கணக்கு என்றாலே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமில்லை, பலருக்கும் கசப்புதான் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் கணக்குகளை எளிமையாகக் செய்து பார்த்திட உதவ ஓர் இணையதளம் இருக்கிறது.
இந்த இணையதளத்தில் பரப்பளவு (Area), புள்ளியியல் (Statistics), முக்கோணவியல் (Trigonometry), பகுப்பாய்வு வடிவியல் (Analytical Geometry), எண்கள் (Numbers), அணிகள் (Matrix), இயற்கணிதம் (Algebra), மாற்றிகள் (Conversions), நிற மாற்றிகள் (Colour Converters), நாள் மற்றும் கிழமை (Date and Day), அடமானம் (Mortgage), அலகு மாற்றங்கள் (Unit Conversions), மாற்றக் காரணிகள் (Conversion Factors), உடல்நலம் (Health), இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), வானிலை (Weather), மருத்துவம் (Medical), இயந்திரவியல் (Mechanical), மேலான கணக்கீட்டு கருவிகள் (Top Calculators) எனும் முதன்மைத் தலைப்புகள் உள்ளன.
வடிவக் கணக்குகள்
பரப்பளவு எனும் தலைப்பில் சொடுக்கினால் சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம், நாற்கரம் எனப் பல வடிவங்களுக்கான எளிமையான கணக்கீட்டு கருவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. நமக்குத் தேவையான வடிவத்தினைத் தேர்வு செய்தால் அந்த வடிவத்திற்கான சில கணக்கீட்டு முறைகள் அதற்கான வழிமுறைகள் (Formula) உடன் கிடைக்கிறது.
புள்ளியியல் எனும் தலைப்பில் சொடுக்கினால் புள்ளியியல் தொடர்பான பல்வேறு கணக்கீட்டுக் கருவிகள் கிடைக்கின்றன. இந்தக் கருவிகளில் நமக்குத் தேவையான கணக்கீட்டுக் கருவியைத் தேர்வு செய்து சொடுக்கினால் கிடைக்கும் கணக்கீட்டுக் கருவியின் கீழுள்ள காலிப்பெட்டியில் நம்மிடமுள்ள அளவீடுகளை உள்ளீடு செய்து நமக்குத் தேவையான விடையை உடனடியாகப் பெற முடியும்.
எண் கணிதம்
எண்கள் எனும் தலைப்பில் சொடுக்கினால் எண்கள் தொடர்பான கணக்குகளுக்கான பல கணக்கீட்டு கருவிகள் கிடைக்கின்றன. வர்க்கமூலம் (Square Root), சதவிகிதம் (Percentage), தசமப் பின்னம் (Decimal Fraction), மறுநிகழ்வுப் பின்னம் (Recurring Fraction), மடக்கைக் கணக்கீட்டு கருவி (Logarithmic Calculator), கூட்டு வட்டி (Compound Interest), ரோமானிய எண்கள் (Roman Numbers), தங்க விகிதக் கணக்கீட்டு கருவி (Golden Ratio Calculator) என்பது போன்று பல தலைப்புகளில் கணக்கீட்டு கருவிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தக் கணக்கீட்டு கருவிகளில் தேவையானதைத் தேர்வு செய்து அதற்குள் இருக்கும் காலிப்பெட்டிகளில் நம்மிடமுள்ள அளவுகளை உள்ளீடு செய்து அதற்கான விடையைப் பெறலாம்.
வேடிக்கைக் கணக்குகள்
நிற மாற்றிகள் எனும் தலைப்பில் சொடுக்கினால் வேடிக்கைக் கணக்குகள் எனும் தலைப்பில் விலங்குகளின் வேகம் (Animal Speed), பீர் இழப்பு (Beer Loss) எனும் இரு கணக்கீட்டு கருவிகள் கிடைக்கின்றன. இதில் விலங்குகளின் வேகம் எனும் கணக்கீட்டு கருவியில் சொடுக்கினால் தூரம் எனும் தலைப்பில் ஒரு காலிப்பெட்டி கிடைக்கிறது. இதனருகில் மைல், கிலோமீட்டர், மீட்டர் எனும் அளவுகள் கொடுக்கப் பட்டுள்ளன.
காலிப்பெட்டியில் தூரத்தினை உள்ளீடு செய்து அதற்குரிய அளவையும் தேர்வு செய்து கீழுள்ள முடிவு எனும் பொத்தானை அழுத்தினால் சிங்கம், சிறுத்தைப் புலி, டயனோசர், யானை, வரிக்குதிரை, முயல், கங்காரு, பூனை, நரி, அணில், பன்றி, ஆமை, நத்தை, எறும்பு ஆகியவைகளின் பெயர்கள் கொண்ட பட்டியல் இடம் பெற்றுள்ளது. இதன் வலப்புறம் பட்டியலில் குறிப்பிட்டுள்ள விலங்குகள் உள்ளீடு செய்த தூரத்தைக் கடக்க எடுத்துக் கொள்ளும் காலம் மணி: நிமிடம்: வினாடி: மி.வினாடி எனும் அளவுகளில் தரப்பட்டுள்ளன. அதற்கடுத்து ஒவ்வொரு விலங்கும் சராசரியாக ஒரு மணி நேரத்தில் கடக்க எடுத்துக் கொண்ட தொலைவும், அதற்கடுத்து விலங்குகள் ஓட்டத்தில் பெற்ற இடத்தின் மதிப்பும் தரப்பட்டுள்ளன. பீர் இழப்பு எனும் தலைப்பில் சொடுக்கி அதில் கேட்கப்பட்டுள்ள அளவீடுகளை உள்ளீடு செய்து முடிவுக்கான பொத்தானை அழுத்தினால் விலை வடிவிலான இழப்புகள், வாரம், மாதம் கால அளவுகளிலான இழப்புகள் மற்றும் மொத்த இழப்புகள் போன்றவை கிடைக்கின்றன.
இதுபோல முக்கோணவியல், பகுப்பாய்வு வடிவியல், அணிகள், இயற்கணிதம், மாற்றிகள் எனும் தலைப்புகளிலும் கணக்கீட்டுக் கருவிகள் கிடைக்கின்றன. தேவையான கணக்கீட்டுக் கருவியைத் தேர்வு செய்து அங்குள்ள காலிப்பெட்டிகளில் நம்மிடம் உள்ள அளவுகளை உள்ளீடு செய்து நமக்குத் தேவையான விடையைப் பெற முடியும்.
மொத்தத்தில் இந்த இணைய தளம் பல்வேறு கணக்கீட்டுக் கருவிகளைக் கொண்டு அனைவருக்கும் பயன் தருவதாக உள்ளது. இந்த இணையதளத்திற்குச் செல்லhttp://easycalculation.com/ எனும் இணைய முகவரியினைப் பயன்படுத்தலாம்.
- தேனி. மு. சுப்பிரமணி
No comments:
Post a Comment