Monday, November 6, 2017


வாழ்க நீ தினத்தந்தி!

Published : 01 Nov 2017 09:19 IST

உயர்ந்த குறிக்கோளுடனும் நூற்றுக்கணக்கான நாளிதழ்கள் உதயமான நிலம் தமிழ் மண். அவற்றில் அரை நூற்றாண்டைக் கடந்து இப்போதும் அதே மிடுக்கோடு வெளிவந்துகொண்டிருக்கும் தமிழ் நாளிதழ்கள் ஏழு மட்டுமே. ‘தினமணி’ (1934), ‘விடுதலை’ (1935), ‘ஜனசக்தி’ (1937), ‘முரசொலி’ (1942), ‘தினத்தந்தி (1942), ‘தினமலர்’ (1951), ‘தீக்கதிர்’ (1963). இவற்றில் விற்பனையில் மட்டுமல்லாமல், வாசகர் எண்ணிக்கையிலும் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது ‘தினத்தந்தி’. பேருந்துகள் செல்லாத மலைக் கிராமங்களிலும் ‘தினத்தந்தி’ புழங்க மிக முக்கியமான காரணம், அதன் எளிய தமிழும் அசாதாரணமான விநியோக வலைப்பின்னலும்!

சி.பா. ஆதித்தனாரால் 01.011.1942-ல் மதுரையில் தொடங்கப்பட்ட நாளிதழ் ‘தினத்தந்தி’. அன்றைக்கெல்லாம் தமிழ் பேசும் மக்களில் படித்தவர்கள் எண்ணிக்கை இன்றைய சூழலோடு எல்லாம் ஒப்பிடவே முடியாதது. உலகப் போர்க் காலம். பத்திரிகைக் காகிதத்துக்குக்கூட கடுமையான தட்டுப்பாடு. மிகுந்த இக்கட்டுகளுக்கு இடையிலேயே பத்திரிகையை நடத்தத் தொடங்கினார் ஆதித்தனார். வெளிநாடு சென்று திரும்பிய பாரிஸ்டர்கள் பத்திரிகையைத் தொடங்குவது அந்நாட்களில் புதுமை அல்ல; ஆனால், மெத்தப் படித்த மேல்தட்டு மக்களுக்கான பத்திரிகையாக அல்லாமல், வெகுமக்களுக்கான பத்திரிகையைக் கனவு கண்டவர் ஆதித்தனார். சாமானிய மக்களின் மீது நம்பிக்கை வைத்தவர். அவரால் பத்திரிகையாளர்களாக உருவாக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் கீழ்நிலைச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள், எளிய குடும்பங்களிலிருந்து வந்தவர்கள், பெரிய படிப்புகள் படிக்காதவர்கள் என்பது நினைவுகூர வேண்டியது. தமிழ் இதழியல் சூழலில் தீர்க்கமாகப் பெரும் மாற்றத்தை உண்டாக்கியது தினத்தந்தி.

மதுரையில் 1942-ல் எளிமையாக நடந்த பத்திரிகை தொடக்க விழாவில், “இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் எல்லாம் வட்டாரத் தலைநகரங்களிலிருந்து வெற்றிகரமாகப் பத்திரிகைகளை நடத்துகிறார்கள். 100 மைல் சுற்றளவு என்றால், சுடச்சுடச் செய்திகளைச் சேகரித்து ரயில், பஸ்கள் வாயிலாக உடனுக்குடன் அனுப்ப முடியும். எனவே, ஒவ்வொரு மாவட்டத் தலைநகரத்திலும் பத்திரிகையைத் தொடங்கி செய்திகளை விரைவாகத் தர வேண்டும் என்பது என் ஆசை” என்று குறிப்பிட்டார் ஆதித்தனார். அதைப் பெருமளவில் இன்று சாதித்துவிட்டனர் அவருடைய வழித்தோன்றல்களான அவருடைய மகன் சிவந்தி ஆதித்தனும் பேரன் பாலசுப்பிரமணியன் ஆதித்தனும்.

ஆதித்தனார், “தமிழர் நலன், தமிழர் உரிமையே என் முதன்மை நோக்கம்” என்றவர். பொன் விழா கொண்டாடியபோது, ‘தினத்தந்தி’ யின் பெயருக்குக் கீழ் ‘வெல்க தமிழ்’ முழக்கத்தை இணைத்தார் சிவந்தி ஆதித்தன். ‘தினந்தந்தி’ பவள விழா கொண்டாடும் சூழலில், தமிழர் உரிமை பற்றி இன்னும் அழுத்தமாகப் பேச வேண்டிய அரசியல், சமூகத் தேவை தமிழகத்தில் உருவாகியிருக்கிறது. அண்ணா சொன்னதுபோல, “தமிழர்களுடைய உரிமைகளைப் பாதுகாக்கும் வாளாகவும், கேடயமாகவும் தினத்தந்தி என்றும் திகழ வேண்டும்!” தன்னுடைய லட்சியப் பாதையில் ‘தினத்தந்தி’ இன்றுபோல் என்றும் வெற்றிநடை போட 140 ஆண்டு பாரம்பரியப் பெருமை தரும் உரிமையுடன் மனதார வாழ்த்துகிறது ‘தி இந்து’!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024