Sunday, July 5, 2015

எம்.ஆர்.ராதா - கலகக்காரனின் கதை! (21)

Image result for mr radha images


கடந்த, 1964ல் வெளிவந்த பெரும்பாலான படங்களில் ராதா நடித்திருந்தார். புதிய பறவை படத்தில், சி.ஐ.டி., வேடத்தில், வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்ததுடன், அருணகிரிநாதர் என்ற பக்திப் படத்திலும் நடித்தார்.
அதுகுறித்து, ஆச்சரியப்பட்டுக் கேட்டவர்களுக்கு, 'காசு கொடுக்கறான் நடிக்கிறேன்; இது என் தொழில். அவ்வளவு தான்...' என்று பதில் கூறினார்.
மகளே உன் சமத்து என்ற படத்தில், அறிமுகமாயிருந்த நடிகையிடம், 'உன் பேரு என்னம்மா?' என்று கேட்டார் ராதா.
'தெய்வநாயகி...' என்றார் அந்தப் பெண்.
'தெய்வநாயகியா... அய்யய்ய... இதெல்லாம் பழைய மாடல்; சினிமாவுக்கு எடுபடாது. விஜயா, கிஜயான்னு எதாவது வச்சுக்கோ...' என்றார்.
அப்பெண், விஜயா என்று வைத்துக் கொண்டார். அவரே கே.ஆர்.விஜயா!

நடிகை சரோஜாதேவியின் பிறந்த நாள் அன்று, அவர்கள் வீட்டில் சத்ய நாராயணா பூஜை நடைபெறும். முன்னணி நட்சத்திரங்கள், சரோஜாதேவியின் வீட்டுக்குச் சென்று அவரை வாழ்த்தி, பூஜையில் கலந்து, விருந்து சாப்பிட்டு வருவர்.
சரோஜாதேவி மேல் பாசம் கொண்ட ராதாவும், ஒவ்வொரு ஆண்டும், அவரது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வார். ஷூட்டிங்கை முடித்து, இரவில் சரோஜாதேவியின் வீட்டுக்குச் செல்வார். வாசலில் நுழையும் போதே, 'சரோஜா...' என்று வாய் நிறையக் கூப்பிட்டபடி தான் செல்வார். சரோஜாதேவியும் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவார்.
அதேபோன்று, ஷூட்டிங் முடிந்து, இரவு ஒவ்வொரு நட்சத்திரங்களாக வர ஆரம்பிப்பர். எம்.ஜி.ஆரும் வருவார். 'வாப்பா ராமச்சந்திரா...' என்று சிரித்தபடி வரவேற்பார் ராதா. அப்போது எம்.ஜி.ஆரைப் பெயர் சொல்லி அழைக்கும் உரிமையும், துணிச்சலும் ராதாவிடம் மட்டுமே இருந்தது.
சரோஜாதேவி குறித்து, அவர் அம்மாவிடம், 'உன் பொண்ண நல்லா வளர்த்து வச்சிருக்க... உடம்பு நிறைய துணி போட்டு வர்ற நடிகை யாருன்னா, அது சரோஜா தான். என்னா அழகு! ரொம்ப சந்தோஷமா இருக்கு; ரொம்ப நல்ல பொண்ணு...' என்பார் ராதா.

தயாரிப்பாளர், ஜி.என்.வேலுமணி மகன் சரவணன் திருமணத்திற்கு சென்றிருந்தார் ராதா. ஈ.வெ.ரா., வருவதாக இருந்ததால், அவருக்கு கொடுப்பதற்காக வெள்ளித்தடி ஒன்றை வைத்திருந்தார் வேலுமணி.
'வேலுமணி... தடி குடுக்கப் போறியா... குடு குடு... நம்ம ஆளு, அதைத் தட்டித் தட்டிப் பாப்பாரு பாரு...' என, கமென்ட் அடித்தார் ராதா.
ஈ.வெ.ரா., வந்ததும், வெள்ளித்தடியை அவருக்கு வழங்கினார் வேலுமணி. ராதா சொன்னது போன்றே, தடியை வாங்கியதும் அதை திருப்பித் திருப்பி தட்டிப் பார்த்தபடி இருந்தார்
ஈ.வெ.ரா.,
வேலுமணியைப் பார்த்து கிண்டலாக புன்னகை செய்தார் ராதா.

