Sunday, November 5, 2017

3 நாள்களில் படிப்படியாக மழை குறையும்


By DIN  |   Published on : 05th November 2017 04:45 AM 
umarain

சென்னை உள்பட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்னும் 2 நாள்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உண்டு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்னும் 3 நாள்களில் மழை படிப் படியாகக் குறையும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடலோர மாவட்டங்களில்... 
தமிழகத்தில் கடந்த அக். 27 -ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கி தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை நேரத்தில் மிதமாக மழை தொடங்கி, இரவு நேரத்தில் வலுக்கிறது.
சென்னை, புறநகர்ப் பகுதிகளில்... சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரை மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் மேலும் கூறியது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, சனிக்கிழமை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டி உள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கரை வரை நிலைக்கொண்டிருந்தது . மேலும் மன்னார் வளைகுடா பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 
அடுத்த 24 மணி நேரத்தில்... அடுத்து வரும் 24 மணி நேரத்தைப் பொருத்தவரை தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கன மழையைப் பொருத்தவரையில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உண்டு. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொருத்தவரையில் மாலை மற்றும் இரவு வேளைகளில் இடைவெளி விட்டு சில முறை இடியுடன் கூடிய மழை பெய்யும். சில நேரங்களில் பலத்த மழையாகவும் இருக்கும் என்றார் பாலச்சந்திரன்.
சென்னையில் மழை சாதனை!
சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் மொத்தம் 620 மி.மீ. மழை பெய்துள்ளது. பொதுவாக அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நவம்பர் 4-ஆம் தேதி வரை சராசரி மழை அளவு 320 மி.மீ.-ஆக இருக்கும்; ஆனால், வடகிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் (அக்டோபர் 1-நவம்பர் 4) 93 சதவீதம் அதிகமாக 620 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்.
தமிழக அளவில் சராசரியாக இயல்பான மழை அளவு 210 மி.மீ. ஆகும்; இதுவரை பெய்துள்ள மழை அளவு 190 மி.மீ. ஆகும். எனவே இயல்பான சராசரி மழை அளவைக் காட்டிலும் 8 சதவீதம் குறைவாக இதுவரை மழை பதிவாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மழை அளவு: நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி- 240 மி.மீ, வேதாரண்யம்-160 மி.மீ., திருத்துறைப்பூண்டி -130 மி.மீ., மயிலாடுதுறை, சீர்காழி - 110 மி.மீ. பொன்னேரி- 100 மி.மீ., பரங்கிப்பேட்டை, ஆனைக்காரன்சத்திரம், நாகப்பட்டினம்-90 மி.மீ., அண்ணா பல்கலைக்கழகம், காரைக்கால், கடலூர், சென்னை நுங்கம்பாக்கம் -70மி.மீ., சென்னை விமான நிலையம், சென்னை டி.ஜி.பி. அலுவலகம்-60 மி.மீ.; திருவாரூர், சிதம்பரம், நன்னிலம், விருதாச்சலம், மரக்காணம், செம்பரம்பாக்கம், சேத்தியாதோப்பு - 50 மி.மீ. பதிவாகியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024