Sunday, July 5, 2015

பி.எஸ்சி. நர்சிங், பிஸியோதெரபி படிப்பில் சேர விண்ணப்பம் நாளை முதல் வழங்கப்படுகிறது


சென்னை,

பி.எஸ்சி.நர்சிங், பிஸியோதெரபி படிப்பில் சேர விண்ணப்பம் நாளை(திங்கட்கிழமை) முதல் வழங்கப்படுகிறது.

இடங்கள் விவரம்

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் பி.எஸ்சி.நர்சிங் படிப்பில் சேர 250 இடங்கள் உள்ளன. பிஸியோதெரபி படிப்புக்கு 120 இடங்கள் இருக்கின்றன. பி.எஸ்சி. ரேடியாலஜி படிப்பில் சேர 60 இடங்களும், பி.எஸ்சி.ரேடியோதெரபி டெக்னாலஜி படிப்புக்கு 20 இடங்களும், பி.எஸ்சி. கார்டியோ பல்மனரி பெர்பூசன் டெக்னாலஜி படிப்புக்கு 10 இடங்களும் உள்ளன. பி.எஸ்சி.ஆப்டோ மெட்ரி படிப்புக்கு 20 இடங்கள் உள்ளன. மேற்கண்ட படிப்புகள் தவிர சில மருத்துவம் சார்ந்த படிப்புகளும் உள்ளன.

பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்கு சுயநிதி கல்லூரிகளில் 5 ஆயிரத்து 296 இடங்களும், பி.பார்மஸி படிப்புக்கு சுயநிதி கல்லூரிகளில் 1,172 இடங்களும், பிஸியோதெரபி படிப்புக்கு சுயநிதி கல்லூரிகளில் 630 இடங்களும் இருக்கின்றன. இந்த படிப்புகள் அனைத்தும் 4 வருட பட்டப்படிப்பாகும்.

நாளை முதல் விண்ணப்பம்

இவற்றுக்கான விண்ணப்ப படிவம் விலை ரூ.350. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ–மாணவிகள் தங்களது சாதிச்சான்று நகல் கொடுத்தால் அவர்களுக்கு விண்ணப்ப படிவம் இலவசம். அனைத்து படிப்புகளுக்கும் ஒரே விண்ணப்பம் போதுமானது. விண்ணப்ப படிவம் நாளை(திங்கட்கிழமை) முதல் 17–ந்தேதி வரை அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் கொடுக்கப்பட உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை 18–ந்தேதிக்குள் செயலாளர், மருத்துவ தேர்வுக்குழு, அரசு மருத்துவக்கல்வி இயக்குனரகம், கீழ்ப்பாக்கம், சென்னை–10 என்ற முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பிவைக்கவேண்டும்.

கலந்தாய்வு ஆகஸ்டு மாதம் 2–வது வாரத்தில் நடத்த தற்காலிகமாக திட்டமிடப்பட்டுள்ளது.

2 ஆண்டு பி.எஸ்.சி. செவிலியர் படிப்பு

2 ஆண்டு பி.எஸ்சி. செவிலியர் பட்டப்படிப்பு (செவிலியர் பயிற்சி முடித்தவர்களுக்கு மட்டும் ) மற்றும் 2 ஆண்டு மருந்தியல் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் ( www.tnhealth.org) இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் தேர்வுக்குழுவுக்கு ஜூலை 9–ந் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேரவேண்டும்.

இந்த தகவலை மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி தெரிவித்தார்.

இதற்கான ஏற்பாடுகளை மருத்துவக்கல்வி தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் உஷா சதாசிவம், துணை இயக்குனர் டாக்டர் அறிவொளி ஆகியோர் இருந்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 16.11.2024