Saturday, October 25, 2014

என்று தணியும் இந்த சினிமா மோகம்?



சென்னை, திருநின்றவூர். தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்பே உற்சாகமாகத் தயாராகிக்கொண்டிருந்தது லட்சுமி திரையரங்கம். ‘கத்தி’ வரப்போகிறதே?

திருநின்றவூர்க்காரர்களுக்கும் ஸ்ரீ லட்சுமி திரையரங்குக்கும் ஒரு தனிப் பிணைப்பு உண்டு. ஆரம்ப நாட்களில், இங்கே இரண்டு திரையரங்குகள் இருந்தன. சாயங்கால நேரத்தில் படம் காட்டும் டூரிங் டாக்கிஸ் ரகத்தைச் சேர்ந்தவை அவை. அந்த நாட்களில் பகலில் படம் பார்க்க வேண்டும் என்றால், திருவள்ளூருக்கோ ஆவடிக்கோதான் செல்ல வேண்டும். முதல்முதலில் 4 காட்சி திரையரங்காகக் கொண்டுவரப்பட்ட முழுமையான திரையரங்கம் ஸ்ரீ லட்சுமி.

எம்ஜிஆருக்கான காத்திருப்பு

“கிருஷ்ணன் அண்ணன் பார்த்துப் பார்த்துக் கட்டின சினிமா கொட்டகை இது. ‘நம்மூர் ஒண்ணும் ஏப்பசாப்ப ஊர் இல்லய்யா. மெட்ராஸ் கொட்டகை மாரி இங்கெயே ஒரு சினிமா கொட்டகையைக் கொண்டாரணும். எல்லா வசதியோடயும் புதுப் படங்களை நம்மூர்க்காரங்க பார்க்கணும்’னு சொல்லுவார் கிருஷ்ணன் அண்ணன்.

பார்த்தவங்க எல்லாம் அசர்ற மாரி 1987-ல இந்தக் கொட்டகையைக் கட்டினார். எம்ஜிஆரை வெச்சித்தான் திறக்கணும்னு கூப்பிட்டுருந்தார். எம்ஜிஆர் ஒப்புக்கிட்டார். ஆனா, உடம்புக்குச் சொகமில்லைன்னு நாளு ஓடிக்கிடே இருந்துச்சு. நம்ப மாட்டீங்க. ஆறு மாசம் சும்மாவே பூட்டிப் போட்டுருந்தார், பாருங்க.

ஒரு கட்டத்துல, எம்ஜிஆருக்கு ரொம்பவும் சொகமில்லாம போகவும் ஜெயலலிதாவை வெச்சித் திறக்க முயற்சி செஞ்சார். ஆனா, அப்போ அவங்க எந்தப் பொது நிகழ்ச்சியிலும் கலந்துக்கிறதுல்லைன்னு முடிவெடுத்திருந்தாங்க. அப்புறம், அமைச்சர் வி.வி. சாமிநாதன் வந்து திறந்துவெச்சார்.

புதுப் படம் போடுறது மட்டும் இல்ல; இந்தத் தொழில்ல என்னா தொழில்நுட்ப வசதி வந்தாலும் இங்கேயும் அதை கிருஷ்ணன் கொண்டாந்திருவார்” என்று  லட்சுமி திரையரங்கச் சரித்திரத்தைச் சொல்கிறார்கள் திருநின்றவூர்க்காரர்கள்.

தலைக்கு வந்த கத்தி

தீபாவளிக்கு ‘கத்தி’ படத்தை எடுத்திருந்தார் கிருஷ்ணன். தன்னுடைய 75 வயதிலும் அசராமல் திரையரங்குக்கு வந்து வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்தார். காலை முதல் காட்சி 11.30 மணிக்குத் தொடங்கவிருந்தது. அதற்கும் சில மணி நேரத்துக்கு முன்பே விஜய் ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்தது. பண்டிகை உற்சாகம், சினிமா மோகம். கூடவே, பலருக்கு உள்ளே போதையும் புகுந்திருந்தது. நெருக்கியடித்துக்கொண்டும், கூச்சலிட்டுக் கொண்டும் அரங்குக்குள் புகும் ஆவேசத்தில் இருந்தனர்.

கடும் கூச்சலைக் கேட்ட கிருஷ்ணன் தன்னுடைய அறையை விட்டு வெளியே வந்தார். “யப்பா, கொஞ்சம் நிதானமா இருங்கப்பா... பொறுமையா வந்தா எல்லாரும் சந்தோஷமா படம் பார்க்கலாம். இப்பிடி அடிச்சிப்புடிச்சிக்கிட்டு வந்தா, ஒருத்தர் மேல ஒருத்தர் மோதி அடிகிடி பட்டுற போதுப்பா” என்று சொல்லியவாறே அரங்கம் உள்ளே நுழையும் கதவைத் திறக்கச் சொன்னார்.

