Friday, March 10, 2017

தமிழரும் இந்தியர்தான்

By ம. பாவேந்தன் இளையபதி  |   Published on : 09th March 2017 02:24 AM  
இன்று நாம் உண்ணும் மீனுக்காக ஓர் இனம் கடந்த 30 ஆண்டுகளில் 730-க்கும் மேற்பட்டோரை இழந்திருப்பதும், பலர் முடமாக்கப்பட்டுள்ளதும், பல லட்சக்கணக்கான ரூபாய் பொருளாதார இழப்பைச் சந்தித்திருப்பதும் உலகில் வேறெங்கும் நடைபெறவில்லை. தமிழ்நாட்டில்தான் நடந்தேறியுள்ளது.
தமிழகத்தின் பூர்வீகக் குடிகளான மீனவர்கள்தான் இத்தனை இன்னல்களுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர். இதில், இப்போது சேர்ந்திருப்பவர் ராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 22 வயதான பிரிட்ஜோ.
தமிழ்நாட்டின் சென்னை, பழவேற்காடு, மாமல்லபுரம், ராமேசுவரம், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, அண்டை மாநிலமான புதுச்சேரி ஆகிய இடங்களில் பல லட்சக்கணக்கான மீனவர்கள் வசித்து வருகின்றனர்.
இதில், சென்னை - கோடியக்கரை, கோடியக்கரை - பாம்பன், பாம்பன் - கன்னியாகுமரி, கன்னியாகுமரி - கேரளத்தின் நீரோடி வரை சுமார் 1,076 கி.மீ. தூரம் தமிழக மீனவர்கள் நெடுங்காலமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், தமிழகத்தின் ராமேசுவரம், ஜெகதாபட்டினம், நாகை மீனவர்களும், இலங்கையின் உள்ள தமிழ் மீனவர்களும் வங்காள விரிகுடா பகுதியில் பன்னெடுங்காலமாகவே மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கையில் இன விடுதலைக்காக விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற போரை அடுத்து, இருநாட்டு மீனவர்களும் பாரம்பரியமாக மீன் பிடித்து வந்த வங்காள விரிகுடா பகுதியில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன.
சர்வதேச கடல் எல்லையில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள், விடுதலைப் புலிகளுக்கு உதவுபவர்கள் எனக் கூறி இலங்கை ராணுவம் தாக்குதலை ஆரம்பித்தது. அதன் பின், கடந்த 30 ஆண்டுகளில் இலங்கை ராணுவத்தினரால் 730-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் முடமாக்கப்பட்டுள்ளனர்.
பல லட்சம் ரூபாய் மதிப்பிலான படகுகள், மீன்பிடி வலைகள் ஆகியவை இலங்கை ராணுவத்தால் கைப்பற்றப்பட்டு அந்நாட்டின் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.
2009-இல் இலங்கையில் தமிழர்கள் மீது கொடும் போரை நடத்தி பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்தது இலங்கை அரசு. அத்துடன் விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அரசு கூறியது. ஆனால், அதற்குப் பின்னும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
தற்போது, சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி, இலங்கை கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் வருவதால் தாக்குதல் நடத்தப்படுவதாக அந்நாட்டு ராணுவம் கூறுகிறது. ஆனால், ஒரு நாட்டு மீனவர் எல்லை தாண்டி மற்றொரு நாட்டின் கடல் எல்லைக்குள் வந்துவிட்டால், அவர் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்றும், அவரைக் கைது செய்து இருநாட்டுப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின் விடுவிக்க வேண்டும் என்று சர்வதேச கடல் சட்டம் கூறுகிறது.
ஆனால், இலங்கை இந்த சட்டத்தை அரிதிலும் அரிதாகவே கடைப்பிடிக்கிறது. கடந்த ஓராண்டாக 90 தமிழ் மீனவர்கள் இலங்கைச் சிறையில் எவ்வித விசாரணையும் இன்றி அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்த 580 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 100-க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு, பேச்சுவார்த்தைக்குப் பின் அவை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன.
ஆனால், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை, இந்தியாவை இதற்கு முன் ஆண்ட காங்கிரஸ் அரசும், தற்போதைய பா.ஜ.க. அரசும் பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
குஜராத், மேற்கு வங்க மீனவர்கள் மீது பாகிஸ்தான், வங்கதேச ராணுவம் தாக்குதல் நடத்தினாலோ அல்லது அவர்களை சிறைப்பிடித்துச் சென்றாலோ அதை இந்திய இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக கருதும் இந்திய அரசு, தமிழக மீனவர்கள் 730-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதற்கு, இதுவரை இலங்கைக்கு எதிராக கடுமையான கண்டன அறிக்கையைக் கூடவிடவில்லை.
அதேபோல், தி.மு.க.ம், அ.தி.மு.க.வும் மத்திய அரசுடன் கடிதப் போக்குவரத்தை மட்டுமே நடத்தி வருகின்றன. கேரள கடல் பகுதியில் அந்த மாநில மீனவர்கள் இருவரை, இத்தாலி ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றதற்கு அவர்களைப் பிடித்து சிறையில் அடைத்தது கேரள அரசு.
இதுபோன்ற நடவடிக்கையை இலங்கை ராணுவத்தின் மீது எடுக்க மத்திய அரசும், தமிழக அரசும் எடுக்கத் தயங்குவது ஏன்?
ஒரு பக்கம் மீன் பிடி பிரச்னை தொடர்பாக இருநாட்டுப் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்க மற்றொரு பக்கம் இலங்கை கடற்படைக்கு இந்திய ராணுவம் பயிற்சி கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது.
உலகிலேயே தன் நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்த அண்டை நாட்டு ராணுவத்துக்குப் பயிற்சி கொடுக்கும் ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்கும்.
இந்தியப் பிரதமராக மோடி பதவியேற்ற பின், தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தாது என்று மாயை உருவாக்கப்பட்டது. ஆனால், இதையெல்லாம் இலங்கை அரசு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது, இலங்கை ராணுவம் தன் செயலை மீண்டும் தொடங்கியுள்ளது.
தமிழக மீனவர்கள் மீது உண்மையிலேயே மத்தியில் ஆளும் பாஜகவுக்கு அக்கறை இருக்குமேயானால் இலங்கையுடனான அனைத்து உறவுகளையும் மத்திய அரசு துண்டித்துக் கொள்வதுடன், இக்கொலையில் ஈடுபட்ட இலங்கை ராணுவ வீரர் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க அழுத்தம் தர வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024