திராவிட இயக்க எழுச்சிக்கு நாடகமும் சினிமாவும் ஆற்றல்மிக்க பங்களிப்பைத் தந்திருக்கின்றன. பெரியாரின் கருத்துகளைத் தனது எழுத்துக்களில் வெளிப்படுத்திய அண்ணாவும், அவரது தொடர்ச்சியாக எழுதிய மு. கருணாநிதியும் திராவிட இயக்கத்தின் கருத்துகளைப் பரப்பும் முக்கிய ஆயுதமாகத் திரைப்படத்தைப் பார்த்தார்கள்.
இவர்களது எழுத்தையும், கருத்துகளையும் மக்களிடம் கொண்டுசென்ற நடிகர்களுக்கும், இயக்குநர்களுக்கும், திராவிட இயக்கத்தின் வெற்றியில் கணிசமான பங்கிருப்பதை மறுப்பதற்கில்லை.
முக்கியமாக டி.வி. நாராயணசாமி, கே.ஆர். ராமசாமி, என்.எஸ்.கிருஷ்ணன், எஸ். எஸ். ராஜேந்திரன், சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., எம்.ஆர். ராதா போன்ற கலைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது. வேலூர் நேஷனல் பிக்ஸர்ஸ் நிறுவனத்தின் முதலாளி பெருமாள் முதலியார் தயாரிப்பில் சிவாஜி கணேசன் கதாநாயகனாக அறிமுகமான பராசக்தியும் (1952), இரண்டாண்டுகள் கழித்து அதே பெருமாள் முதலியார் தயாரிப்பில் எம்.ஆர்.ராதா கதாநாயகனாக நடித்த ரத்தக் கண்ணீர்(1954) திரைப்படமும் தணிக்கையில் கடுமையான வெட்டுகளுக்குப் பின் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இரண்டு படங்களுமே கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் உருவானவை.
பராசக்தியில் கருணாநிதியின் புரட்சிகரமான வசனமும், சிவாஜியின் புத்துணர்ச்சி ததும்பிய நடிப்பும் தமிழ்ப் பார்வையாளர்களைப் புதிய அனுபவத்துக்கு ஆட்படுத்தின என்றால் ரத்தக் கண்ணீர் எம். ஆர். ராதா எனும் கலகக்கார நடிகனைப் பெரும் வீச்சுடன் அடையாளம் காட்டியது.
நாடகத்தை காதலித்த கலைஞன்
சினிமா எனும் ஊடகம் செல்வாக்கு பெற்று எழுந்து நின்ற காலத்தில் அதற்கு இணையாக நாடகத்துறை கொடிகட்டிப் பறந்த நாற்பதுகளில் எம்.ஆர்.ராதா புகழ்பெற்ற நாடக நடிகராக இருந்தபோது ‘ராஜசேகரன்’ என்ற படத்தில் நடிக்க வைப்பட்டார். 1942 வரை ஐந்து படங்களில் நடித்த ராதா அதன் பிறகு, திரையுலகம் தனக்கான இடமல்ல என்று நாடகத் துறையின் மீது அதீத நம்பிக்கை கொண்ட கலைஞனாக நாடக மேடைக்கே திரும்பினார்.
ராதாவின் நாடகங்களில் முதலில் அவருக்குப் பெரும் புகழை ஈட்டித்தந்தது ‘இழந்த காதல்’ என்னும் நாடகம். அதில் ஜெகதீஷ் என்னும் கதாபாத்திரத்தில் ராதாவின் நடிப்பைத் தமிழர்கள் கொண்டாடி னார்கள். ஆனால் ரத்தக் கண்ணீர் நாடகம் வந்த பிறகு ராதாவின் கலை வாழ்க்கை ரத்தக் கண்ணீருக்கு முன் ரத்தக் கண்ணீருக்குப் பின் என இரண்டாகப் பிரிந்தது.
