டிசம்பர் 21-ந் தேதி ஓட்டுப்பதிவு ஆர்.கே.நகர் தேர்தல் ஏற்பாடு தொடங்கியது
ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அதிகாரபூர்வ மாக அறிவித்து இருக்கிறது.
நவம்பர் 25, 2017, 05:45 AM புதுடெல்லி,
ஆர்.கே.நகர் சட்ட சபை தொகுதியின் உறுப்பினராக இருந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதி காலியானது.
அவரது மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. பண பட்டுவாடா புகார் காரணமாக அந்த இடைத்தேர்தலை தேர்தல் கமிஷன் ரத்து செய்தது.
இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தும் பிரச்சினை தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற டிசம்பர் 31-ந் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் கமிஷன் ஆலோசித்து வந்தது.
இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.
அதன்படி ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற டிசம்பர் 21-ந் தேதி (வியாழக்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிக்கை வருகிற 27-ந் தேதி (திங்கட் கிழமை) வெளியிடப்படுகிறது. அன்றே வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய டிசம்பர் 4-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை டிசம்பர் 5-ந் தேதி நடைபெறும். போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற 7-ந் தேதி கடைசி நாள். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குப்பதிவு டிசம்பர் 21-ந் நடைபெறும். டிசம்பர் 24-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
ஓட்டுப்பதிவுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும். வாக்காளர்கள் யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் ஒப்புகைச் சீட்டு முறையும் அமல்படுத்தப்படுகிறது.
இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
தேர்தல் கமிஷனின் அறிவிப்பை தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தலை நடத்துவதற்காக ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று சென்னையில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
No comments:
Post a Comment