Friday, October 31, 2014

"கோவைத்தம்பியை மட்டும் வரச்சொல்லுங்கள். சி.எம். கூப்பிடுகிறார்''



"கோவைத் தம்பி தயாரித்த பயணங்கள் முடிவதில்லை" படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர். எதுவும் பேசாமல் எழுந்து சென்றதால், கோவைத்தம்பி பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

"பயணங்கள் முடிவதில்லை'' கோவைத்தம்பியின் முதல் படம். தன்னுடைய "தலைச்சன்'' குழந்தையை, தன் தலைவர் எம்.ஜி.ஆர். பார்த்து வாழ்த்துக் கூறவேண்டும் என்று விரும்பினார்.

எம்.ஜி.ஆரை சந்தித்தார். "அண்ணே! ஒரு சினிமாப் படம் தயாரித்திருக்கிறேன். "பயணங்கள் முடிவதில்லை'' என்பது படத்தின் பெயர். தாங்கள் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

"குடும்பத்தோடு வரலாமா?'' என்று சிரித்துக்கொண்டே எம்.ஜி.ஆர். கேட்டார்.

கோவைத்தம்பி அசந்துவிட்டார். "என்ன அண்ணா இப்படிக் கேட்கிறீர்கள்? இது எனக்கு எவ்வளவு பெருமை! எல்லோரும் வாருங்கள்!'' என்றார்.

1982 பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் சென்னையில் அரங்கண்ணலுக்கு சொந்தமான ஆண்டாள் பிரிவிï தியேட்டரில், எம்.ஜி.ஆருக்காக "பயணங்கள் முடிவதில்லை'' படம் திரையிடப்பட்டது. மனைவி ஜானகி அம்மாளுடன் எம்.ஜி.ஆர். வந்திருந்தார். அமைச்சர்கள் அனைவரும் வந்திருந்தார்கள்.

படம் ஓடத்தொடங்கியது. படத்தைப் பார்த்ததும் எம்.ஜி.ஆர். என்ன சொல்வாரோ என்று கோவைத் தம்பியின் மனம் `திக் திக்' என்று அடித்துக்கொண்டது.

`கிளைமாக்ஸ்' வந்தபோது, அரங்கத்தில் பூரண அமைதி நிலவியது. ஆனால், லேசாக விம்மல் ஒலியும் கேட்டது. அது ஜானகி அம்மாளிடம் இருந்து வந்த விம்மல் ஒலிதான்.

இதன்பின் என்ன நடந்தது என்பதை கோவைத்தம்பி கூறுகிறார்:

"படம் முடிந்து, தியேட்டரில் லைட் போடப்பட்டது. தலைவர் எம்.ஜி.ஆர். உடனடியாக எழவில்லை. சிறிது நேரம் மவுனமாக அமர்ந்திருந்தார்.

பின்னர் எழுந்தார். தன்னைப் பார்த்து கும்பிட்டவர்களுக்கெல்லாம், அமைதியாக பதில் வணக்கம் செலுத்தினார். மவுனமாக காரில் வந்து ஏறினார். கார் புறப்பட்டது.

எல்லோரையும் பார்த்து கும்பிட்டவர், என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்படியே திகைத்துப்போய் நின்றேன்.

அருகில் நின்ற சில அமைச்சர்கள், "நாங்கள் அப்போதே சொன்னோமே, கேட்டாயா? தலைவரைக் கூப்பிடாதே, இந்தப்படம் எல்லாம் அவருக்குப் பிடிக்காது என்று சொன்னோமே கேட்டாயா!'' என்று என்னிடம் கூறினார்கள்.

சற்று தூரம் சென்ற தலைவரின் கார் நìன்றது. செக்ïரிட்டி மட்டும் இறங்கி எங்களை நோக்கி ஓடிவந்தார். "கோவைத்தம்பியை மட்டும் வரச்சொல்லுங்கள். சி.எம். கூப்பிடுகிறார்'' என்று அமைச்சர்களைப் பார்த்து சொன்னார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பதற்றத்துடன் ஓடினேன். எம்.ஜி.ஆரைப் பார்த்துக் கும்பிட்டேன்.

