Wednesday, July 1, 2015

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.: கல்லூரியில் சேர நாளை கடைசி நாள்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வில் பங்கேற்று சேர்க்கைக் கடிதம் பெற்ற மாணவர்கள் உரிய கல்லூரிகளில் சேர வியாழக்கிழமை (ஜூலை 2) கடைசி நாளாகும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல் கட்டக் கலந்தாய்வில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,257 எம்.பி.பி.எஸ். இடங்கள், 8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்த 597 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 85 பி.டி.எஸ். இடங்கள் என மொத்தம் 2,939 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, சேர்க்கைக் கடிதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்ட 2,939 மாணவர்களில் இதுவரை 2,795 மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 144 மாணவர்களுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஜூலை 2) வரை சேர்க்கைக் கடிதம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சேர்க்கைக் கடிதம் பெற்ற மாணவர்கள் வியாழக்கிழமை (ஜூலை 2) மாலை 5 மணிக்குள் உரிய மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறினர்.
பி.டி.எஸ். படிப்பிலிருந்து விலகி...கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்து பி.டி.எஸ். (பல் மருத்துவம்) படிப்பில் சேர்ந்த மாணவர்களில் 50 பேருக்கும் மேற்பட்டோர் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் பங்கேற்று அனுமதிக் கடிதம் பெற்றுள்ளனர். இவ்வாறு பி.டி.எஸ். படிப்பிலிருந்து விலகி எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய விதியின்படி தலா ரூ.5 லட்சத்தை 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் செலுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024