Tuesday, November 7, 2017

2ஜி,வழக்கு,இன்று,தீர்ப்பு,தேதி
புதுடில்லி: காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு தேதி, இன்று அறிவிக்கப்பட உள்ளது.

'இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, கடந்த விசாரணையின்போது ஆஜராகாத, கரீம் மொரானி, சஞ்சய் சந்திரா மற்றும், தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜா, கனிமொழி ஆகியோர் உட்பட, அனைவரும் இன்று ஆஜராக வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால், 10 ஆண்டுகளுக்கு முன், ஊழல் செய்தவர்கள், அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

ரூ1.76 லட்சம் கோடி இழப்பு

மத்தியில், காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியின்போது, 2007 - 2009 வரை, மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக, தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜா இருந்தார்.அப்போது, மொபைல் போன் சேவைகளுக்கான, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக, சி.ஏ.ஜி., எனப்படும், மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் குறிப்பிடப் பட்டது.
இதனால், அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏறபட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது.இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்து வந்தது. இந்த ஊழலில் நடந்துள்ள பண மோசடி குறித்து, மத்திய அமலாக்கத் துறை தனியாக விசாரித்தது. இந்தவழக்குகளை, டில்லியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.சைனி விசாரித்து வந்தார்.இந்தாண்டு ஏப்ரலில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தன. வழக்கு தொடர்பாக அதிக ஆவணங்களை பரிசீலிக்க வேண்டி இருப்பதால், தீர்ப்பு தேதி ஒத்திவைக் கப்படுவதாக, நீதிபதி சைனி கூறியிருந்தார்.

இதையடுத்து, கடந்த மாத இறுதியில் நடந்த விசாரணையின்போது, தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜா, கனிமொழி ஆகியோர் ஆஜராயினர். ஆனால், தீர்ப்பில் பல ஆவணங்கள் சேர்க்கப்பட வேண்டி இருந்ததால், தீர்ப்பு வழங்குவது தாமதம் ஆனது.

அதனால், நவ., 7ல், தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்றும், ராஜா, கனிமொழி, சிறையில் உள்ள சஞ்சய் சந்திரா, கரீம் மொரானி உள்ளிட்ட, குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட உள்ளது. தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளும், எம்.பி.,யுமான, கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றஞ்சாட்டப் பட்டு உள்ளதால், இந்த வழக்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பு, தங்கள் அரசியல் எதிர்காலத்தை கடுமையாகபாதிக்கும் என்ற அச்சத்தில் , சம்பந்தப்பட்ட

பிரபலங்கள் உறைந்து போய் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

சிக்கியவர்கள் யார்?

'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்தது. தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா, எம்.பி.,யுமான, கனிமொழி ஆகியோரை குற்றவாளிகளாக, சி.பி.ஐ., கூறியுள்ளது.

மேலும், தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலர், சித்தார்த் பகுரா, ராஜாவின் முன்னாள் உதவியாளர், ஆர்.கே.சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் நிறுவன உரிமையாளர்கள், ஷாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, யூனிடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் - அனில் திருபாய் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த அதிகாரிகளான, கவுதம் தோஷி, சுரேந்திர பிபாரா, ஹரி நாயர் ஆகியோர் மீதும், குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ரூ.200 கோடி லஞ்சம்

'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கியதற்கு லஞ்சமாக, ஸ்வான் டெலிகாம் நிறுவனம் மூலம், டி.பி., குழுமம், 200 கோடி ரூபாயை, கலைஞர், 'டிவி'க்கு அளித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து உள்ளது. அதில், ராஜா, கனிமொழியுடன், தி.மு.க., தலைவர், கருணாநிதியின் மனைவி, தயாளு உள்ளிட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024