Sunday, October 19, 2014

பெயரில் என்ன இருக்கிறது? By முனைவர் பா. கிருஷ்ணன்



ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் நாடகத்தில் ரோமியோவிடம் ஜூலியட் சொல்வாள்:பெயரில் என்ன இருக்கிறது? ரோஜாவை வேறு எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் மணம் வீசத்தானே போகிறது.

அண்மையில் வந்த ஒரு திரைப்படத்தில் பெற்றோர் தனக்கு வைத்த பெயரே நகைச்சுவையாக இருப்பதாக தாழ்வு மனப்பான்மையில் தத்தளிப்பான் கதாநாயகன்.

கல்லூரிக் காலத்தில் வரலாற்றுக் கற்பனை நாடகத்தில் நடித்தபோது, அரசர் தனது அரண்மனையில் ஒருவரை அறிமுகம் செய்து இவர்தான் மந்திரி.... என்று கூறத் தொடங்கியதுமே, தெரியுமே.. மந்திரி மார்த்தாண்டன்.. என்பார் வந்தவர். மன்னர் வியப்புடன் பார்க்க, எல்லா சினிமாவிலேயும் மந்திரி பெயர் மார்த்தாண்டந்தானே.. அதான்.. என்பார் வந்தவர்.

அந்த அளவுக்குத் திரைப்படங்களில் பெயர்களுக்குக் கூடப் பஞ்சம் இருந்தது ஒரு காலத்தில்.

முன்னணிக் கதாநாயகர் நடிக்கும் எந்த ஒரு படத்திலும் மாசானம், அங்குச்சாமி, பிச்சை என்று கதாநாயகர்களுக்கோ, மூக்காயீ, பொம்மி, பச்சையம்மா என்று கதாநாயகிகளுக்கோ பெயர் வைப்பது அரிதினும் அரிதாகவே உள்ளது.

பருத்தி வீரன் படத்தில் முத்தழகி, மண் வாசனையில் முத்துப் பேச்சி என்று பெயர் வைத்துள்ளதற்குக் காரணம் அவை கிராமிய படங்கள் என்பதால்தான்.

சங்க காலத்தில் எழுதப்பட்ட பாடல்கள் பிற்காலத்தில் தொகுக்கப்பட்டவை. அப்படித் தொகுக்கும்போது, 102 பாடல்களை எழுதிய புலவர்களின் பெயர்கள் தெரியவில்லை. தொகுத்தவர்கள், குறிப்பிட்ட பாடல்களில் உள்ள பாடல் வரி, அல்லது உவமை அல்லது தொடரைக் கொண்டு பாடல்களின் புலவர்களுக்குப் பெயராகச் சூட்டிவிட்டனர்.

குறுந்தொகை பாடல் ஒன்றில் முன்பின் தெரியாத தலைவன் தலைவி ஆகியோரின் நெஞ்சங்கள், காதலால் இணைவதைக் குறிப்பிடும்போது, செம்மையான மண்ணில் மழை நீர் கலப்பது போல நமது நெஞ்சங்கள் கலந்துவிட்டன என்பார் புலவர்.

செம்புலப் பெயல் நீர் போல.. என்ற அழகான உவமையைச் சொன்ன புலவருக்கு, செம்புலப் பெயல்நீரார் என்று பெயர் வைக்கப்பட்டு விட்டது.

இப்படி குப்பைக் கோழியார், கல்பொரு சிறு நுரையார், தேய்புரிப் பழங்கயிற்றினார் என்று பல புலவர்களுக்குப் பெயர்கள் அமைந்துவிட்டன. அதற்கெல்லாம் காரணம், அவர்களது பெயர்கள் தெரியாமல் போனதுதான். புலவர்கள் மீதான மரியாதை காரணமாக இப்படிப் பெயர் வைத்தார்கள்.

பேரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லாதே என்பார்கள். ஆனால், அரசியல்வாதிகளோ, தனது ஊரையே பெயராக்கிச் சொல்வதை அதிகம் விரும்புகிறார்கள்.

மதுரையைச் சேர்ந்த மாணிக்கவாசகம் கொஞ்ச நாள் மாணிக்க வாசகம் என்றும், பின்னர் மதுரை மாணிக்கவாசகம் என்றும் அழைக்கப்பட்டு, இறுதியில் மதுரையார் ஆகிவிடுவார்.

இப்படித்தான் நெல்லையார், முகவையார் என்றெல்லாம் பெயர்கள் அமைந்துவிடும்.

இன்னும் சில அரசியல்வாதிகளின் பெயர்களுக்குப் பதில் அவர்களது கட்சிப் பதவிகளே பெயர்களாகிவிடும்.

அமைச்சர் வருகிறார், எம்.எல்.ஏ. வந்துவிட்டார் என்பது அதிகாரப்பூர்வ பதவியைக் குறிப்பிடுவதாகும். ஆனால், கட்சிப் பதவியும் பெயர்களாகிவிடுகின்றன. கட்சிக்காரர்கள் வட்டம் வந்தாச்சா ஒன்றியம் வந்தாச்சா என்று பேசக் கேட்கலாம்.

இவையெல்லாம், சம்பந்தப்பட்ட பதவிகளில் இருப்பவர்களைக் குறிக்கும். எல்லோருக்குமே, தங்களது பெயரை இன்னொருவர் குறிப்பிட்டால், அதிலும் இனிஷியலுடன் கூறிவிட்டால், அளவற்ற மகிழ்ச்சி ஏற்படும்.

நீண்ட நாள் பழகி, இடையில் சில ஆண்டுகள் தொடர்பு விட்டுப் போன நபரைச் சந்தித்தபோது, எதிர்பாராமல் அவரது பெயர் மறந்துவிட்டது.

வேறு ஒருவரின் பெயரை வைத்து அவரை அழைத்தபோது, அவர் அதைத் திருத்தினார். அப்போது மிகவும் கூச்சமாக இருந்தது.

அதே சமயம் அந்த நபர், நம்மைப் பெயரிட்டு அழைத்தபோது, என் பெயரை நினைவில் வைத்திருக்கிறாரே.. என்று மகிழ்ச்சி ஏற்பட்டது.

யாரையாவது குறிப்பிட நேரும்போது, உயரமா இருப்பாரே.. கண்ணாடி போட்டிருப்பாரே.. ரயில்வேயிலே வேலை செய்யறாரே.. ஸ்கூட்டர்லே வருவாரே.. பிள்ளையார் கோயில் அருகே வீடு வாங்கியிருக்காரே.. அவரைத் தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள்..

சுமார் ஐந்து நிமிடம் குழம்பிவிடுவார்.

அதே சமயம், வி.எஸ். ராமநாதனைத் தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள்.. அடுத்த கணமே, தெரியும் அல்லது தெரியாது என்று ஏதாவது பதில் வரும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024