Wednesday, October 22, 2014

மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்

காகவி பாரதியார் பாடல்களில் காலக்கண்ணாடியை அவர் கையில் வைத்து இருந்ததைப்போல எதிர்கால இந்தியா எப்படி இருக்கும்? என்பது அப்படியே வடித்தெடுக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், பாரத தேசம் பாடலைச் சொல்லலாம். அதில் வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்; அடிமேலை கடல் முழுதும் கப்பல்விடுவோம் என்ற பாடல் வரிகள் வரும். 

இப்போது அவருடைய அந்த கனவு உயிர்பெற்று எழப்போகிறது. பண்டைய காலம் தொட்டு தமிழன் கடலில் கோலோச்சியிருக்கிறான். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மூவருமே கடல் படையை மிக வலிமையாக வைத்திருந்து இருக்கிறார்கள். கடல் வணிகத்திலும் தமிழன் தலைநிமிர்ந்து கொடிகட்டி பறந்து இருந்திருக்கிறான். கொற்கை, காயல், தூத்துக்குடி உள்பட பல துறைமுகங்களுக்கு சீனா உள்பட பல நாடுகளில் இருந்து சரக்கு கப்பல்களும், யாத்ரீகர்களும் வந்து சென்றதற்கு சரித்திர சான்றுகள் இருக்கின்றன. இவ்வளவு ஏன், ஆங்கிலேயர் கிழக்கு இந்திய கம்பெனி என்று வணிகம் செய்ய கப்பல் மூலம் வந்துதானே நாட்டையே அடிமையாக்கினார்கள். 

வெறும் பாய்மர கப்பல்கள் இருந்த நேரத்திலேயே அதை வைத்துக்கொண்டு பல நாடுகளுக்கு தமிழர்கள் சரக்குகளை ஏற்றிச்சென்றனர். பயணிகள் பயணம் செய்தனர். இவ்வளவு ஏன், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்புவரை தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து தோணி என்று சொல்லப்படும் பாய்மர கப்பல்கள் மூலமே இலங்கைக்கு சரக்குகள் சென்றுகொண்டிருந்தன. 

19–ம் நூற்றாண்டின் இறுதியில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு போட் மெயில் என்ற ரெயில் மூலம் சென்று, அங்கு இருந்து நீராவி கப்பல் மூலம் கொழும்புக்கு பயணிகளும், சரக்குகளும் சென்று வந்தன. 1898–ம் ஆண்டே அந்த போட் மெயிலில் ஒரு ரெயில் பெட்டியில் இருந்து அடுத்த ரெயில் பெட்டிக்கு செல்லும் வெஸ்டிபுல் வசதி இருந்தது. 1914–ம் ஆண்டில் பாம்பன் பாலம் கட்டப்பட்டபிறகு தூத்துக்குடிக்கு சென்றுகொண்டிருந்த போட் மெயில் தனுஷ்கோடிக்கு விடப்பட்டது. 

துறைமுகத்தில் கப்பல் வரை போட் மெயில் சென்று அங்கிருந்து இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கு கப்பல் பயணம் தொடர்ந்தது. 1964–ல் ஏற்பட்ட புயலால் பாலத்தில் சென்று கொண்டிருந்த போட் மெயில் கடலுக்குள் அடித்து செல்லப்பட்டு தனுஷ்கோடியே பாதிக்கப்பட்டதாலும், இலங்கையில் ஏற்பட்ட பிரச்சினைகளாலும் இந்த சேவையும் நின்றுபோய்விட்டது.

இந்த நிலையில், தூத்துக்குடி–கொழும்பு இடையே பயணிகள் கப்பல் சேவை 2011–ம் ஆண்டு தொடங்கப்பட்டு 6 மாதங்களில் நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் தொடங்க ஏற்பாடுகளை ஜரூராக துறைமுக பொறுப்புக்கழகம் செய்துவருகிறது. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் பொறுப்பேற்றபிறகு, கடல்வழி வாணிபத்தை 4 மடங்கு பெருக்க தீவிரமாக நடவடிக்கை எடுத்துவருகிறது. அண்டை நாடுகள் குறிப்பாக மியான்மர், வியட்னாம், தாய்லாந்து, வங்காளதேசம் போன்ற நாடுகளோடு கடல் வணிகத்தை தொடங்க திட்டமிட்டிருப்பதன் தொடக்கமாக, சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து ஆந்திராவில் உள்ள கிருஷ்ணபட்டினம் துறைமுகம் வழியாக மியான்மர் நாட்டுக்கு சரக்கு கப்பல் புறப்பட்டு சென்றது. இந்தியாவில் 7 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள கடல் இருக்கிறது. இதில் 1,067 கிலோமீட்டர் தமிழ்நாட்டில் இருக்கிறது.

கடல் வழியை சரக்கு கப்பல் போக்குவரத்தில் முழுமையாக பயன்படுத்தவில்லை என்ற ஒரு குறையோடு பயணிகள் போக்குவரத்தில் முற்றிலுமாக பயன்படுத்தவில்லை என்ற குறை இருக்கிறது. சாலை போக்குவரத்தையும், ரெயில் போக்குவரத்தையும் அதிகபட்சமாக
பயன்படுத்திவிட்டோம். இனி கண்டிப்பாக கடல்வழி பயணிகள் போக்குவரத்தை தொடங்க முயற்சி எடுக்கவேண்டும். மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆரின் கனவுத்திட்டம் சென்னையில் இருந்து கன்னியாகுமரிவரை சிறிய பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கவேண்டும் என்பதுதான். 

சென்னையில் இருந்து புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், ராமேசுவரம், தூத்துக்குடி வழியாக சரக்கு கப்பல், பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க மத்திய, மாநில அரசுகள் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இதுபோல சுற்றுலா பயணிகளுக்காக ஹோவர்கிராப்டு படகுகளையும் விடவேண்டும்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...