Wednesday, July 1, 2015

கணக்கு, பிணக்கு, ஆமணக்கு!


கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு வெகுவேகமாக நாள்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் மாணவர்கள் புத்தகம், நோட்டுப் புத்தகங்கள் வாங்கி, ஆசிரியர்கள் பள்ளியில் கால அட்டவணை போட்டு, இந்த வகுப்பிற்கு இந்த ஆசிரியர் என்று பள்ளி ஓர் ஒழுங்குக்கு வர ஒரு வாரத்தில் இருந்து ஒரு மாதம் வரைகூட ஆகும். அந்த ஒரு மாதம் மாணவர்கள் தங்களுக்குள் அறிமுகமாகி புது வகுப்பில் ஒன்றுவதற்கான கால அவகாசமாக அமையும்.
பாடம் தவிர்த்து பிற செய்திகள் பரிமாறவும், நட்பு பாராட்டவும் உள்ள கால இடைவெளி, குறிப்பாக ஆறாம், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு. பெரும்பாலும் புதுச் சூழலில் சந்திக்க நேர்பவர்கள் இவர்கள்தான். இப்பொழுதெல்லாம் நிலைமை மாறிவிட்டது. சிறப்பு வகுப்புகள்கூட பள்ளித் திறக்கப்படும் ஜூன் முதல் தேதியே ஆரம்பமாகி விடுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் வகுப்பிற்குப் போனவுடன் மாணவர்களுடன் சுய அறிமுகப் படலம் நடக்கும். பெயர், சொந்த ஊர், முன்பு படித்த பள்ளி, பிடித்த பாடங்கள் என மாணவர்களிடம் பேச்சுப் போகும்.
யார் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவர்கள் என்றால் பெரும்பாலும், முதல் மதிப்பெண் வாங்கும் மாணவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் மாணவர்கள்தான் பதில் சொல்வார்கள். யார் ஒரு பாடத்திலும் தேர்ச்சி பெற மாட்டார்கள் என்ற கேள்விக்கும் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் மாணவர்கள்தான் பதில் சொல்வார்கள்.
நன்றாகப் படிக்கும் மாணவர்களை எழுப்பி, நீ நல்லா படிப்பியாப்பா எனக் கேட்டால், கொஞ்சமாக உடம்பை முறுக்கிக் கொண்டு ம்ம்ம்... படிப்பேன் மிஸ், கணக்குத்தான் கொஞ்சம் வராது என்பார்கள். அவர்களின் உடம்பு பின்னி முறுக்குவதற்குக் காரணம், நான் கணக்கு ஆசிரியர் என்பதும், என்னிடம் கணக்கு வராது என்று சொல்வதில் உள்ள தயக்கமும்தான்.
ஒரு பாடத்தில், இரண்டு பாடத்தில், ஐந்து பாடங்களிலும் தேர்ச்சி பெறாதவர்களை எழுப்பினாலும் கணக்குத்தான் வராது என்பார்கள். அப்புறம் ஏன் மீதமுள்ள நான்கு பாடங்களில் தேர்ச்சி மதிப்பெண்கூட எடுக்க முடியவில்லை என்று கேட்டால், அதற்கும் இன்னொரு முறுக்கலே பதிலாக இருக்கும்.
கணக்கு ஆசிரியராக இருப்பதை போன்ற துயரமான பணி வேறொன்றுமில்லை. "எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என ஒளவை சொல்லி வைத்துவிட்டுப் போயிருந்தாலும், மகாகவி பாரதியில் இருந்து, கணக்கை ஒரு பாடமாகக் கற்பித்துக் கொண்டிருக்கும் என்வரை கணக்கு பிணக்குதான், ஆமணக்குதான். கணக்குப் பாடத்தின் சுமையும், எண்கள் உருவாக்கும் பீதியும் மாணவர்களை கணக்குப் பாடத்திற்கு விரோதிகளாக்குகின்றன. கணித ஆசிரியர்களை வில்லி, வில்லன்களாக்குகின்றன.
