சினிமா பாடலாசிரியர்களில் கவிஞர் தஞ்சை ராமையாதாசுக்கு தனியிடம் உண்டு. எம்.ஜி.ஆர். நடித்த குலேபகாவலி படத்திற்கு "மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ! இனிக்கும் இன்ப இரவே நீ வாவா'' பாடலும் தருவார். மாயாபஜார் படத்துக்கு "கல்யாண சமையல் சாதம்'' பாடலும் தருவார்.
காதலை நெஞ்சில் பதிக்கும் "மணாளனே மங்கையின் பாக்கியம்'' படப்பாடலான "அழைக்காதே! நினைக்காதே! அவை தனிலே என்னை நீ ராஜா''வும் தருவார்.
நாட்டு நடப்புக்கு என்றும் பொருந்தும் "மலைக்கள்ளன்'' படப்பாடலான "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' பாடலும் தருவார்.
புரியாத மொழியில் `ஜிகினா' வார்த்தைகளை கோர்க்கும் இன்றைய கவிஞர்களுக்கும் இவர் அன்றே முன்னோடியாக இருந்திருக்கிறார். அமரதீபம் படத்தில் "ஜாலியோ ஜிம்கானா'' பாடலை எழுதியதும் இவரே.
கிராமத்து திருமண வீடுகளில் இப்போதும் மணப்பெண்ணுக்கு அவள் அண்ணன் புத்திமதி சொல்கிற மாதிரி அமைந்த "புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே! தங்கச்சி கண்ணே'' பாடலை போடுவார்கள். "பானை பிடித்தவள் பாக்கியசாலி'' படத்துக்காக இந்தப்பாடலை எழுதியதும் இவர்தான்.
இப்படி காலத்தால் அழியாத பாடல்களை தந்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நின்று கொண்டிருப்பவர் தஞ்சை ராமையாதாஸ்.
1939-ல் வெளிவந்த "மாரியம்மன்'' படத்தில் இவர் எழுதிய பாடல்தான் சினிமா உலகுக்கு இவரை கவிஞராக அறிமுகம் செய்தது. தொடர்ந்து 250 படங்களுக்கு மேல் எழுதியவர். எழுதிய பாடல்கள் இரண்டாயிரத்துக்கும் மேல்.
தஞ்சையில் உள்ள மானம்பூச்சாவடி சொந்த ஊர். அங்குள்ள சென்ஸ் பீட்டர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாவது முடித்தவர், தஞ்சை கரந்தை தமிழ்ச் சங்கத்தில் படித்து "புலவர்'' பட்டம் பெற்றார். அதோடு ஆசிரியர் பயிற்சிப் படிப்பையும் முடித்தார். தஞ்சை ஆட்டுமந்தைத் தெருவில் உள்ள ஆரம்ப பாடசாலையில் ஆசிரியராக சேர்ந்தார்.
பள்ளி ஆசிரியராக இருந்தவர், சினிமாவுக்கு பாட்டெழுத வந்தது எப்படி?
கவிஞரின் மகன் ரவீந்திரன் இதற்கு பதில் சொல்கிறார்:-
அப்பாவுக்கு அப்போதே பாட்டெழுதும் ஆர்வம் இருந்திருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அப்போது தஞ்சை சரஸ்வதி மகாலில் அடிக்கடி புலவர்கள் கூடி பாடல்கள் பற்றி விவாதிப்பது வழக்கம். இதில் ராஜாவின் அரண்மனைப் புலவர்களாக இருந்தவர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சபையில் நடந்த பாட்டுப்போட்டியில் அரண்மனைப் புலவர்களும் ஆச்சரியப்படும் விதத்தில் அப்பா முதல் பரிசான தங்கப்பதக்கம் பெற்றிருக்கிறார்.
அப்பா காங்கிரசில் இருந்தார். கட்சியில் ரொம்பவும் ஈடுபாடு. சுதந்திரப் போராட்ட காலத்தில் கட்சியின் கட்டளையை ஏற்று போராட்டத்திலும் கலந்து கொண்டார்.
சுதந்திரம் கிடைத்த பிறகு "சுதந்திர போராட்ட தியாகி'' என்ற வகையில் கிடைத்த பட்டயம், பதக்கம் இரண்டையும் வேண்டாம் என்று கூறிவிட்டார்.
