Monday, November 6, 2017


மதுரையில் 10 மாதங்களில் 74 பேர் விபத்தில் பலி: பெரும்பாலானோர் பைக்கில் சென்ற இளைஞர்கள்

Published : 05 Nov 2017 12:23 IST

மதுரையில் கடந்த 10 மாதங்களில் 72 பேர் விபத்தில் பலியாகியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பைக்கில் சென்ற இளைஞர்கள் என்பது தெரியவந்துள்ளது.

மதுரையில் வாகனப் பெருக்கத்துக்கு ஏற்றார்போல சாலைகள் அகலப்படுத்தப்படவில்லை. மேம்பாலங்கள் கட்டப்படவில்லை. மதுரை நகரில் ஏறக்குறைய அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்றதாகி விட்டன.

அதனால் கோரிப்பாளையம், காளவாசல், தல்லாகுளம், சுற்றுச்சாலை, பெரியார் பஸ் நிலையம், மேலூர் சாலை உள்பட நகரில் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. முன்பு காலை, மாலை ‘பீக் அவர்ஸ்’ஸில் மட்டும் அதிக நெரிசல் இருந்தது. தற்போது எல்லா நேரங்களிலும் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் அளவுக்கு நெரிசல் நிரந்தரமாகி விட்டது.

திருவிழா காலங்களில் நகரின் ஒட்டுமொத்த போக்குவரத்தும் ஸ்தம்பிக்கிறது. போக்குவரத்து நெரிசல் ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் அதிக வேகத்தில் செல்லும் வாகன ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்களால் மதுரையில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டு அதிக விபத்துகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 10 மாதங்களில் மட்டும் மாநகர் பகுதியில் 72 பேர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 20 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள். மற்றவர்கள் 55 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள்.

இதுகுறித்து நகர் போக்குவரத்து உதவி ஆணையர் ஜோசப் நிக்சன் கூறியதாவது:

ஓட்டுநர்கள் சாலை விதிகளை சரியாக பின்பற்றாமல் இருப்பதே விபத்துகளுக்கு காரணம். குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்துக்கு முன்கூட்டியே செல்ல வேண்டும் என நினைக்கிறோம். ஆனால், அதை முன்கூட்டியே திட்டமிடுவதில்லை. சாலைக்கு வந்த பிறகே முடிவு செய்கின்றனர். அதனால், அதி வேகத்தில் சென்று மற்ற வாகனங்கள் மீது மோதி விபத்தில் சிக்குகின்றனர். மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுகின்றனர். ஆட்டோ ஓட்டுநர்கள் பெரும்பாலானோர் போக்குவரத்து விதிகளை மதிப்பதேயில்லை. பலர் இரவு நேரத்தில் மது அருந்தி விட்டு ஆட்டோக்களை வேகமாக ஓட்டி செல்கின்றனர்.

பகல் நேரத்தில் பயணிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிக் கொண்டும், மற்ற வாகனங்களை பற்றி கவனிக்காமல் சாலையின் குறுக்கும், நெடுக்குமாக செல்கின்றனர். திடீரென்று பிரேக் போட்டு நிறுத்தி பயணிகளை ஏற்றுகின்றனர். அதனால் அவர்களாலும் விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன. இந்த ஆண்டு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் யாரும் அகால மரணம் அடையவில்லை. நேருக்குநேர் மோதலில் விபத்து ஏற்படவில்லை. வேகமாக ரோட்டில் சென்று சறுக்கி விழுந்து காயமடைந்து இறந்துள்ளனர். முன்னால் சென்ற வாகனங்கள் மீது மோதி பலர் உயிரிழந்துள்ளனர். போலீஸார் இல்லாத இடங்களில் இந்த விபத்துகள் அதிகளவு நடந்துள்ளன.

தற்போது தல்லாகுளம், பாண்டிகோயில் ஜங்ஷன், மீனாட்சிமிஷன் மருத்துவமனை ஜங்ஷன், மேலூர் ரோடு பூக்கடை பஜார், ஆவின் ஜங்ஷன், மேலமடை, அழகர்கோவில் ரோடு புதூர், திண்டுக்கல் பை-பாஸ் சாலை, பாத்திமா கல்லூரி, கரிமேடு தேனி ரோடு, ஆரப்பாளையம் வைகை ஆறு ரோடு, டிபி ரோடு, எல்லீஸ் நகர் ரோடு, திருநகர், ரிங் ரோடு உட்பட 21 இடங்களை அதிகமான விபத்து நடக்கும் இடங்களாக கண்டறிந்துள்ளோம். இந்த இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். விபத்துகளை தடுக்க போதையில் இரு சக்கர வாகனம், ஆட்டோ ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவர் என்றார்.

No comments:

Post a Comment

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters  TIMES NEWS NETWORK 24.10.2024 Dindigul : Tamil Nadu governor R N Ravi awarded  degrees to...