கணித வகுப்புகளின் இறுக்கத்தை வார்த்தைகளில் விவரிப்பது முழுமையான செயலாக இருக்காது. எண்களாலும், குறிகளாலும் நிரப்பப்பட்டுள்ள புத்தகமும், அதைக் கால அவகாசத்திற்குள் முடித்தே தீர வேண்டிய அவசரமுள்ள ஆசிரியரும் மாணவர்களிடத்தில் பெரும் நெருக்கடியை உருவாக்குகிறார்கள்.
தமிழ் எழுத்துகளையாவது தட்டுத் தடுமாறி ஒன்றிரண்டு வகுப்புகளில் கற்றுக் கொள்கிறார்கள். எண்களின் அடிப்படை பூஜ்ஜியத்தில் இருந்து ஒன்பது வரை மட்டுமே. இவற்றை வைத்துக் கொண்டு எண்களின் தொடர் மதிப்புகளை மாணவர்களாலேயே உருவாக்க முடியும். ஆனாலும், எண்கள் தரும் மிரட்சி அதிகம்.
எண்களில்கூட பெரும்பாலும் பிள்ளைகள் தப்பிப் பிழைத்துவிடுவார்கள். எண்களின் அடிப்படைச் செயல்களுக்காகக் குறிகளை அறிமுகப்படுத்தும் பொழுதுதான் குழந்தைகளுக்கு தலை சுற்ற ஆரம்பித்து விடும்.
எளிமையாக சிறு வகுப்புகளில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்று தனித்தனியாகச் சொல்லிக் கொடுத்தால்கூட ஆறாம் வகுப்பிற்குப் பின்னர் எல்லா குறிகளும் ஒரு கணக்குக்குள் ஒன்றாக வந்துவிட்டால், மாணவர்கள் திகைத்துப் போவதை நான் ஒவ்வொரு முறையும் அனுபவத்தில் காண்கிறேன். குறிப்பாக மைனஸ் குறி. மாணவர்களை மிரட்டுவதில் மைனஸ்க்கு நிகர் மைனஸ்தான்.
ஒரு பிளஸ்சும் ஒரு மைனசும் சேர்ந்து வந்தால் பல குழந்தைகள் பூமி உருண்டை தன் சுழற்சியை நிறுத்திவிட்டதைப்போல் திகைத்துப் போய் நிறுத்திவிடுவார்கள். மேற்கொண்டு அந்தக் கணக்கை நகர்த்துவது குழந்தைகளால் இயலாத காரியமாகி விடுகிறது. மைனசும் பிளஸ்சும் சேர்ந்தால் என்ன செய்வது என்ற குழப்பம் பலருக்கு எல்லா வயதிலும் வரும். இதற்கு நன்றாகப் படிக்கின்ற குழந்தைகளும் விதிவிலக்கல்லர். புதிதாக ஒரு கணக்கை தீர்க்கும்போது பிள்ளைகள் எதிரில் சரியான பதில் வரவில்லையென்றால், ஆசிரியருக்கும் இந்தத் திகைப்பு உண்டாகும்.
முழுக்க முழுக்க கேள்விகளால் நிறைந்த ஒரு புத்தகம் கணக்குப் புத்தகம் மட்டுமே. அவ்வளவு பெரிய கணக்குப் புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க வேண்டுமென்பதே எடுத்தவுடன் மாணவர்களுக்கு அயர்ச்சியை உண்டாக்கி விடுகிறது.
ஆசிரியர் தீர்க்கும் கணக்குகளையாவது மாணவர்கள் ஓரளவிற்கு விரும்புவார்கள். மாணவர்களே தீர்க்க வேண்டிய கணக்குகள் குழந்தைகளின் கழுத்தை நெரிக்கும். பலநேரம் அவை மாதிரிக் கணக்குகளில் இருந்து வேறுபட்டே இருக்கும்.
