Sunday, October 26, 2014

கியர் போடத் தெரியாமலே லைசென்ஸ்! ஆர்டிஓ அவலங்கள்! ர.ராஜா ராமமூர்த்தி

தமிழகத்தில் உள்ள ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளைப் பற்றி அலசுவதற்கு முன்பு, என் நண்பர் ஒருவர் ஓட்டுநர் உரிமம் வாங்கிய கதையை முதலில் படியுங்கள். அவர் சென்ற டிரைவிங் ஸ்கூலில், கற்றுக் கொள்ள வரும் ஒவ்வொருவரும் 80 கி.மீ தூரம் ஓட்டினால்தான், ஓட்டுநர் உரிமம் பெற ஆர்டிஓ அலுவலகத்துக்கு அழைத்துச் செல்வார்கள்.
ஒரு பழைய மாருதி 800 காரில், தினமும் அருகில் இருக்கும் நெடுஞ்சாலைக்குப் போய்விட்டு, அங்கிருந்து கற்றுத் தர ஆரம்பிப்பார் பயிற்சியாளர். ஒவ்வொருவருக்கும் தினம் 5 கி.மீ தூரம் நெடுஞ்சாலையிலேயே கற்றுத் தந்துவிட்டு, மூன்று வாரங்களில் உரிமம் எடுக்கத் தயாராக்கிவிடுவார்களாம். இந்த 80 கி.மீ முழுக்கவே நெடுஞ்சாலையில்தான் ஓட்டி கற்றுக்கொண்டார் அந்த நண்பர். அவருக்கு இருசக்கர வாகனமும் ஓட்டத் தெரியாது. 'எல்லாம் டெஸ்ட்டுல பாத்துக்கலாம் தம்பி, டூ வீலர்லாம் சமாளிச்சிரலாம் வாங்க!’ என்று ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
முதலில் போட்டோ எடுத்து விட்டு, தியரி டெஸ்ட் வைத்திருக்கிறார்கள். கணினியில் வைக்கப்படும் இந்தச் சோதனையில், நண்பருக்கு என ஒரு கணினி ஒதுக்கப்பட்டது. அவருடன் பயின்ற அனைவருக்கும் ஒரே சமயத்தில் தியரி டெஸ்ட் வைத்திருக்கிறார்கள். இப்படி ஒரு டெஸ்ட் இருந்ததையே ஓட்டுநர் பள்ளியில் சொல்லவில்லை என்பதால், என்ன செய்வது எனப் பதற்றத்தில் இருந்தார் நண்பர். அப்போது அங்கே வந்த ஓட்டுநர் பள்ளியின் ஏஜென்ட், வரிசையாக எல்லோர் கணினியிலும் சரியான பதிலைக் கொடுத்துவிட்டு, 'டெஸ்ட் முடிஞ்சுது, கீழே போய் ஓட்டிட்டு வாங்க’ என்று  சொல்லிவிட்டார். அருகிலேயே டெஸ்ட் ட்ராக்கெல்லாம் இருக்க, அதை விட்டுவிட்டு எதிரே இருந்த பொட்டல் காட்டில் ஓட்டச் சொன்னார்களாம். அவர்கள் பழகிய காரிலேயே ஏறிக்கொண்டார் போக்குவரத்துத் துறை ஆய்வாளர்.
முதல் வாய்ப்பு நண்பருக்கு. 'தம்பி, எங்க கார எடுங்க, பார்க்கலாம்’ என்று சொல்ல.. காரை நேர்க்கோட்டில், மூன்று கியர்கள் வரை ஓட்டிக் காண்பித்திருக்கிறார் நண்பர். அடுத்த வாய்ப்பு, நண்பருடன் கார் ஓட்டப் பழகியவருக்கு. 'தம்பி, காரை ரிவர்ஸ் யு டர்ன் போட்டு, கிளம்பின இடத்துக்கே வாங்க பார்ப்போம்' என்றபோதுதான் இருவருக்குமே உறைத்திருக்கிறது. அவர், ரிவர்ஸ் கியர் போட்டு, காரை நகர்த்த முயல, இன்ஜின் ஸ்டால் (ஆஃப்) ஆகிக்கொண்டே இருந்தது. இதேபோல் மூன்று முறைக்கு மேல் நடக்க, பொறுமையிழந்த ஆய்வாளர், 'நீ அடுத்த வெள்ளிக் கிழமை வாப்பா, பாஸ் பண்ணிவிட முடியாது’ என்றார். காரணம், கடைசிவரை நண்பருக்கும், அவருடன் ஓட்ட பழகியவருக்கும் ரிவர்ஸில் காரை நகர்த்துவது பற்றி ஓட்டுநர் பள்ளியில் சொல்லிக் கொடுக்கவே இல்லை. ரிவர்ஸ் கியரே போடத் தெரியாத என் நண்பர் டெஸ்ட்டில் பாஸ் ஆக, அவருடைய நண்பர் ஃபெயில் ஆனார்.
ஆக, இப்படித்தான் முக்கால்வாசிப் பேர் ஓட்டுநர் உரிமம் வாங்குகிறார்களா? தமிழகத்தில் உள்ள ஓட்டுநர் பள்ளிகள் எப்படி இருக்கின்றன? தமிழ்நாடு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஏ.கே.ஜேம்ஸ் ஜெயசீலனிடம் கேட்டோம்.
