Monday, November 6, 2017

மாவட்ட செய்திகள்

மழை நீர் வடிவதற்கு ஒரு வாரம் ஆகும் நோய் பரவுவதை தடுக்க ‘பிளச்சிங்’ பவுடர் தூவப்படுகிறது



கோவிலம்பாக்கம், பள்ளிக்கரணை உள்பட சென்னை புறநகர் பகுதிகளில் மழை நீர் வடிவதற்கு ஒரு வாரம் காலம் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நவம்பர் 06, 2017, 05:30 AM
சென்னை,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 31-ந்தேதி முதல் 5 நாட்கள் மழை பெய்தது. சில இடங்களில் கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. தொடர் மழை காரணமாக சென்னையை சுற்றியுள்ள ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

சென்னையில் தேங்கிய மழைநீர் கொஞ்சம் கொஞ்சமாக வடிய தொடங்கியுள்ள நிலையில், புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் வடிவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. புறநகர் பகுதிகளான கோவிலம்பாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், வேளச்சேரி, கூடுவாஞ்சேரி போன்ற இடங்களில் சில பகுதிகளில் இன்றளவும் இடுப்பளவு நீர் தேங்கி இருக்கிறது.

கோவிலம்பாக்கத்தில் திரு.வி. நகர், சிண்டிகேட் வங்கி காலனி, கண்ணா அவென்யூ, காதிதபுரம், உம்மைநகர், என்ஜினீயர்ஸ் காலனி, கிருஷ்ணா நகர், பாக்கியலட்சுமி நகர், ராஜேஸ்வரி நகர், எல்.ஐ.சி. நகர், ராஜா நகர் போன்ற இடங்களில் தண்ணீர் அதிகளவில் தேங்கி இருக்கிறது.

இந்த பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன. அந்த பகுதிகள் முழுவதையும் மழைநீர் சூழ்ந்து உள்ளது. தேங்கி இருக்கும் மழைநீர் வடிவதற்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லாத நிலை அங்கு ஏற்பட்டு இருக்கிறது. 80 அடி அகலத்தில் இருந்த மழைநீர் வடிகால் 20 அடி அகலத்துக்கு மாறியுள்ளதும், ஆக்கிரமிப்புகளால் அந்த நீர் செல்வதற்கு ஏதுவான சூழ்நிலை இல்லாததும் தான் காரணம் என்று அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கோவிலம்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாகவும், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்பதும் பலருடைய குற்றச்சாட்டாக இருக்கிறது. கோவிலம்பாக்கத்தில் தேங்கி இருக்கும் மழைநீரால் பலர் அந்த பகுதியை காலி செய்து உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் தங்கியுள்ளனர்.

இதேபோல், பள்ளிக்கரணை, கூடுவாஞ்சேரி, மணிமங்கலம், முடிச்சூர், வரதராஜபுரம், வேளச்சேரி உள்பட சென்னையின் புறநகர் பகுதிகளின் பல இடங்களில் மழைநீர் வடியாமல் இருக்கிறது. இதுபோன்று புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் சதுப்பு நிலங்களுக்கு செல்ல வேண்டும். அப்படி சென்றால் மட்டுமே இந்த பகுதிகளில் நீர் வடியும். அவ்வாறு நீர் வடிவதற்கு குறைந்தது ஒரு வாரம் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மழைநீர் தேங்கியுள்ள சில இடங்களில் லாரிகள் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு மழைநீர் வடிகாலுக்கு நேரடியாக கொண்டு சென்று அங்கு விடப்படுகிறது. சென்னை புறநகரில் மழைநீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் நோய் பரவாமல் தடுக்க பொது சுகாதாரத்துறை பிளச்சிங் பவுடர் தூவும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அதேபோல், தேங்கி நிற்கும் தண்ணீரினால் நோய் தொற்றால் யாரும் பாதிக்கப்படுகிறார்களா? என்பதை கண்காணிக்க சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 106 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

No comments:

Post a Comment

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters  TIMES NEWS NETWORK 24.10.2024 Dindigul : Tamil Nadu governor R N Ravi awarded  degrees to...