Tuesday, November 21, 2017

மூத்த குடிமக்கள் விட்டுக்கொடுத்த 200 கோடி ரூபாய்





மத்திய அரசாங்கமும், மாநில அரசுகளும் ஆண்டுதோறும் பட்ஜெட்டுகளை தாக்கல்செய்து பொதுமக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

நவம்பர் 21 2017, 03:00 AM மத்திய அரசாங்கமும், மாநில அரசுகளும் ஆண்டுதோறும் பட்ஜெட்டுகளை தாக்கல்செய்து பொதுமக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இதில், பெருமளவு தொகை மானியங்கள், உதவித்தொகைகளுக்காக சென்றுவிடுவதால் வளர்ச்சித்திட்டங்கள் சரிவர நிறைவேற்றப்பட முடியாத சூழ்நிலை உள்ளது. இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசாங்கத்தின் பட்ஜெட்டில், மானியங்களுக்காக ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து 276 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசை எடுத்துக்கொண்டாலும், மொத்த பட்ஜெட்டில் வருவாய் கணக்கு செலவுகள் தொகை ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்து 293 கோடியில் மானியம் மற்றும் உதவித்தொகைகளுக்காக மட்டும் ரூ.72 ஆயிரத்து 616 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தினமும் 2 கோடியே 30 லட்சம் பயணிகள் ரெயிலில் பயணம் செய்துகொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்காக ரெயில்வே செலவழிக்கும் தொகையில் 57 சதவீதம்தான் டிக்கெட் தொகையாக வசூலிக்கப்படுகிறது. இதுபோல, புறநகர் ரெயில்களில் ஒவ்வொரு பயணிக்கும் ஆகும் செலவில் 37 சதவீதம்தான் டிக்கெட் தொகையாக கிடைக்கிறது.

பயணிகள் போக்குவரத்தில் மட்டும் ரெயில்வேயில் ஆண்டுக்கு ரூ.34 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பை சரிகட்ட ரெயில்வே நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ரெயில் பயணிகளில் 55 இனங்களில் ரெயில் டிக்கெட்டுகளுக்கு சலுகை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்படும் டிக்கெட் சலுகை ஆகும். 58 வயதுக்கு மேற்பட்ட பெண் பயணிகளுக்கு மூத்த குடிமக்கள் என்றவகையில், 50 சதவீத கட்டண சலுகையும், 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் பயணிகளுக்கு 40 சதவீத கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது. அனைத்து வகுப்பு பயணிகளுக்கும் இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன. மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்காக மட்டும் ரெயில்வே நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு ரூ.1,300 கோடி செலவாகிறது. இந்தநிலையில், பரிதாபாத்தைச் சேர்ந்த அவதார் கேர் என்பவர் கடந்த ஜூன் மாதத்தில் ஜம்மு ராஜதானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்துவிட்டு வந்தவுடன், ரெயில்வே நிர்வாகத்துக்கு ஒரு கடிதம் எழுதினார். ‘நான் ரெயிலில் பயணம் செய்வதற்கு ஆகும் செலவில் 43 சதவீதம் பணத்தை வரிகட்டும் சாதாரண பொதுமக்கள் ஏற்கிறார்கள் என்று கேள்விப்பட்டு வேதனை அடைந்தேன். எனக்கு சலுகை கட்டணம் வேண்டாம். நானும், எனது மனைவியும் பயணம் செய்தவகையில் சலுகை கட்டணமாக தந்த தொகை 950 ரூபாயை திருப்பி அனுப்புகிறோம். இனி ஒருபோதும் சலுகை கட்டணத்தில் பயணம் செய்யமாட்டோம்’ என்று கூறி இந்த தொகைக்கான ‘செக்’கை அனுப்பியவுடன், அப்போது ரெயில்வே மந்திரியாக சுரேஷ்பிரபு இவ்வாறு சலுகை கட்டணம் வேண்டாம் என்று சொல்பவர்கள் தாங்களாகவே முன்வந்து சலுகை கட்டணத்தில் முழுதொகையையோ அல்லது பாதித்தொகையையோ விட்டுக்கொடுக்கலாம் என்ற ஒரு திட்டத்தை கொண்டுவந்தார்.

கடந்த ஜூலை மாதம் 22–ந்தேதி இந்தத்திட்டம் தொடங்கியது. அக்டோபர் 20 வரை ஒரு கோடியே 69 லட்சம் மூத்த குடிமக்கள் பயணம் செய்திருக்கிறார்கள். இதில் 4 லட்சத்து 4 ஆயிரம் மூத்த குடிமக்கள் தாங்களாகவே முன்வந்து ‘எங்களுக்கு மானியம் வேண்டாம், முழுத்தொகையையும் கட்டி பயணம் செய்கிறோம்’ என்று மானியத்தொகையை விட்டுக்கொடுத்த வகையிலும், 4 லட்சத்து 56 ஆயிரம் பேர் 50 சதவீதத்தை விட்டுக்கொடுத்த வகையிலும், ரூ.200 கோடி ரெயில்வே நிர்வாகத்திற்கு கூடுதல் வருமானமாக கிடைத்துள்ளது. இவர்கள் அனைவரும் சமுதாய கடமையை உணர்ந்து மானியம் வேண்டாம் என்ற சொன்னவகையில் பாராட்டுக்குரியவர்கள். இவர்கள் காட்டிய எடுத்துக்காட்டை அரசாங்கம், மற்ற மானியத்திட்டங்களிலும் செயல்படுத்த வேண்டும். இதுபோன்று மானியம் வேண்டாம் என்று சொல்பவர்களுக்கு அந்தத்திட்டத்தில் பணச்சலுகைகளை தவிர வேறுபல சலுகைகளை செய்து கவுரவப்படுத்தலாம். எங்களுக்கு தகுதி இருக்கிறது, மானியம் வேண்டாம் என்று சொல்பவர்கள் நிச்சயமாக பாராட்டுக்குரியவர்கள்.

No comments:

Post a Comment

‘Indian doctors and healthcare professionals are a class apart’

‘Indian doctors and healthcare   professionals are a class apart’ Tamil Nadu Governor R.N. Ravi handing over a degree to a graduand at the c...