ஆவேசக் கூட்டத்தின் காதில் இதெல்லாம் விழவே இல்லை. கதவு திறந்தது. கூட்டம் ஆர்ப்பரித்துக்கொண்டு ஒருவர் மீது ஒருவர் ஏறிச் செல்லும் வகையில் உள்ளே புகுந்தது. கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு, தடுப்புகளைத் தாண்டிக் குதித்துக்கொண்டு பாய்ந்த கூட்டத்தில் நெரிபட்டு, சுவரோரமாய்த் தள்ளப்பட்டார் பெரியவர் கிருஷ்ணன். உடைந்த கண்ணாடிகளில் ஒரு பெரும் துண்டு கிருஷ்ணன் தலையில் விழுந்தது. ரத்தச் சகதியில் விழுந்த கிருஷ்ணன் அலறினார். இதெல்லாம் சினிமா வெறி கொண்ட கூட்டத்தின் காதில் விழுமா?

அந்தப் பெரியவரைக் கீழே போட்டு மிதித்து, மேலேறித் திரையை நோக்கி ஓடியது ரசிகர்கள் கூட்டம். திரையரங்க ஊழியர்கள் கிருஷ்ணனை மீட்கும்போது, உயிர் மட்டும் உடலில் ஒட்டிக்கொண்டிருக்க அவர் நைந்துபோயிருந்தார். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட சில மணி நேரங்களில் அதுவும் பறிபோனது.

ரசனையும் கற்பதும் கல்வி

கிருஷ்ணனின் சகோதரர் முனுசாமியிடம் பேசினேன். “எங்க குடும்பம் விவசாயக் குடும்பம். ஊருல சினிமா பார்க்க ஒரு நல்ல இடம் இருக்கணும்னுதான் எங்கண்ணன் இதைக் கட்டினார். டிவி சேனல்கள், திருட்டு விசிடின்னு இன்னைக்கெல்லாம் ஒரு சினிமா தியேட்டர் நடத்துறது சாதாரணமான விஷயமா இல்லை. எல்லாருமே கல்யாண மண்டபங்களாவும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸாவும் மாத்திட்ட காலத்துலகூட, இதை நல்ல சினிமா தியேட்டரா பராமரிச்சுக்கிட்டிருந்தார் எங்கண்ணன். ஒரு முறை எங்க ஊருக்கு வந்த ஜெயலலிதாம்மாகூட, ‘இந்த மாதிரி சின்ன ஊர்ல எப்படி இப்பவும் துணிஞ்சு தியேட்டர் நடத்துறீங்க’ன்னு கேட்டார். அவருக்கு இந்தத் தொழில்ல அப்படி ஒரு ஈடுபாடு.”

அதற்கு மேல் பேச முடியாமல், தொண்டை அடைக்க குனிந்துகொள்கிறார் முனுசாமி.

“சினிமா நம்ம வாழ்க்கையில ஒரு அங்கம் ஆயிடுச்சு. ஆனா, எதை ரசிக்கவும் ஒரு படிப்பு தேவைப்படுது. எவ்ளோ படிச்சாலும் ஒரு பொது இடத்துல எப்படி நடந்துக்கணும்கிறதை நம்மள்ல பலர் கத்துக்கிறதே இல்லை. நம்மளோட வரைமுறை இல்லாத உற்சாகக் கொண்டாட்டம் பல சமயங்கள்ல எங்கேயோ யாரையோ காயப்படுத்ததான் செய்யுது. இன்னைக்கு அது ஒரு உயிரையே எடுத்துட்டு” என்கிறார் சமூக ஆர்வலர் தரணிதரன்.

திரையரங்கம் சென்றபோது அடைக்கப்பட்டிருந்தது. உள்ளே மறுநாள் காட்சிக்காகச் சீரமைத்துக்கொண்டிருக் கிறார்கள் ஊழியர்கள். கிருஷ்ணனின் ரத்தத்தைக் கழுவிக் கொண்டிருக்கிறார் ஒரு ஊழியர். இந்த ரத்தத்துக்கு யார் காரணம் என்பதை யோசிக்கும் நிலையில்கூட நம் ரசிகர்கள் இல்லை என்பதுதான் துரதிர்ஷ்டம்!

- ப. முரளிதரன்,

தொடர்புக்கு: muralidharan.p@thehindutamil.co.in

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024