இரு நாள்களில் வெளியாகவுள்ள ஐந்து முக்கியப் படங்கள்!
By எழில் | Published on : 04th November 2017 04:38 PM
நவம்பர் 30, டிசம்பர் 1 என இரு நாள்களில் 5 முக்கியப் படங்கள் வெளியாகவுள்ளன.
நவம்பர் 30 அன்று அண்ணாதுரை, கொடி வீரன், திருட்டுப் பயலே 2 ஆகிய மூன்று படங்கள் வெளியாகவுள்ளன.
முத்தையா இயக்கத்தில் சசிகுமார், மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியுள்ள படம் - கொடிவீரன். இசை - என்.ஆர். ரகுநாதன்.
இயக்குநர் சுசி கணேசன், திருட்டுப் பயலே பாகம் 2 படத்தை எடுத்துவருகிறார். பாபி சிம்ஹா, அமலா பால் போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு இசை - வித்யா சாகர்.
விஜய் ஆண்டனி, டயனா, மஹிமா ராதா ரவி நடிப்பில் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் - அண்ணா துரை. தயாரிப்பு - ராதிகா சரத்குமார் & ஃபாத்திமா விஜய் ஆண்டனி.
இந்த மூன்று படங்களும் வெளியான அடுத்த நாள், டிசம்பர் 1 அன்று ரிச்சி படத்துடன் அருவி என்கிற கவனம் ஈர்த்த படமும் வெளிவருகிறது.
பிரேமம் மலையாளப் படம் மூலமாக தமிழ் ரசிகர்களிடம் அழுத்தமாக அறிமுகம் ஆனவர் நிவின் பாலி. நேரம் படத்திலும் இவர் நடித்துள்ளார். இவர் தமிழில் தற்போது நடித்துள்ள படம் ரிச்சி. கன்னட நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், நட்ராஜ், பிரகாஷ் ராஜ் போன்றோரும் நடித்துள்ள இப்படத்தை மிஸ்கினிடம் உதவியாளராகப் பணிபுரிந்த கெளதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். தூத்துக்குடியில் வசிக்கும் ரெளடி கதாபாத்திரத்தில் நிவின் பாலி நடித்துள்ளார். இதில் அவர் சொந்தக் குரலில் பேசியிருக்கிறார்.
ஜோக்கர்', 'காஷ்மோரா', 'கூட்டத்தில் ஒருத்தன்', 'தீரன் அதிகாரம் ஒன்று' போன்ற படங்களைத் தயாரித்த எஸ்.ஆர்.பிரபுவின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'அருவி'. அருண் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தில் புதுமுகங்கள் பலரும் நடித்துள்ளார்கள். படவிழாக்களில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றதால் இந்தப் படத்தின் மீது பலரும் ஆர்வமாக உள்ளார்கள்.
இதுபோல இரு நாள்களில் ஐந்து முக்கியமான படங்கள் வெளியாகவுள்ளதால் இவற்றில் எது வெற்றி பெறும் என்கிற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளார்கள்.
No comments:
Post a Comment