சுயமரியாதை இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்த திருவாரூர் கே.தங்கராசு கதை, வசனத்தில் உருவான ரத்தக் கண்ணீர் நாடகம் 1946-ம் ஆண்டு முதல்முறையாக அரங்கேறியது. அதில் எம்.ஆர்.ராதாவின் நடிப்பைப் பார்த்து நாடக ரசிகர்கள் பிரமித்துப் பாராட்டினார்கள். நாடகம் பார்ப்பதே வெட்டிவேலை என்று அதுவரை சொல்லி வந்தவர்களையெல்லாம் நாடகக் கொட்டகைக்கு இழுத்துவந்த நாடகம் அது. பட்டிதொட்டியெங்கும் அதைப் போட்டுக் கலக்கினார் ராதா.
அண்ணாவின் பாராட்டு
1950, டிசம்பர் 27 அன்று சென்னை ஒற்றைவாடை நாடக அரங்கில் ரத்தக் கண்ணீர் நாடகத்தின் முகாமை இரண்டாவது முறையாகத் தொடங்கினார் ராதா. முதல்காட்சிக்குத் தலைமை தாங்க வந்திருந்தார் அப்போது ‘திராவிட நாடு’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்த அறிஞர்அண்ணா. ரத்தக் கண்ணீர் நாடகம் முடிந்ததும் ஒரு மணிநேரம் பாராட்டிப் பேசினார்.
“நண்பர் ராதா அவர்கள் நடித்த ‘குஷ்டரோகி’ வேஷத்தை நடிக்கத் தமிழ் நாட்டிலே வேறு எவரும் கிடையாது. அது மட்டும் அல்ல. வட நாட்டிலே இருக்கிற பிரபல நடிகர்களாலும் இத்தகைய வேஷத்தை நடிக்க முடியாது. இது ராதாவும் நானும் நண்பர்களாக இருக்கிற காரணத்தினாலே சொல்லுகிற புகழுரை அல்ல. நான் அதனைச் சொல்வது, நாடகத்திலே எனக்குப் பற்று இருப்பதினாலே, அனுபவம் இருப்பதினாலே.
தமிழ்நாட்டிலே, ராதாவின் கம்பெனிதான் இத்தகைய நாடகத்தை நடத்த முடியும். குஷ்டரோகியாக, ராதா, கீழே விழுந்து கிடந்த சிகரெட்டை எடுக்க, நடந்து சென்ற காட்சியை மேல்நாட்டுப் படங்களில் நான் பார்த்திருக்கிறேன். அதுகூட அவ்வளவு நன்றாக நடிக்கப்படவில்லை. அந்த நடிப்பை இயற்கையாக நண்பர் ராதா நடித்துக் காட்டினார்.
நண்பர் ராதா அவர்களின் இந்த நாடகத்தில் நாயனுக்குக் கஷ்டம் வந்தது விதியினாலா? இதை ராதாவே, நாடகத்தில் கேட்டார்; “விதியா? இது எல்லாம் தலைவிதியா?” என்று கேட்டு, அவரே பதிலும் கூறினார், ‘நம்ம திமிருக்குப் பெயர் தலைவிதியா?’ என்று.
இந்தப் புரட்சிகரமான கருத்தைப் புராண நாடகங் களிலே கண்டிருக்க முடியாது; சமுதாய நாடகங்களிலேகூட விதியைப் பற்றி இவ்வளவு, தைரியமாகக் கூறப் பலருக்குத் துணிவு இருக்காது” என்று பேசியதோடு மட்டுமல்ல, திராவிட நாடு பத்திரிகையிலும் பலமுறை ரத்தக் கண்ணீர் பற்றி எழுதினார் அண்ணா.
