Saturday, November 25, 2017

பல கேள்விகளுக்கு விடை சொல்லப்போகும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்




ஆர்.கே.நகர் என்று கூறப்படும் சென்னை டாக்டர் ராதா கிருஷ்ணன் நகர் தொகுதிக்கு டிசம்பர் 21–ந்தேதி வியாழக் கிழமை அன்று தேர்தல் என்று அறிவிக்கப்பட்டு விட்டது.

நவம்பர் 25 2017, 03:00 AM ஆர்.கே.நகர் என்று கூறப்படும் சென்னை டாக்டர் ராதா கிருஷ்ணன் நகர் தொகுதிக்கு டிசம்பர் 21–ந்தேதி வியாழக் கிழமை அன்று தேர்தல் என்று அறிவிக்கப்பட்டு விட்டது. மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா இரண்டு முறை வெற்றிபெற்ற தொகுதி. எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பிறகு அ.தி.மு.க. ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாக பிளவுப்பட்டு, இரட்டைஇலை சின்னம் முடக்கி வைக்கப்பட்டு, 1989–ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயலலிதா அணி சேவல் சின்னத்திலும், ஜானகி அணி இரட்டைப்புறா சின்னத்திலும் போட்டியிட்டு தோல்வியை தழுவியது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு, இரு அணிகளும் ஒன்றாக இணைந்து இரட்டை இலை சின்னத்தை பெற்றது. அதுபோல ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு முதலில் ஓ.பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என்று இரண்டாக பிளவுப்பட்டநிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலிலும் இரட்டை இலை சின்னம் எந்த அணிக்கும் கொடுக்கப்படவில்லை.

ஓ.பன்னீர்செல்வம் அணியில் போட்டியிட்ட மதுசூதன னுக்கு இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னமும், சசிகலா அணியில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரனுக்கு தொப்பி சின்னமும் வழங்கப்பட்டது. இந்தியாவிலேயே எந்த தொகுதியிலும் இல்லாத அளவிற்கு இந்த தொகுதியில் பணமழையும், பரிசுமழையும் பெருமளவில் பெய்தது. தேர்தல் கமி‌ஷனும் எவ்வளவோ நடவடிக்கை எடுத்து பார்த்தது. மத்தியபடை வந்தது. பார்வையாளர்கள் ஏராள மானவர்கள் நியமிக்கப்பட்டனர். எல்லாவற்றையும்மீறி பணப்பட்டுவாடாவை தடுக்க சிறப்பு தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்ட பிறகும் எதையும் நிறுத்த முடியவில்லை. இதையடுத்து தேர்தல் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் கமி‌ஷன் நிறுத்தியது. பிறகு சசிகலா அணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி தனியாகப் பிரிந்து, சசிகலா அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் தனியாக செயல்பட்டன. சிறிது காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைந்தது. இந்தநிலையில், இரட்டைஇலை சின்னம் எங்களுக்கு வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஒருபக்கம், டி.டி.வி.தினகரன் தரப்பினர் மற்றொரு பக்கம் தேர்தல் கமி‌ஷனிடம் மனு செய்தனர். இரு தரப்பினரிடமும் தீவிர விசாரணை நடத்திய தேர்தல் கமி‌ஷன், அ.தி.மு.க.வின் பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற–பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு இருப்பதால் அவர்களுக்கே இரட்டை இலை சின்னம், கட்சிப்பெயர், கொடியை பயன்படுத்தும் அனுமதி எல்லாவற்றையும் வழங்கி தீர்ப்பு வழங்கியது. தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை என்றும், இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்றும் டி.டி.வி.தினகரன் அறிவித்திருந்தார். இதற்கிடையே, சின்னம் ஒதுக்கீடு தொடர்பான ஏதேனும் விசாரணை நடந்து தீர்ப்பு அறிவிக்கும்முன், தங்களது கருத்தையும் கேட்க வேண்டும் என்ற வகையிலான ‘கேவியட்மனு’ ஒன்றை ஓ.பன்னீர்செல்வம் நேற்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படுமா? என்ற நிலையில், நேற்று காலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது.

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு நடக்கப் போகும் முதல் தேர்தல். கலைஞர் கருணாநிதி உடல்நலக்குறைவால் ஓய்வு எடுத்துக் கொண்டு இருப்பதற்கு பிறகு நடக்கும் முதல் தேர்தல். எம்.ஜி.ஆர். மறைந்த தினத்தன்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்போகும் தேர்தல். ஏற்கனவே இந்த தொகுதியில் பணமழை, பரிசுமழை தொடர்பாக தேர்தல் கமி‌ஷன் பாடம் படித்து விட்டது. ஒருதொகுதியில் எந்தவித முறைகேடுகளும் இல்லாமல் தேர்தலை நடத்த வேண்டுமென்றால், என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்? என்று தேர்தல் கமி‌ஷனுக்கு இப்போது நன்றாகத் தெரிந்திருக்கும். இந்த தேர்தல் எந்தவித முறை கேடுக்கும் இடம் கொடுக்காது. நிச்சயமாக ஜனநாயக முறைப்படி நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இருக்கிறது. அடுத்த சில நாட்களில் எந்தெந்த கட்சிகளின் சார்பில் யார்–யார் வேட்பாளர்கள்?, இரட்டை இலை சின்னத்தில் எடப்பாடி பழனிசாமி அணி போட்டியிடுமா?, அப்படி போட்டியிட்டால் டி.டி.வி.தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிடப்போகிறாரா?, நேர்மையான தேர்தல் நடக்கும் பட்சத்தில் யாருக்கு எவ்வளவு பலம், எந்தெந்த கட்சிகள் யார்–யாருடன் கூட்டணி சேரும்? என்பதுபோன்ற பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை கூறப்போகும் தேர்தலாக இது அமையும்.

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...