நம்ம ஊர்ல பேஸ்புக்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க தன் வயதைத் தானே கூட்டிச் சொல்லும் சிறுவர்களைத் தான் பார்த்திருப்போம். ஆனால் தன் வயதைக் குறைத்துச் சொன்னவரை யாராவது பார்த்திருக்கிறீர்களா?
சின்ன சின்ன ஆசை
அமெரிக்காவில் மின்னஸோட்டா பகுதியில் வசிக்கும் 113 வயதான அன்னா ஸ்டோஹர் என்னும் பாட்டி இதைச் செய்திருக்கிறார். ஒரு நாள் அன்னா பாட்டிக்கு ஓர் ஆசை வந்தது. அக்டோபர் 12 அன்று வரும் தனது 114-வது பிறந்த நாளன்று பல பேருடைய வாழ்த்துகளைப் பெற வேண்டும் என்பதே அந்த சின்ன ஆசை. பேஸ் புக்கில் அக்கவுண்ட் ஆரம்பித்தால் பல்லாயிரம் பேரின் “ஹாப்பி பர்த்டே” வாழ்த்தைத் தன் வால் போஸ்ட்டில் பார்த்து சந்தோஷப்படலாமே எனத் தோன்றியது.
ஆனால் பேஸ்புக்கைத் திறந்ததும் அன்னா பாட்டிக்கு ஒரு அதிர்ச்சிகரமான தகவல் காத்திருந்தது. 13 வயதை எட்டியவர்கள் முதல் 99 வயது வரைக்கும் உள்ளவர்கள் மட்டுமே பேஸ்புக்கில் இணைய முடியும் என்பதே அந்தத் தகவல். 1900-ம் வருடம் பிறந்தவர் அன்னா பாட்டி. அந்த ஆண்டு பேஸ்புக் பட்டியலில் இல்லவே இல்லை. நம்ம அன்னா பாட்டிக்கு என்ன செய்வதென்று முதலில் புரியவில்லை.
பிறகு, அட 14 வயதுதானே அதிகம்! குறைத்துவிடுவோம்! என உற்சாகமாகத் தனக்கு 99 வயது மட்டுமே ஆகிறது எனப் பதிவு செய்துவிட்டார்.
டெக்கி பாட்டி
ஆனால் 113 வயது பாட்டிக்கு எப்படி நவீன யுகத்தின் தொழில்நுட்பம் தெரியும்? பேஸ்புக் கலாச்சாரம் தெரியும்? அன்னா பாட்டியின் மகனுக்கே 85 வயசு. சமீபத்தில் சேல்ஸ் ரெப் ஒருவர் ஸ்மார்ட் போனை ஒன்றை அன்னா பாடியின் மகனிடம் விற்க, அந்த சேல்ஸ் ரெப்பை ஃபிரெண்டு புடிச்சாங்க பாட்டி. அந்த நபர் தான் பாட்டிக்கு இணையம், ஐ பாட், பேஸ்புக்னு பல தொழில் நுட்பங்களை பயன்படுத்த சொல்லிக் கொடுத்திருக்கார்.
பேஸ்புகின் முகம் மாறுமா?
ஆனால் பாட்டி சொன்ன பொய் எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது எனத் தேடிப்பார்த்தால், அமெரிக்க அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சதம் அடித்து, பின்னர் 112 வயதைக் கடந்து வாழும் 223 பேரில் முதியோர்களில் அன்னா பாட்டியும் இடம்பிடித்திருக்கிறார். அதை வைத்து பாட்டிவிட்ட டூப் அம்பலமானது. ஆனால் என்ன பெரிய பொய்? 99 வயது கடந்தவர்களும் பேஸ்புக்கில் இணைய ஆசைப்படுகிறார்கள் என்றால், அவர்களுக்கு ஏற்ற மாதிரி சமூக வலை தளம் மாறவேண்டும் இல்லையா!
No comments:
Post a Comment