மாற்று இல்லாத திரைவடிவம்
அப்படிப்பட்ட ரத்தக் கண்ணீர் திரைவடிவம் பெற்று 25.10.1954 அன்று தமிழகம் முழுவதும் வெளியாகி 60 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
எம்.ஆர். ராதா எனும் கலைஞன் அசலான தனது தனிபாணி நடிப்பின் மூலம் சமூகத்தின் மூட நம்பிக்கைகளையும் அவலங்களையும் கடுமையாச் சாடிய இந்தப் படத்திற்கு இணையாக இன்னொரு திரைப்படம் இன்னமும் தமிழ் சினிமாவில் வரவில்லை. இன்றும் ரத்தக் கண்ணீர் தமிழகத்தின் எந்தச் சின்ன ஊரில் திரையிடப்பட்டாலும் கைதட்டல்களும், விசில்களும் பறக்க உற்சாகம் குறையாமல் ரசிக்கப்படும் ஒரே படமாக இருக்கிறது. இன்று பல படங்களில் அரசியலை மூட நம்பிக்கையைக் கிண்டலடிக்கும் பகடிக் காட்சிகள் வருகின்றன. ஆனால் இவற்றிற்கெல்லாம் முழுமையான முன்னோடி என்றால் அது ரத்தக் கண்ணீர் படம்தான்!
வெளிநாட்டில் படித்து இந்தியா திரும்பி இருப்பார் மோகனசுந்தரம். மேற்கத்திய கலாச்சாரங்களை அப்படியே பின்பற்றும் வெளிநாட்டு மோகம் கொண்ட கதாபாத்திரம். பெண்பித்தராக, பாலியல் தொழிலாளியின் வீடே கதி என்று இருப்பவருக்குத் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். ஆனாலும் காந்தா (எம்.என்.ராஜம்) என்ற பாலியல் தொழிலாளியே கதி என்று இருப்பார். தாய், மனைவி உட்பட யாரையும் மதிக்க மாட்டார்.
பிறகு தகாத நடத்தைகளின் விளைவாகத் தொழுநோயின் தாக்குதலுக்கு ஆளாவார். இதைக் கண்டு காந்தா அவரைவிட்டு விலகிவிட அதன் பிறகு மோகனசுந்தரத்தின் நிலை என்னவாகும் என்பதை வயிற்றைப் பதம் பார்க்கும் பிளாக் காமெடி எனும் துயர நகைச்சுவை வழியாகத் தன்னை முழுமையான சமூக சீர்த்திருத்த நடிகனாக வெளிப்படுத்தியிருப்பார் ராதா. எம்.ஜி.ஆரும் சிவாஜியும் வெற்றி நடிகர்களாக இருந்த கால கட்டத்தில் வெளியான ரத்தக் கண்ணீர் 250 நாட்களைக் கடந்து ஓடியது.
காலம் கடந்தும்…
திரை வாழ்வு நிஜ வாழ்வு இரண்டிலுமே ஒளிவு மறைவின்றி பட்டவர்த்தனமாக நடந்து கொண்ட ஒப்பிட முடியாத கலைஞனாக வாழ்ந்தார் எம்.ஆர்.ராதா
ரத்தக் கண்ணீர் படமாக வெளியான பின்பும் ராதா அதை நாடகமாக நடத்தத் தவறவில்லை. கடைசியாக 1979-ம் ஆண்டு அதில் அவர் நடித்தார். அவருடைய மறைவுக்குப் பின்னர் 1980 முதல் ராதாவின் மகனும், நடிகருமான ராதாரவி வாய்ப்பு அமையும்போதெல்லாம் அதை நடத்திவருகிறார். ராதாவால் பத்தாயிரம் முறைகளுக்குமேல் மேடையேற்றப்பட்ட ரத்தக் கண்ணீரை அப்பாவின் வழியில் நின்று ராதாரவியும் ஆயிரம் முறைகளுக்குமேல் நடத்திக் காட்டியிருக்கிறார். இன்றும் ரத்தக் கண்ணீரின் தேவை இருந்துகொண்டேதான் இருக்கிறது.
படங்கள் உதவி: ஞானம்
No comments:
Post a Comment