"இந்தப் படத்தின் மூலம், இன்னும் ஒரு வாரத்தில் புகழின் உச்சிக்கு சென்று விடுவாய். அந்த அளவுக்கு படம் சிறப்பாக இருக்கிறது. வரப்போகிற புகழைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டியது உன் பொறுப்பு. ஒவ்வொரு அடியையும் ஜாக்கிரதையாக எடுத்து வை. வெற்றியும், புகழும் நிரந்தரமல்ல. அதை, உன் விவேகத்தால் தக்க வைத்துக் கொள்'' என்று கூறினார்.

என் கண் கலங்கி விட்டது. எம்.ஜி.ஆரின் கார் புறப்பட்டு, பார்வையில் இருந்து மறையும் வரை, அதையே பார்த்துக் கொண்டு நின்றேன்.

தலைவர் கூறிய வார்த்தைகளை வேதவாக்காகக் கொண்டேன். கலைத்துறையில் என் பயணத்தை நம்பிக்கையுடன் தொடர்ந்தேன்.

என் இரண்டாவது படத்தை, மணிவண்ணன் டைரக்ஷனில் தயாரித்தேன். "இளமைக் காலங்கள்'' என்பது, படத்தின் பெயர். மோகனும், சசிகலாவும் நடித்தார்கள்.

18-8-1983-ல் படம் வெளிவந்தது. இந்தப் படமும் வெற்றிப்படம்தான். 200 நாட்கள் ஓடியது.

இரண்டாவது படமும் வெற்றிப்படமாக அமைந்ததால், கலைத்துறையில் எனது ஈடுபாடு அதிகமாகியது. அடுத்த படத்தைத் தயாரிக்கத் தொடங்கினேன்.

முதல் படமான "பயணங்கள் முடிவதில்லை'' டைரக்ட் செய்து பெரும் வெற்றியடைய வைத்த டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன் டைரக்ஷனில் சிவகுமார் - அம்பிகா ஆகியோரை வைத்து "நான் பாடும் பாடல்'' என்ற படத்தைத் தயாரித்தேன். இந்தப்படம் வேகமாக வளர்ந்தது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் என்ற ஊரில் எடுத்தோம். இரண்டு கிளைமாக்ஸ் காட்சிகளை சுந்தர்ராஜன் வைத்திருந்ததால் எதை தேர்வு செய்வது என்பதில் எனக்கு மிகவும் குழப்பம் ஏற்பட்டது.

எந்த "கிளைமாக்சை'' வைத்துக் கொள்வது என்று நானும் சுந்தர்ராஜனும் கடும் விவாதம் நடத்திக் கொண்டிருந்தோம். கதாநாயகி அம்பிகா இறப்பது போல அமைந்தது ஒரு கிளைமாக்ஸ். சிவகுமார் தொட்டு பொட்டு வைத்த நெற்றியை அம்பிகாவே நெருப்புக்கட்டையை எடுத்து சூடு வைத்துக் கொள்வது போல மற்றொரு கிளைமாக்ஸ்.

இரண்டு கிளைமாக்ஸ்களில் எதை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற பயம் எங்களுக்குள் ஏற்பட்டுவிட்டதால், ரீ ரிக்கார்டிங் செய்யும்போது இசையமைப்பாளர் இளையராஜா முடிவிற்கே விட்டு விடுவோம் என்று இருவரும் தீர்மானித்தோம்.

அப்படி இளையராஜா தேர்ந்தெடுத்த கிளைமாக்ஸ்தான் `நான் பாடும் பாடல்' கிளைமாக்ஸ். சிவகுமார் பொட்டு வைத்த நெற்றியை அம்பிகா - தானே சுட்டுக்கொள்வது போன்ற இந்த கிளைமாக்ஸ் காட்சியால் படம் சக்கை போடு போட்டு பிரமாண்ட வெற்றி பெற்றது. படம்

தொடர்ந்து மூன்று படங்களும் வெற்றிகரமாக ஓடியதால் திரையுலகிலும் சரி, மக்கள் மத்தியிலும் சரி, மதர்லேண்ட் பிக்சர்ஸ் பெயர் மிகவும் பிரபலமடைந்தது.

இவ்வாறு கோவைத்தம்பி கூறினார்.''

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024