Friday, March 10, 2017

பாவம் குழந்தைகள்...

By ஆசிரியர்  |   Published on : 09th March 2017 02:21 AM 
மாணவர்கள் எல்லோரும் மதிய உணவு சாப்பிடும்போது, ஒரு குழந்தைக்கு மட்டும் அது மறுக்கப்பட்டால் எப்படி இருக்கும்? அதிலும் அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த அந்தக் குழந்தைக்குக் கிடைக்க இருக்கும் முழுமையான ஒருவேளை உணவு அது மட்டுமே எனும்போது, அந்தக் குழந்தையின் மனநிலையை சற்று யோசித்துப் பாருங்கள்.
ஆதார் எண் இல்லை என்பதனால் தனக்கு மதிய உணவு மறுக்கப்படுகிறது என்பதை அந்தக் குழந்தையால் புரிந்து கொள்ள முடியுமா? அந்தக் குழந்தையை விடுங்கள். பொது நன்மைக்காகத்தான் அரசு தங்கள் குழந்தையின் மதிய உணவைத் தடுத்திருக்கிறது என்று பெற்றோருக்காவது தெரியுமா, விளக்கமளித்தால் புரியுமா? அதெல்லாம் போகட்டும், மதிய உணவு வழங்கப்படாவிட்டால் பல குழந்தைகள் பள்ளிக்கு வருவதையே நிறுத்திவிடுவார்கள் என்பது அரசு அதிகாரிகளுக்குத் தெரியாதா?
ஆதார் அட்டையால் ஏற்படும் நன்மைகள் ஏராளம் என்பதும், விரயமாகிக் கொண்டிருந்த பல கோடி ரூபாய் அதனால் அரசுக்கு மிச்சமாகியிருக்கிறது என்பதும் உண்மைதான். செலாவணி செல்லாததாக்கப்பட்ட முடிவின்போது பொதுமக்களின் அடிப்படை சிரமங்களும், சிக்கல்களும் எப்படி அரசுக்குத் தெரியாமல் போனதோ அதேபோல, இப்போது மதிய உணவுக்கும் ஆதார் அட்டை எண்ணுக்கும் தொடர்பு ஏற்படுத்தி இருப்பது, நடைமுறைச் சிக்கல்களை ஆட்சியாளர்களும், அதிகாரவர்க்கமும் புரிந்து கொள்ளாமல் செயல்படுகின்றனர் என்பதை வெளிச்சம் போடுகிறது.
முந்தைய மன்மோகன் சிங் அரசு ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது அதை பாரதிய ஜனதா கட்சி எதிர்த்தது. ஆனால், நரேந்திர மோடி பிரதமரானபோது, அந்தத் திட்டத்தின் நோக்கம் சரியானது என்பதைப் புரிந்து கொண்டு, கெளரவம் பார்க்காமல் ஆதார் திட்டத்தைத் தொடர அனுமதித்தார். இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கி அத்தனை பேரின் புகைப்படம், கைரேகை, முகவரி உள்ளிட்ட எல்லா விவரங்களையும் சேகரிப்பது என்பதில் மத்திய அரசு முனைப்புக் காட்டு
கிறது. இதன்மூலம் அரசின் மானியங்கள், உதவிகள் போன்றவை போலி பயனாளிகளுக்குப் போய்ச் சேர்வதைத் தடுப்பது என்பதுதான் நோக்கம்.
உணவுப் பொருள்கள், உரங்கள், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருள்களின் மானியங்கள் பயனாளிகளை மட்டுமே சென்றடையவும், போலி பயனாளிகள் பயனடைவதைத் தடுக்கவும் ஆதார் எண் பயன்படுகிறது. இதன் மூலம் 2.16 கோடி போலி குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டிருக்கின்றன. இதனால் ஏறத்தாழ ரூ.13,000 கோடி அரசுக்கு மிச்சமாகி இருக்கிறது. அரசு பல்வேறு மானியங்களுக்காகச் செலவிடும் ரூ.2.11 லட்சம் கோடியில், போலி பயனாளிகளுக்கான கசிவுகள் தவிர்க்கப்பட்டால் ஏறத்தாழ ரூ.33,000 கோடி அரசுக்கு மிச்சமாகும்.