வகுப்பறைகளில் கணக்கு கற்பிக்கும் ஆசிரியர் எண்கள், குறிகள், வாய்ப்பாடுகளின் செயல்பாடுகளைத் தவிர்த்து வேறொன்றையும் பேச நேரமிருக்காது. மிக எளிய செயலான 5 செ.மீ. நீளத்திற்கு ஒரு கோடு வரையுங்கள் என்பதுகூட இறுக்கமான அந்த வகுப்பறையில் பெரும் சவால் நிறைந்த செயல்பாடாக மாறிவிடும்.
உயர் கல்விக்கான தேவைகளோடு பத்தாம் வகுப்பில் கற்றுத் தரப்படும் பல கணிதப் பாடங்கள், மாணவர்களின் கற்பனை எல்லைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். மடக்கை விதிகளும், ஆல்ஃபா, பீட்டாக்களும் பல நேரங்களில் குழந்தைகளின் விரல்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டு நகரவிடாமல் செய்துவிடும்.
முக்கோணம், நாற்கரம் போன்ற உருவங்கள் வரும்போதுகூட அவற்றைப் பற்றி ஓரளவிற்குப் புரிய வைத்துவிட முயலலாம். புள்ளிகளும், நேர்க்கோடுகளும், சாய்வுகளும், அவற்றின் சமன்பாடுகளும் உருவாக்கும் குழப்பங்கள் இருக்கே... ப்பா... மூச்சுத் திணறிப் போகும்... கற்பிப்பதற்கும்தான். கற்றல் நிகழ்ந்ததா என்பது 90% ஐயத்திற்குரிய விஷயமே.
சொல்லிக் கொடுக்கும் மாதிரிக் கணக்கை வைத்து நான்கைந்து முறை போட்டுப் பார்த்தும், பல தேர்வுகளில் எழுதி எழுதி மனப்பாடம் ஆகும் அளவிற்கு வந்த பிறகு, கணக்குப் போட பழகிக் கொள்வார்களே தவிர, அந்தக் கணக்கின் அடிப்படை நிச்சயம் புரிந்திருக்காது.
பிள்ளைகளுக்கு கணக்கு ஏன் இவ்வளவு அன்னியமானது என்று தெரியவில்லை. மிகப் பெரிய அவலம்தான், கணக்கிலிருந்து விலகிப் போவது. எங்கள் ஊரைப் போன்ற இடை நகரப் பிள்ளைகள் மட்டுமல்ல, சென்னை நகரப் பிள்ளைகளின் மனநிலையும் இதுதான்.
ஒரு விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்னையை மையமாகக் கொண்ட நல்ல பள்ளிகளில், நிறைய கட்டணம் கட்டிப் படிப்பதாக நம்பப்படுகிற பிள்ளைகளும் இதே கருத்தைத்தான் சொன்னார்கள்... கணக்குப் பிடிக்காது. ஏன் பிடிக்காது என்றதற்கு, புரியலை, அதனால பிடிக்கலை என தெளிவாக ஒரு ஆறாம் வகுப்பு மாணவன் பதில் சொன்னான்.
புரிந்து கொள்ள முடியாத, கடினமான ஒரு பொருளையா நம் முன்னோர்கள் கண்ணெனப் போற்றினார்கள் என யோசித்தால், இருக்காதே என்றுதான் பதில் தோன்றுகிறது.
என் அப்பா அந்தக் காலத்தில் எட்டாம் வகுப்புத்தான் படித்தார் (அன்றைக்கு அதுவே ஆசிரியர் ஆவதற்கான படிப்பு என்று பெருமையாக சொல்லிக் கொள்வார்). மிகக் கடினமான கணக்குகளுக்குக்கூட வினாடியில் பதில் சொல்லிவிடுவார். அவர் வாய்விட்டு கணக்கிடுவதைப் பார்க்க முடியாது. மனசுக்குள்ளேயே எண்களை எளிதாக கையாண்டு விடுவார். அப்பொழுதும் எனக்கு ஒரு தாளும் எழுதுகோலும் தேவைப்பட்டது. இன்றைக்கு கால்குலேட்டர். இந்த இடைவெளி எதனால் உண்டானது.