'தமிழகத்தில் மட்டும் 1,500 ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் இருக்கின்றன. இதில் கட்டுக்கோப்பாக ஒழுங்காகச் சொல்லித் தருவது 600 ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் மட்டுமே! சென்னையில் 150 பள்ளிகள் ஒழுங்காகக் கற்றுத் தருகின்றன.  
நான்கு உயிரைக் கூட்டிச் செல்கிறோம், வெளியில் நாற்பது உயிர்கள் இருக்கின்றன என்று சொல்லிக் கொடுத்துதான் வாகனம் ஓட்ட பயிற்சியளிக்கின்றன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள். பிரச்னை என்னவென்றால், ஆசிரியர்களுக்குப் பயிற்சி இருப்பதுபோல, ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் இப்படித்தான் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று எந்த முறையான அமைப்போ, பயிற்சியோ இதுவரை இல்லை. இன்ஸ்டிடியூட் ஆஃப் ரோடு டிரான்ஸ்போர்ட்டில்கூட, எங்களுக்கு இப்படித்தான் ஓட்ட வேண்டும் என்று கற்றுத் தருகிறார்களே தவிர, 'பயிற்சியளிப்பதற்கான’ பயிற்சி எங்களுக்குத் தரப்படுவது இல்லை.
தமிழகத்தில் 15 முதல் 20 வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களில்தான் டெஸ்ட் டிராக்கே இருக்கின்றன. மற்ற அலுவலகங்கள் வாடகைக் கட்டடங்களில்தான் இயங்கி வருகின்றன. எனவே, மத்திய அரசு இதில் தலையிட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களை மேம்படுத்தி, ஓட்டுநர் பள்ளிகளுக்கும் முறையான வழிகாட்டியை ஏற்படுத்திக் கொடுத்தால், நிச்சயம் புதிய ஓட்டுநர்கள் பாதுகாப்பான முறையில் சாலையில் ஓட்ட ஆரம்பிப்பார்கள்' என்றார் ஜேம்ஸ்! 
சமீபத்தில் ஹைதராபாத்தில் மோசமான விபத்தில் சிக்கினார் நடிகர் பிரகாஷ்ராஜ். கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய லாரி ஒன்று, பிரகாஷ்ராஜின் பென்ஸ் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் மீது மோத... பயங்கர விபத்து. அப்போது அங்கே இருந்தவர்கள் யாரும் உதவி செய்யாமல், பிரகாஷ்ராஜை செல்போனில் படம் பிடிப்பதில் ஆர்வமாக இருந்திருக்கிறார்கள் என்பதுதான் சோகம். ''விபத்து நடந்தபோது காயங்களுடன் பலர் அலறிக்கொண்டு இருந்தனர். அங்கிருந்த இளைஞர்கள் யாரும் உதவ முன்வரவில்லை. எங்களைப் படம் எடுப்பதிலேயே குறியாக இருந்தனர். அவர்களின் மனிதாபிமானம் இல்லாத செயலைப் பார்த்து நான் வேதனை அடைந்தேன். இதற்குத்தானா டெக்னாலஜி வளர்ந்தது? அடுத்தவன் துயரத்தைப் படம் பிடித்துதான் அதில் நாம் சந்தோஷப்படணுமா? அடுத்தவன் கஷ்டப்படும்போது கை கொடுங்க. அதுதான் மனிதாபிமானம். 'ரோடு பப்ளிக் பிராப்பர்ட்டி. இங்கே படம் எடுக்க எவன் அனுமதியும் தேவை இல்லை’னு நினைச்சுப் படம் பிடிக்கிறாங்க போல. மனுஷங்க பப்ளிக் பிராப்பர்ட்டி இல்லையே! மொத்தத்துல மனிதநேயம் என்பதை எல்லோருமே மறந்துட்டாங்க. அதைத்தான் நான் திரும்பத் திரும்ப யோசிக்கிறேன்!'' என்றார் சோகத்துடன். சாலையும், தொழில்நுட்பமும் எப்போதும் நமக்கு எச்சரிக்கைதான்.
-நா.சிபிச்சக்கரவர்த்தி

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...