ஆசிரியப் பணியை தொடரும்போதே நாடகத் துறையிலும் நாட்டம் ஏற்பட, ஒரு நாடகக்குழு அவரை தன் சபாவில் வாத்தியாராக ஏற்றுக்கொண்டது. நாடக கதை - வசன - பாடலாசிரியருக்கு `வாத்தியார்' என்ற பெயர் நிலைத்து விடும். இந்த வகையில் நாடகத் துறையிலும் `வாத்தியார்' ஆனார். மச்சரேகை, பகடை, பவளக்கொடி, விதியின் வெற்றி, அல்லி அர்ஜ×னா, வள்ளி திருமணம் போன்ற நாடகங்களையும் நடத்தி வந்தார்.
ஊர் ஊராக நாடகம் போட்டு வந்த அப்பாவை ராமசாமி பாவலர் என்பவர் சேலத்தில் நாடகம் போட அழைத்து வந்தார். அதே ஊரில் அறிஞர் அண்ணாவின் "வேலைக்காரி'', ''ஓர் இரவு'' போன்ற நாடகங்களை கே.ஆர்.ராமசாமி நடத்தி வந்தார். இரண்டு குழு நாடகங்களுக்கும் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்தது.
அப்பாவின் வசனமும் பாடல்களும் நாடக மேடையில் பிரபலம் என்பதால், அவரது புகழ் சினிமாத்துறையிலும் பரவ ஆரம்பித்தது.
இதனால் அப்பாவுக்கு சினிமாவில் பாட்டெழுதும் வாய்ப்பு வந்தது. இவரை சிறந்த கவிஞராக கண்டுகொண்ட சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அப்போது தயாரித்து வந்த "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி'' படத்துக்கு பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தது. அப்பா அந்தப் படத்துக்காக "வெச்சேன்னா வெச்சதுதான்'' என்று ஒரு பாடலை எழுதிக்கொடுக்க, அது அவர்களுக்கு பிடித்துப்போனது.
அப்பாவை நாடகம் மூலமாக ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த நடிகர் டி.ஆர்.மகாலிங்கம், அப்பாவை மாடர்ன் தியேட்டர்சில் கவிஞராக பார்த்தபோது வியந்திருக்கிறார். அப்பாவின் கதை-வசனம் இயக்கத்தில் "மச்சரேகை'' நாடகம் 200 தடவை மேடையேறியிருப்பதை தெரிந்து கொண்ட டி.ஆர்.மகாலிங்கம் அதை தனது கம்பெனிக்காக படமாக்கித்தர முடியுமா? என்று கேட்க, அப்பாவும் சந்தோஷமாய் சம்மதித்திருக்கிறார்.
இந்த வகையில் சினிமாவுக்காக அப்பா சென்னை வர காரணமாக இருந்தவர் டி.ஆர்.மகாலிங்கம்தான். அப்பாவின் பாட்டெழுதும் திறமையை முதலில் கண்டு கொண்டது நாகிரெட்டியாரின் விஜயா - வாகினி நிறுவனமே. 1951 முதல் 1960 வரை அந்த நிறுவனம் தயாரித்த "பாதாள பைரவி'', "மிஸ்ஸியம்மா'', "மாயாபஜார்'' போன்ற பல படங்களுக்கு வசனம், பாடல்கள் அப்பாதான். விஜயா - வாகினியின் ஆஸ்தான கவிஞர் என்ற தகுதியிலும் நிலைத்தார்.
அன்று இசையுலகில் கொடிகட்டிப் பறந்த இசை மேதைகள் சி.ஆர்.சுப்பராமன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, ஜி.ராமநாதன், எஸ்.வி.வெங்கட்ராமன், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கண்டசாலா, எஸ்.ராஜேஸ்வரராவ், ஆதிநாராயணராவ் ஆகியோரின் இசை அமைப்பில் அப்பா பாடல்கள் எழுதினார்.