பாடத் திட்டத்தால் மாணவர்களுக்குச் சுமையும் மன நெருக்கடியும் ஏற்றப்படுவதில் அநேகமாக கணக்குப் பாடம் முதலிடத்தைப் பிடிக்கும். ஆண்டுக்கு ஆண்டு பத்தாம் வகுப்பில் கணக்குப் பாடத்தில் சதம் எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே என யோசித்தால், பெரும்பாலும் அவை தொடர் பயிற்சியினால் மட்டுமே சாத்தியப்பட்டிருக்கும்.
ஆனால், இன்றைய சூழலில் மாணவர்கள் பெரும்பாலும் வகுப்பறையை வெறுப்பதற்குக் காரணமாக அமைவதற்கு மிக முக்கியமான காரணங்களாக அமைவது ஆங்கிலமும் கணக்குப் பாடங்களும்தான்.
குறிப்பாக கிராமப்புறங்களில். ஒன்றிரண்டு பாடங்களில் தோல்வியுறும் மாணவர்கள் பெரும்பாலும் இவ்விரு பாடங்களில்தான் தோல்வியுறுகிறார்கள்.
ச்சீய்.. இந்தப் பழம் புளிக்கும் என அதோடு தூக்கியெறிந்துவிட்டு நாலு காசு சம்பாதிக்கப் போய் விடுகிறார்கள். பெண் பிள்ளைகள் திருமணம் செய்துவைக்கப்படுகிறார்கள். தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கணக்குப் பாடம் வராத பிரிவுகளைத் தேர்வு செய்து கல்லூரிகளில் சேர்கிறார்கள்.
எழுத்துகள் உருவாக்கும் ரம்மியத்தையும், உணர்வெழுச்சியையும் எண்களாலும் உருவாக்க முடியும் என்பதை வெளிப்படுத்த முடியாமல் கணித வகுப்பறைகள் திணறுகின்றன. அதனாலேயே ஒரே ஒரு "மைனஸ் குறி' கனத்த தடியொன்றாக பிள்ளைகளை வகுப்பறைகளில் மிரட்டிக் கொண்டிருக்கிறது. எண்களைப் பேச வைக்கும் மந்திரத்தை எப்படிச் செய்வது?
நம் அணுகுமுறையில் உள்ள குறையோ, பாடத்திட்டமோ, கற்பிக்கும் முறையோ எல்லாம் சேர்ந்த குறைபாட்டாலோ மாணவர்கள் கணக்குப் பாடத்தில் இருந்து விலகிப் போகிறார்கள். ஆனால், மிக ஆழமாக யோசித்துப் பார்த்தால், கணக்கைப் போன்ற இனிமையான பாடமும், சுவாரஸ்யமான பாடமும் வேறொன்று இருக்க முடியாது.
எண்களைப் பின்தொடர்ந்து சென்றால் அவை விரித்துச் செல்லும் உலக மாயங்கள் நிரம்பியது. மாயங்கள் வழியாக உண்மையை, நிரூபணத்தை வெகு அருகில் பார்க்கும் வாய்ப்புத் தருவது கணக்கு என்ற அதிசயம் மட்டுமே.
பள்ளிகளில் பெறும் கல்வியறிவைப் பெற முடியாமல், பல குழந்தைகளுக்கு சவாலாக கணித வகுப்பறைகளே கனத்த கதவுகளுடன் நின்று கொண்டிருக்கும் நிலை என்று மாறுமோ?
பாடத் திட்டத்தால் மாணவர்களுக்குச் சுமையும் மன நெருக்கடியும் ஏற்றப்படுவதில் அநேகமாக கணக்குப் பாடம்தான் முதலிடத்தைப் பிடிக்கும். ஆண்டுக்கு ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் கணக்குப் பாடத்தில் சதம் எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே என யோசித்தால், பெரும்பாலும் அவை தொடர் பயிற்சியினால் மட்டுமே சாத்தியப்பட்டிருக்கும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024