Friday, October 31, 2014

காலமே என்னைக் காப்பாற்று

காலமே என்னைக் காப்பாற்று

அதிகாலைக்கனவு கலைக்கும்
அலாரத்திடமிருந்தும் -

நித்தம் நித்தம்
ரத்தத்தில் அச்சேறிவரும்
பத்திரிகைச் செய்திகளின் பயங்கரத்திலிருந்தும் -

தென்னைமரத்தில்
அணில்வேடிக்கைபார்க்கும்
குழந்தை நிமிஷத்தில்
அலறும் தொலைபேசியின் அபாயத்திலிருந்தும் -

ஒளிமயமான கற்பனை உதிக்கும் வேளை
தலைமறைவாகித் தொலைக்கும் பேனாவிலிருந்தும் -

விஞ்ஞானிபோல் புத்திசெதுக்கி
முனிவன்போல் புலனடக்கித்
தும்பிபிடிக்குமொரு பொற்பொழுதில்
தொழிலைக் கெடுக்கும் தும்மலிலிருந்தும் -

காலமே
என்னைக்
காப்பாற்று

* * * * *
ஒரே ஒரு புத்தகம்படித்த
'அறிவாளி'யிடமிருந்தும் -

சிநேகிக்கும் பெரியவர்களின்
சிகரெட் புகையிலிருந்தும் -

எல்லாரும் கதறியழ
எனக்குமட்டும் கண்ணீர்வராத
இழவு வீட்டிலிருந்தும் -

காலமே
என்னைக்
காப்பாற்று

* * * * *

பயணியர்விடுதிக்
கொசுவிடமிருந்தும் -

முத்திரைவிழாத அஞ்சல்தலைகளை
உற்றுக்கிழித்துப் பயன்படுத்தும்
உலோபியிடமிருந்தும் -

கை கழுவ அமர்ந்த
சாப்பாட்டு மேஜையில்
கைகுலுங்க வரும்
கைகளிலிருந்தும்...


நோயுற்ற காலை
தனிமையிலிருந்தும்-

நோய்கள் வந்தபின்
மருந்திடமிருந்தும் -

மருந்து தீர்ந்தபின்
நோயிடமிருந்தும் -

காலமே
என்னைக்
காப்பாற்று

* * * * *

எனதுபக்கம் நியாயமிருந்தும்
சாட்சிகள் இல்லாச் சந்தர்ப்பத்திலிருந்தும் -

வருமானம் எல்லாம் தீரும் வயதில்
வரிபாக்கி கேட்கும் ஆணையிலிருந்தும் -

என்னைப் பகையாய் எண்ணும் வாசலில்
பரிந்துரைகோரும் பாவத்திலிருந்தும் -

இல்லையென்றொருவன்
தவிக்கும்பொழுதில்
இல்லையென்று நான்
தவிர்ப்பதிலிருந்தும்

காலமே
என்னைக்
காப்பாற்று

* * * * *
சக ரயில் பயணியின்
அரட்டையிலிருந்தும்
அரட்டை முடிந்ததும்
குறட்டையிலிருந்தும்

காலமே
என்னைக்
காப்பாற்று

* * * * *
தீதும் நன்றும் பிறர்தர வாரா
என்பது எனக்கு ஏற்புடைத்தென்பதால்

என்னிடமிருந்தே
என்னிடமிருந்தே

காலமே
என்னைக்
காப்பாற்று

  • கவிஞர் : வைரமுத்து

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...