இதையெல்லாம் மறுக்கவில்லை. ஆதார் அட்டையின் நன்மைகளையும் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் அதை நடைமுறைப்படுத்தக் காட்டப்படும் முனைப்புதான் ஒப்புக் கொள்ளும்படியாக இல்லை. எல்லாவற்றிற்கும் ஆதார் எண் வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதால், உண்மையிலேயே மானியம் தேவைப்படும் பலர் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அரசு உணர மறுக்கிறது.
ரயில் பயண முன்பதிவுக்கு ஆதார் எண் குறிப்பிட வேண்டும் என்பது உலகில் எந்த நாட்டிலுமே கேள்விப்படாத நடைமுறை. வெளிநாட்டினர் ஒருவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும்போது என்ன செய்வார்? ஏறத்தாழ பத்து அரசு நலத் திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அவை அனைத்துமே மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள், அடித்தட்டு வர்க்கத்தினர் தொடர்பானவை. அவர்களில் பலருக்கும் இன்னும்கூட ஆதார் அட்டை குறித்த விவரமே தெரியாது.
குழந்தைகளுடைய நிலைமைதான் மிகவும் மோசம். அவர்களில் பலரும் படிப்பறிவில்லாத பெற்றோரின் வழிகாட்டுதலில் வாழ்பவர்கள். அது மட்டுமல்ல, ஒவ்வொரு வயது அதிகரிக்கும்போதும் அவர்களது ஆதார் அட்டை புதுப்பிக்கப்படவும் வேண்டும். பெற்றோர் படிப்பறிவில்லாத ஏழைகளாகவும், எந்தவித முகவரி ஆதாரமுமில்லாத இடம் பெயர்ந்த கூலித் தொழிலாளர்களாகவும் இருந்தால், அந்தக் குழந்தைகளுக்கு ஆதார் எண் பெற முடியாது. அவர்கள் கல்வி கற்கவும் முடியாது, அரசின் உதவிகளைப் பெறவும் முடியாது.
ஆதார் அட்டை வழங்குவது என்பது குடும்ப அட்டை வழங்குவதுபோல, தங்குவதற்கு வீடோ, குறைந்தபட்சம் குடிசையோ இருந்தால்தான் தரப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் பல லட்சம் பேர் தங்களது கிராமங்களில் விவசாயத்தைக் கைவிட்டு நகர்ப்புறங்களில் கூலி அல்லது கட்டடத் தொழிலாளிகளாகத் தெருவோர வாழ்க்கை வாழ்கிறார்கள். அவர்கள் உண்மையிலேயே மானியம் தேவைப்படுபவர்கள். ஆனால், அவர்களிடம் ஆதார் அட்டை இல்லாததால் அரசின் சலுகைகள் மறுக்கப்படுகின்றன.
இறுதித் தீர்ப்பு வழங்கப்படும்வரை, ஆதார் எண் எந்தவொரு திட்டத்திலும் கட்டாயப்படுத்தப்படக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இருக்கிறது. ஆதார் அட்டை வழங்குவதிலேயேகூட பல குளறுபடிகள் காணப்படுகின்றன. பத்திரப் பதிவில் ஆதார் எண் கட்டாயப்படுத்தப்படுவதிலேயேகூட போலி அட்டையின் பயன்பாடு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
ஆதார் அட்டை திட்டமே வேண்டாம் என்பதல்ல. குழந்தைகள் மதிய உணவுக்கும், ரயில் பயண முன்பதிவுக்கும் கட்டாயப்படுத்தி ஆதார் அட்டைத் திட்டத்தை செயல்படுத்த முனைவது தவறானது. இதன்மூலம் நியாயமான பயனாளிகள் பாதிக்கப்படுவார்களே தவிர, அரசின் எண்ணம் நிறைவேறாது!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024