Monday, November 6, 2017

தலையங்கம்

இன்று தினத்தந்தியின் ‘‘பவள விழா’’



நவம்பர் 06 2017, 03:00 AM

17 பதிப்புகளையும், ஒரு கோடிக்கும் மேல் தினசரி வாசகர்களையும் உலகமெங்கும் கொண்ட ‘தினத்தந்தி’யின் பவள விழா இன்று சீரும், சிறப்புமாக கொண்டாடப்படுகிறது. 75 ஆண்டுகளாக தமிழக மக்களின் நாடித்துடிப்பாய், வாழ்க்கையின் ஓர் அங்கமாய், ஒன்றாக கலந்துவிட்ட பத்திரிகை ‘தினத்தந்தி’. ‘தினத்தந்தி’ தொடங்கப்பட்ட 75 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்த படிப்பறிவு, எழுத்தறிவைவிட, இப்போது பலமடங்கு உயர்ந்து இருக்கிறது என்றால், அதில் ‘தினத்தந்தி’யின் பங்கும் முக்கிய காரணமாகும். இந்த பத்திரிகையை தொடங்கிய, ‘‘தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்’’ ‘பேச்சுவழக்கில் உள்ள தமிழே உயிர் உள்ள தமிழ். அதை கொச்சை நீக்கி எழுதவேண்டும்’ என்ற பொன்மொழியை ஆழமாக பதித்துவிட்டுச் சென்றார்.

‘தினத்தந்தி’ உள்ளூர்செய்தி முதல் உலகசெய்தி வரை எளிய நடையில் கொடுப்பதால் ஒரேநேரத்தில் படிப்பறிவு இல்லாத சாதாரண பாமர மக்களில் இருந்து, அறிவுசால் பெருமக்கள் வரை அனைவருக்கும் அந்த செய்தி சென்றடைந்துவிடுகிறது. இன்றைக்கும் கிராமப்புறங்களிலுள்ள டீக்கடைகள், முடிதிருத்தும் நிலையங்கள், சலவையகங்கள், ஊர்ச்சாவடிகள் நூலகங்களாக மாறி இருக்கிறது என்றால் அதற்கு காரணம் ‘தினத்தந்தி’ தான். அங்கு போடப்படும் ஒரு ‘தினத்தந்தி’ பிரதியை நூற்றுக்கணக்கானோர் படித்து செய்திகள் குறித்து விவாதங்கள், கருத்து பரிமாற்றங்கள் என்று மேற்கொண்டு திறனாய்வு செய்துவிடுவார்கள்.

வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் பணியாற்றுவதற்கு வரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற இந்திய குடிமைப்பணி அதிகாரிகளுக்கும், தொழில் நிமித்தமாக, படிப்பு நிமித்தமாக தமிழ்நாட்டில் குடியேறும் மக்களுக்கும் ‘‘கைப்பிடித்து தமிழை கற்றுக்கொடுக்கும் ஆசான் தினத்தந்தி’’. அந்தவகையில் தமிழை படிக்கத்தெரியாத பாமரமக்கள் முதல் படித்தவர்கள் வரை தமிழை கற்றுக்கொடுக்க ஒரு தமிழ் ஆசிரியராக ‘தினத்தந்தி’ செயலாற்றுகிறது. அத்தகைய வரலாற்று சிறப்புமிக்க ‘தினத்தந்தி’யை 1942–ம் ஆண்டு ‘தந்தி’ என்ற பெயரில், ‘‘தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்’’ மதுரையில் தொடங்கினார். அந்தநேரம் பத்திரிகைக் காகிதம் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்தது. ஆனால், ஆதித்தனார் அதற்காக சோர்ந்துவிடவில்லை. வைக்கோலை ஊறவைத்து, கூழாக அரைத்து, கைக்காகிதம் தயாரித்து பத்திரிகை அச்சடித்து வெளியாகும் வகையில் அனைத்தும் அவர் மேற்பார்வையிலேயே நடந்தது. அவர் விதைத்த விதைதான் தொடர்ந்து, அவரது மகன் டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார், இப்போது சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் ஆகியோரால் ஆலமரமாக வளர்ந்து மாலைமலர், டி.டி.நெக்ஸ்ட், ராணி வாரஇதழ், ராணிமுத்து, கோகுலம்கதிர், தந்தி டி.வி., ஹலோ எப்.எம். என்று பல விழுதுகளோடு ஓங்கி உயர்ந்து நிற்கிறது. அத்தகைய ‘தினத்தந்தி’யின் பவள விழா இன்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது.

விழா மலரை வெளியிடும் அவர் ‘தினத்தந்தி’யின் முக்கிய பணியான இலக்கிய பரிசுகளை வழங்கி சிறப்பிக்கிறார். இன்றைய விழாவில், ‘மூத்த தமிழறிஞர்’ விருதை ஈரோடு தமிழன்பனும், இலக்கியத்தில் மேலாண்மை என்ற தொடரை ராணி இதழில் எழுதி, இப்போது நூலாக வடிவம் பெற்றுள்ள நூலை எழுதிய எழுத்தாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான இறையன்பு, 1954–ல் சைக்கிளில் சென்று ‘தினத்தந்தி’ பத்திரிகையை வினியோகம் செய்து, இன்று பெரிய தொழில் அதிபராக உயர்ந்திருக்கும் வி.ஜி.சந்தோ‌ஷம் ஆகியோருக்கு விருதுகளை வழங்குகிறார்.

இந்த நல்லநாளில் ‘தினத்தந்தி’ வெள்ளிவிழாவின்போது பேரறிஞர் அண்ணா சொன்னதுபோல, ‘‘தமிழனுடைய உரிமை பறிக்கப்படும் என்றநிலை ஏற்படுகின்ற ஒவ்வொரு நேரத்திலும், தமிழர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொண்டு தீரவேண்டும் என்ற கட்டம் வருகிற ஒவ்வொரு நேரத்திலும், ‘‘தினத்தந்தி’’ வெறும் செய்திப் பத்திரிகையாக மட்டும் அல்லாமல், தமிழர்களுக்கு வாளாகவும், கேடயமாகவும், தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கக்கூடிய போர் வீரனாகவும் விளங்கிக்கொண்டு வருகிறது’’ என்பதற்கேற்ப ‘தினத்தந்தி’ வரும் காலங்களிலும் தமிழக மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்து,தன் நீண்ட புனித பயணத்தை தொடர்ந்து மேற்கொள்ளும்.

No comments:

Post a Comment

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters  TIMES NEWS NETWORK 24.10.2024 Dindigul : Tamil Nadu governor R N Ravi awarded  degrees to...