Saturday, November 25, 2017


சசிகுமார் ஒத்துழைப்பு கொடுக்காததால் அன்புசெழியனை பிடிப்பதில் தாமதம் போலீஸ் உத்தரவிட்டதால் சசிகுமார் திங்கட்கிழமை ஆஜராகிறார்




நடிகர் சசிகுமார் தரப்பினர் சரியான ஒத்துழைப்பு தராததால் தலைமறைவான பைனான்சியர் அன்புசெழியனை பிடிப்பதில் தாமதம் ஏற்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

நவம்பர் 25, 2017, 05:15 AM

பூந்தமல்லி,

நடிகர் சசிகுமார் தரப்பினர் சரியான ஒத்துழைப்பு தராததால் தலைமறைவான பைனான்சியர் அன்புசெழியனை பிடிப்பதில் தாமதம் ஏற்படுவதாக போலீசார் தெரிவித்தனர். நேரில் ஆஜராக உத்தரவிட்டதை தொடர்ந்து சசிகுமார் திங்கட்கிழமை ஆஜராகிறார்.

தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான சசிகுமாரின் அத்தை மகன் அசோக்குமார் (வயது 43) வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்தார். இவர் சசிகுமார் நடத்திவரும் ‘கம்பெனி புரடக்சன்’ நிறுவனத்தில் இணை தயாரிப்பாளராகவும் இருந்துவந்தார்.

கடன் தொல்லையால் கடந்த 21–ந் தேதி கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கடிதத்தில், தற்கொலைக்கு சினிமா பைனான்சியர் அன்புசெழியனிடம் வாங்கிய கடனே காரணம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

நடிகர் சசிகுமார் அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் முதல்கட்டமாக அன்புசெழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்தனர். போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். ஒரு பிரிவினர் மதுரைக்கும், மற்றொரு பிரிவினர் ராமநாதபுரத்துக்கும் சென்று அன்புசெழியனை தீவிரமாக தேடினர். போலீசார் தேடுவதை அறிந்த அன்புசெழியன் தலைமறைவாகி உள்ளார்.

மேலும் அவரது குடும்பத்தினர் மற்றும் அலுவலகத்தில் பணிபுரிவோர் என அனைவரும் தலைமறைவாகி உள்ளனர். சசிகுமார் தரப்பினர் சரியான ஒத்துழைப்பு கொடுக்காததால் தலைமறைவாக உள்ள அன்புசெழியனை பிடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

சசிகுமார் புகார் செய்த அன்று இரவே அன்புசெழியன் செல்போனை சுவிட்ச்–ஆப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். கடைசியாக அவரது செல்போன் தியாகராயநகரில் இருப்பதாக காட்டியது. அன்புசெழியனிடம் இருந்து சசிகுமார் தரப்பினர் எவ்வளவு பணம் கடனாக வாங்கினார்கள். அதற்காக என்ன சொத்து ஆவணங்கள் அடமானம் வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

அவர்கள் தரப்பில் இருந்து இந்த தகவல்களை அளித்தால் தான் இந்த வழக்கை மேற்கொண்டு வேறு பிரிவுக்கு மாற்றம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும். இதுகுறித்து சசிகுமார் தரப்பிடம் கேட்டபோது, அவர்கள் இதுவரை நேரில் வரவில்லை. இதனால் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது.

அசோக்குமாரின் இறுதிச்சடங்குகள் முடிந்து, அதற்கான காரியம் எல்லாம் முடிந்த பிறகுதான் ஊரைவிட்டு வெளியே வரவேண்டும் என்பது அவர்களின் சம்பிரதாயம் என்பதால் திங்கட்கிழமை நேரில் ஆஜராவதாக சசிகுமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகுமார் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் திங்கட்கிழமை நேரில் ஆஜராகி இந்த சம்பவம் குறித்து உரிய தகவல் கொடுத்த பிறகு தான் இந்த வழக்கை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்ல முடியும். ஆனாலும் தலைமறைவாக உள்ள அன்புசெழியனை பிடிக்கும் பணியில் தீவிரம் காட்டிவருகிறோம்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

‘Indian doctors and healthcare professionals are a class apart’

‘Indian doctors and healthcare   professionals are a class apart’ Tamil Nadu Governor R.N. Ravi handing over a degree to a graduand at the c...