ஒரு சமயம் டைரக்டர் ஸ்ரீதர் "அமரதீபம்'' படத்துக்கு பாட்டெழுதி வாங்க அப்பாவிடம் வந்திருக்கிறார். பாடலுக்கான சூழ்நிலையை ஸ்ரீதர் விவரித்ததும் அப்பா, "நம்பினா நம்புங்க! நம்பாகாட்டி போங்க'' என்ற பல்லவியை சொன்னார். பதறிப்போன ஸ்ரீதர், "வாத்தியாரய்யா! இது எனது முதல் படம். அதோட படத்துக்கு நான் பதிவு பண்ணப்போற முதல் பாட்டும் இதுதான். இப்படி பாட்டு கிடைச்சா, படத்தை யாரும் வாங்காமல் போய்விடுவார்களே'' என்று கலக்கமாய் கூறியவர், "வேற ஒரு பாட்டு ஜாலியாய் வர்ற மாதிரி எழுதிக்கொடுங்க'' என்று கேட்டிருக்கிறார்.
அப்பாவும் உடனே தமாஷாக, "ஜாலிலோ ஜிம்கானா, டோலிலோ கும்கானா'' என்று எழுதிக் கொடுத்திருக்கிறார்.
"இதுக்கு என்ன அர்த்தம்?'' என்று ஸ்ரீதர் முழிக்க, அப்பாவோ, "கதைப்படி இது குறவன் - குறத்தி பாடற பாட்டு. குறவர்கள் பாஷை எனக்கும் தெரியாது. உனக்கும் தெரியாது. போய் தைரியமாய் ரிக்கார்டிங் செய். படம் அமோகமாக வெற்றி பெறும்'' என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். படம் வெற்றி பெற்றதோடு அப்பாவுக்கு "டப்பாங்குத்து பாடலாசிரியர்'' என்ற பெயரும் வந்து சேர்ந்தது. ஆனால் அப்பா அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது பாணியில் பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார்.
கலைஞர் மு.கருணாநிதி அப்போது தங்கள் மேகலா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வந்த "குறவஞ்சி'' படத்துக்கு பாடல்கள் எழுத அப்பாவை அழைத்தார். அப்பா அப்போது மதுவுக்கு பழக்கப்பட்டுப் போயிருந்த நேரம். அதனால் அதை பாட்டிலேயே வரிகளாக்கி "எந்நாளும் `தண்ணி'யிலேயேதான் எங்க பொழப்பு இருக்குது ரா... ரா.... ரா...'' என்று எழுதினார்.
சினிமாவில் `கேட்டது கிடைக்கும்' என்பது அப்பாவிடம்தான். இயக்குனர்கள் எந்த மாதிரி விரும்புகிறார்களோ, அந்த மாதிரி பாடல்களை கொடுப்பார். ஒருமுறை லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தனது "தங்கரத்தினம்'' படத்துக்கு ஒரு பாட்டு கேட்டார். பல்லவியில் "உதயசூரியன்'' என்ற வரி வரும்படி கேட்டுக் கொண்டார். அப்பாவும் "எதையும் தாங்கும் மனசு, என்னை ஏமாத்தப் பாக்குது வயசு, என் இதயவானிலே உதயசூரியன் எழுந்ததுதான் புதுசு'' என்று எழுதிக் கொடுத்தார்.
அப்பா பிசியான கவிஞராக இருந்த நேரத்தில் கவிஞர் கண்ணதாசனும் பாட்டெழுத வந்து விட்டார். அவர் அப்போது "மாலையிட்ட மங்கை'' என்ற படத்தையும் தயாரித்தார். அந்தப் படத்திற்கு பாட்டு எழுத அப்பாவை கேட்டார். ஆனால் அப்பா இருந்த `பிஸி'யில் அவரால் பாட்டெழுதி கொடுக்க முடியாமல் போயிற்று. இதில் கண்ணதாசனுக்கு அப்பா மீது வருத்தம்.
அந்தக் காலத்தில் `கதை, வசனம், பாடல்கள் ஒருவரே' என்ற நிலையை துவக்கி வைத்த முதல் கவிஞர் அப்பாதான். அதோடு நாடக உலகின் தந்தை என கொண்டாடப்படும் சங்கரதாஸ் சுவாமிகளை தமிழ் மண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்தவரும் அவர்தான். சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவில் `பபூன்' வேடமிட்ட சங்கரய்யரை கடைசி வரை ஆதரித்தார்.
பின்னாளில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் சமாதிக்கு சென்று குருபூஜை நடத்தி, தன்னை சங்கரதாஸ் சுவாமிகளின் `ஏகலைவன்' என்றும் அழைத்துக் கொண்டார்''
இவ்வாறு ரவீந்திரன் கூறினார்.
No comments:
Post a Comment