் தூரம் நடந்தாகணும். அதுக்கு நாலஞ்சு நாட்கள் கூட ஆயிடும். சோறு தண்ணி, துணிமணிகளை எல்லாம் கையிலயும் தலையிலயும்தான் சுமந்தாகணும்.
அப்படி ரொம்ப தூரம் களைப்போடு நடந்து போறவங்க... சுமை தாங்கியை பார்த்துட்டா போதும்....ஏதோ தெய்வத்தை மாதிரி சந்தோஷப்படுவாங்க. குறிப்பா வியாபாரிகளுக்கு ரொம்பவே அது உதவியா இருக்கும். அவங்க எல்லாம் தங்களோட தலையில  உள்ள பாரத்தை தாங்களாகவே கீழ இறக்கி வச்சி, களைப்பாறதுங்கறது அவ்வளவு லேசுப்பட்ட காரியமில்லை. அதை இறக்கி வைக்கவே பெரும்பாடு பட்டாகணும். அதை மறுபடியும் தங்களோட தலையில ஏத்துறது இன்னும் கஷ்டம். அதுவும் மழைகாலமா இருந்தா சொல்லவே வேண்டாம்.

அதுமாதிரியான சூழல்ல சுமை தாங்கிதான் அவங்களுக்கு ரொம்பவே ஒத்தாசையா இருக்கும். காரணம், சுமை தாங்கிகள் ஒரு ஆள் உயரத்துக்கு இருக்கும். தலையில இருந்து, சுமைகளை லேசா சாய்ச்சாலே போதும்... அது தானாகவே, சுமை தாங்கியில உட்கார்ந்துக்கும். வியாபாரிகள் சில மணிநேரம் களைப்பாறி முடிச்சிட்டு, தங்களோட பொருட்களை, மறுடியும் லேசா சாய்ச்சாலே அவங்க தலைமேல இறங்கிடும். பெரும்பாலும் ஆலமரத்தடியிலதான் சுமைதாங்கிகள் இருக்கும். சுமையை சாய்ச்சி வச்சிட்டு அப்படியே கொஞ்சம் ஓய்வும் எடுத்துக்க்கத்தான் இந்த ஏற்பாடு.
குளம், ஏரிகள் இருக்குற இடங்கள்லயும் சுமை தாங்கிகள் இருக்கும். நாலஞ்சு மைல்கள் தூரத்துக்கு இடையிடையே சுமை தாங்கிகள் இருந்துச்சு. கோடை காலங்கள்ல சுமை தாங்கிகளுக்கு பக்கத்துலேயே தண்ணீர்ப்பந்தல் எல்லாம் அமைச்சிருப்பாங்க. ஒரு சில ஊர்கள்ல சுமை தாங்கிக்கு பக்கத்துலயே ஓய்வெடுக்குறதுக்கு வசதியா சின்ன அளவுல சத்திரம் எல்லாம் கூட இருந்துச்சு. பொதுக்காரியங்கள்ல ஈடுபாடு உடைய உபயதாரர்கள்தான் பெரும்பாலான சுமை தாங்கிகளை உருவாக்கினாங்க. கர்ப்பிணி பெண்கள் மரணம் அடைஞ்சிட்டா, அவங்க ஆத்மா சாந்தி அடையுறதுக்காக, அவங்க நினைவாகவும் சுமை தாங்கிகள் அமைப்பதும் பல கிராமங்கள்ல வழக்கம்.’’என சுமைதாங்கி பற்றிய சுவாரஸ்யங்களை சொன்னார்கள் அவர்கள்.

மக்கள் கூடும் இடங்கள், பல கிராமங்கள் சந்திக்கக்கூடிய பகுதிகளை காட்டிலும், ஆள் அரவம் இல்லாத, மக்கள் நடமாட்டம் இல்லாத, சாலைகளின் ஓரங்களில்தான் சுமை தாங்கிகள் அதிகமாக இருந்திருக்கின்றன. உதவிக்கு எவரும் வராத பகுதிகளை தேர்ந்தெடுத்து, சுமை தாங்கிகளை அமைத்திருக்கிறார்கள்.


கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது, அரசவனங்காடு என்ற கிராமம். இந்த ஊரில உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியினை சுமைதாங்கி என்ற அடைமொழியோடு அழைக்கிறார்கள், சுற்றுவட்டார கிராம மக்கள். முன்பு இந்த ஊரில் மிகப்பெரிய சுமை தாங்கி ஒன்று இருந்திருக்கிறது. ஒரே சமயத்தில் பத்து பேர் தங்களோட சுமைகளை இங்கே இறக்கி வைத்து களைப்பாறலாம். சுமை தாங்கியோடு இணைந்த மிக நீளமான கருங்கல் இருக்கை அமைக்கப்பட்டிருந்திருக்கிறது.
கும்பகோணம் - திருவாரூர் செல்லும் வழியில் மிகவும் பிரதானமான, புகழ்பெற்ற சுமை தாங்கியாக அது இருந்திருக்கிறது. தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் வழியில் திருப்பந்துருத்தி, கண்டியூர் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான சுமை தாங்கிகள் இருந்தன. காரணம் இந்த பகுதிகளில் விளையக்கூடிய கத்திரி, வெண்டி, கீரை, வெற்றிலை உள்ளிட்ட விளைப்பொருட்களை விவசாயிகள் தலைசுமையாகத்தான் அப்பொழுதெல்லாம் தஞ்சாவூர் சந்தைக்கு கொண்டு போவார்கள். அப்போது இங்கிருந்த சுமை தாங்கிகள் தான் உதவும் கரங்களாக கை கொடுத்திருக்கிறது.        

தற்போது நவீன போக்குவரத்து வசதிகள் ஏராளமாக வந்துவிட்டன. ஆனாலும் கூட இப்பொழுதும் சுமை தாங்கிகள் தேவை உள்ளது என்கிறார்கள் விவசாயிகள்.
சிறு, குறு விவசாயிகள் இன்னமும் தலை சுமையாகதான்  உர மூட்டைகளை வீடுகளில் இருந்து விளைநிலங்களுக்கு கொண்டு செல்கிறார்கள். விளைப்பொருட்களை தங்கள் வீடுகளுக்கு கொண்டு வருகிறார்கள். ஆன்மிக ஸ்தலங்களுக்கு பாத யாத்திரையாக நடந்து செல்லக்கூடிய பக்தர்களுக்கும் சுமை தாங்கிகள் இன்றைக்கும் தேவைப்படுகின்றன. ஆனால் அவை அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன. மனிதநேயமற்ற பளபளப்பான சாலைகள்தான் தற்போது மிஞ்சியிருக்கிறது. 

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...