Sunday, July 5, 2015

இனி ரேஷன் உணவு பொருட்களுக்கும் நேரடி மானியம்

புதுடில்லி : மத்திய அரசு, சமையல் 'காஸ்' சிலிண்டரை தொடர்ந்து, நியாய விலை கடைகளில் விற்கப்படும், உணவுப் பொருட்களையும், நேரடி மானிய திட்டத்தின் கீழ், கொண்டு வர முடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாக, யூனியன் பிரதேசங்களில் இத்திட்டம் அறிமுகமாகிறது. புதுச்சேரி, சண்டிகர், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி யூனியன் பிரதேசங்களில், நுகர்வோரின், 'ஆதார்' எண்ணுடன் கூடிய வங்கிக் கணக்கில், ரேஷன் பொருட்களுக்கான மானியத் தொகை சேர்க்கப்படும்.
துவக்கத்தில், ஒரு குடும்பத்திற்கு, 500 - 700 ரூபாய் வரை, வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ், வங்கிக்கணக்கில் மானியம் பெறுவோர், நியாய விலைக் கடைகளில் உணவுப் பொருட்களை வாங்க முடியாது.அதே சமயம், குடும்ப அட்டையில் அதுவரை வாங்கிய பொருட்களின் அடிப்படையில் அல்லாமல், குறிப்பிட்ட தொகை மானியமாக நிர்ணயிக்கப்படும். இத்தொகை, நுகர்வோரின் வங்கிக் கணக்கில், மாதந்தோறும் சேர்க்கப்படும்.

உதாரணமாக, ஒருவர் அரிசி, கோதுமை போன்றவற்றை பல காலம் வாங்காமல் விட்டிருந்தாலும், அனைத்து பொருட்களையும் வாங்கியோர் பெறும் அதே மானியத் தொகையை, இந்த நபரும் பெற முடியும்.யூனியன் பிரதேச எம்.பி.,க்களின் கோரிக்கையை ஏற்று, அங்கு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

அதே சமயம், இத்திட்டத்தை செயல்படுத்துவது, அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.இந்நிலையில், அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், வரும் டிசம்பருக்குள், நுகர்வோரின் ஆதார் ஆவணங்களை, 'டிஜிட்டல்' வடிவிற்கு மாற்றி, பொது வினியோக திட்ட தகவல் தொகுப்புடன் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.அவ்வாறு இணைக்காத பட்சத்தில், பொது வினியோக திட்டத்திற்கான உணவுப் பொருட்கள் சப்ளை நிறுத்தப்படும்.இத்திட்டத்தை, வரும் டிசம்பருக்குள், ஏதேனும் ஒரு மாவட்டத்தில், சோதனை முறையில் அறிமுகப்படுத்தி, நியாய விலை கடைகளில், 'பயோமெட்ரிக்' சாதனங்களை நிறுவ, மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இத்திட்டத்தை செயல்படுத்தும் போது, எதிர்கொள்ளும் சாதக, பாதக அம்சங்கள் குறித்து, மாநில அரசுகள் அறிக்கை அளிக்குமாறும், கேட்டுக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.அரசுக்கு சேமிப்பு: தற்போது, 89 சதவீத ஆதார் ஆவணங்கள், டிஜிட்டல் வடிவிற்கு மாற்றப்பட்டுள்ளன. டில்லியில், 25 ஆயிரம் நியாய விலை கடைகள், டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன.

ஆந்திராவின், கோதாவரி மாவட்டத்தில், 100 சதவீத பொது வினியோக திட்டம், கடந்த மே முதல் டிஜிட்டல் மயமாகியுள்ளது.இதன் மூலம், போலி ரேஷன் கார்டுகள் பிரச்னை ஒழிந்து, அரசுக்கு முதல் மாதத்திலேயே, 8 கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது. இந்த வகையில், ஓராண்டில், இம்மாவட்டத்தில், 100 கோடி ரூபாய் மிச்சமாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.



அதிகரிப்பு:



* கடந்த, 2004 - 05ல், பொது வினியோக திட்டத்தின் கீழ், மானிய விலையில் அரிசி வாங்குவோரில், கிராமப்புற குடும்பங்களின் பங்கு, 24.4 சதவீதமாக இருந்தது. இது, 2011 - 12ல், 46 சதவீதமாக அதிகரித்துள்ளது.
* மண்ணெண்ணெய்க்கான மானியத்தையும், வங்கி கணக்கில் சேர்ப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024