ஒரு முறை படப்பிடிப்பின் போது, ராதாவுக்கு வீட்டிலிருந்து மதிய உணவு எடுத்து வருவதற்கு வாகனம் எதுவும் இல்லை. அப்போது தான் புதிதாக இம்பாலா கார் வாங்கியிருந்தார் சிவாஜி. சாப்பாடு எடுத்து வருவதற்காக அக் காரை சிவாஜியிடம் கேட்டார் ராதா.
'அண்ணே... அது இம்பாலாண்ணே...' என்றார் சிவாஜி.
அடுத்த மூன்றே நாட்களில், புதிய இம்பாலா கார் ஒன்றை வாங்கினார் ராதா.
மதிய உணவு நேரத்தில், சிவாஜி இருக்கும் நேரம் பார்த்து, ராதாவின் இம்பாலா கார் அங்கு வந்து நின்றது. அதில், நிறைய வைக்கோல் கட்டுகள் ஏற்றப்பட்டிருந்தன.
'கணேசா... பாத்தியா இம்பாலா காரை....' என்றார் ராதா.
'என்னண்ணே... வைக்கோல் கட்டெல்லாம் ஏத்திக்கிட்டு...' என்றார் சிவாஜி.
'அது என்ன வெறும் தகரம் தானே... தோட்டத்துக்கு வைக்கோல் ஏத்திட்டுப் போக, வண்டி கிடைக்கலன்னு சொன்னான் வேலையாள். சரி... இம்பாலால ஏத்திக்கோன்னு சொல்லிட்டேன். வைக்கோலை நாம வேற எதுல போட முடியும்... இம்பாலால தான் போட முடியும்...' என்றார்.
ஒருநாள், ஒப்பனையாளர் கஜபதியை அழைத்து, கையில் பணத்தைக் கொடுத்து, 'இளங்கோவனைத் தெரியுமா?' என்று கேட்டார் ராதா.
'நல்லா தெரியும்ண்ணே...' என்றார் கஜபதி.
'அப்படியா... சரி அந்தப் பணத்தைக் குடு...' என்று கஜபதியிடம் இருந்து பணத்தை வாங்கி, தன் டிரைவரிடம் கொடுத்து, இளங்கோவனிடம் கொடுக்கச் சொல்லி அனுப்பினார்.
கஜபதிக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. அவரின் முகம் மாறுவதைக் கண்ட ராதா, 'என்னய்யா ஒரு மாதிரி இருக்க?' என்றார்.
'இல்லண்ணே... நான் கொடுத்துட மாட்டேனா... அவ்வளவு நம்பிக்கை இல்லையா...' என்றார் கஜபதி.
'இளங்கோவன் எவ்வளவு பெரிய வசனகர்த்தா. கொடி கட்டிப் பறந்தவரு. செட்டுல வசனத்துல ஒரு வார்த்தை மாத்துறதுன்னாக் கூட, அவரைத் தேடிப் போய் அனுமதி வாங்கித் தான் மாத்துவாங்க.
'அவரு ஒஹோன்னு இருக்கறப்போ நீ பாத்துருக்க; அவரை நல்லாத் தெரியும்ன்னு வேற சொல்லுற. இப்ப அவரு நிலைம சரியில்ல; அவர் வீட்டை ஜப்தி செய்யப் போறாங்களாம். நீ போய் பணம் கொடுக்குறப்போ என்ன நினைப்பாரு... 'நம்ம நிலைம இப்படி ஆயிருச்சே'ன்னு வருத்தப்படு வாருல்ல... அதான் தெரியாதவங்க மூலம் கொடுத்தேன். அவரு அவமரியாதையா நினைக்கக் கூடாதுல்ல...' என்று தெளிவுபடுத்தினார்.
பொதுவாகவே ராதா ஏராளமான தர்ம காரியங்கள் செய்வார்; கேட்டவர்களுக்கு எல்லாம் இயன்ற அளவு உதவுவார். எந்த உதவியையுமே வெளியில் தெரியாமல் செய்ய வேண்டுமென்று நினைப்பார்.
'மாசத்துல ரெண்டு நாள் மட்டும் ப்ரீயா விட்டுரு; மத்தபடி சினிமாவுக்கு கால்ஷீட் கொடுத்துரு...' என்று கஜபதியிடம் சொல்வார்.
ஒரு நாளைக்கு மூன்று கால்ஷீட் கொடுத்து, இரவு, பகலாக நடித்து வந்த நேரத்திலும், மாதத்தில் இரண்டு நாட்களாவது, நாடக மேடையில் நடித்தால் தான், ராதாவுக்கு நிம்மதியாக இருக்கும்.
'அந்த தேதியில நாடகம் இருக்கே... அன்னிக்கு வேண்டாமே...' என்பார். நாடகத்துக்காக ஒதுக்கிய நேரத்தில், எக்காரணம் கொண்டும், சினிமாவுக்கு கால்ஷீட் தர மாட்டார்.
தன்னை நம்பியிருந்த தன் நாடகக் குழுவினருக்கு செய்யும் சிறு உதவியாக அதை நினைத்தார் ராதா. அவ்வப்போது அவரைத் தேடி, நாடகக் குழு ஆட்கள் உதவி கேட்டு வருவர்.
அப்போது, ராதா கேட்கும் முதல் கேள்வி,'சாப்பிட்டியா...' என்பதாகத் தான் இருக்கும். 'முதல்ல போய் சாப்பிட்டு வா...' என்று தன் வீட்டுக்குள் அனுப்புவார்.
தினமும், அவரது வீட்டில் குறைந்தது, 10 நாடகக் கலைஞர்களாவது சாப்பிடுவர். சாப்பிட்டு வந்த பின், 'என்னடா...' என்று விசாரிப்பார்.
'ரொம்பக் கஷ்டமா இருக்குண்ணே... கொஞ்சம் பண உதவி...'
'என்னடா நீ... இதெல்லாம் கேட்டேனா... சினிமாக் கம்பெனியில எங்கடா ஒழுங்கா பணம் தர்றாங்க! இப்ப என்னத்த தர்றது... சாப்டேல்ல, அப்புறமா வா; பாத்துச் செய்யறேன்...' என்று சொல்லியபடி உள்ளே சென்று, பணத்தை எடுத்து, தன் பனியனுக்குள் வைத்தபடி வருவார்.
அந்த நபரின் அருகில் வந்து, பணத்தை வெளியே எடுத்து, கையில் திணித்து, 'போடா போடா... இப்ப எங்கடா பணம்... அப்புறம் பாக்கலாம்...' என்று சொல்லி, அந்த நபரை அனுப்பி விடுவார்.
ஒருவருக்கு தான் செய்யும் உதவி, மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது என்று நினைத்தவர் ராதா.
— தொடரும்.
நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.

- முகில்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024