400 இடங்களில் வாடகை சைக்கிள் சவாரி திட்டம் புதிய முயற்சி 5,000 சைக்கிள்களுடன் களமிறங்குது மாநகராட்சி
Added : நவ 11, 2017 20:08
சென்னையில் நிலவி வரும் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண, 400 இடங்களில், 5,000 சைக்கிள்களுடன், வாடகை சைக்கிள் சவாரி திட்டத்தை, மாநகராட்சி செயல்படுத்த உள்ளது. இது, சுற்றுச்சூழல் பிரச்னைக்கு தீர்வாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தின், 'ஸ்மார்ட் சிட்டி'களிலும், இத்திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.சென்னை மாநகரில், நாளுக்கு நாள் மக்கள்தொகை அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து மேம்பாடு, சாலை விரிவாக்கம், ஆக்கிரமிப்பை தடுப்பது என, ஒவ்வொரு நாளும் பல்வேறு சவால்களை, மாநகராட்சியும், போக்குவரத்து போலீசாரும் சந்தித்து வருகின்றனர்.
இதற்கு தீர்வு காண, சர்வதேச அளவில், பல நாடுகளில் கடைபிடிக்கப்படும் வழிகளை, சென்னை மாநகராட்சியும் பின்பற்ற முடிவு செய்துள்ளது.
'ஸ்மார்ட் கார்டு'
முதற்கட்டமாக, இருசக்கர வாகன போக்குவரத்தை குறைக்க, சைக்கிள் பயண திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி, பொதுமக்களிடம் சைக்கிள் ஓட்டுவது குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், வாடகை சைக்கிள் சவாரி திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.சென்னை நகரில், சில முக்கிய சாலைகளை இணைக்கும் வகையில், 400 இடங்களில் சைக்கிள் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.இவற்றில், பொதுமக்கள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தும் வகையில், 5,000 சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்தில், சைக் கிளை எடுக்க விரும்பும் பயணியர், ஆதார் எண்ணுடன், தங்கள் விபரங்களை, 'ஆன்லைனில்' பதிவு செய்ய வேண்டும். அதன்பின், சைக்கிள் பயணத்திற்கான, 'ஸ்மார்ட் கார்டு' பயணியருக்கு வழங்கப்படும்.இந்த கார்டை பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட நபர், தனக்கு விருப்பமான நிலையங்களில் இருந்து, வாடகைக்கு சைக்கிள் பெற்று, அதை, மீண்டும் ஒப்படைக்க வேண்டும். முதற்கட்டமாக, இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், முதல் அரை மணி நேரத்திற்கு, இலவசமாக சைக்கிள் வழங்கப்படும். பின், ஒவ்வொரு மணி நேரத்திற்கும், வாடகை வசூலிக்கப்படும்.
இத்திட்டத்திற்கு, தனியார் நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த டெண்டருக்கு முந்தைய ஆய்வு கூட்டத்தை, தனியார் நிறுவனங்களுடன், நவ., 9ல், சென்னை மாநகராட்சி நடத்தி உள்ளது. விரைவில், டெண்டர் விடப்பட்டு, விதிகளின் படி, தனியார் சைக்கிள் போக்குவரத்து நிறுவனம் தேர்வு செய்யப்படும் என, மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தனி பாதை
சென்னையின் முக்கிய சாலைகளில், சைக்கிள் திட்டத்துக்காக, ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட தனி பாதைகள் பயன்படுத்தப்பட உள்ளன. சைக்கிள் பாதைகளில் மற்ற வாகனங்கள் சென்றால், அபராதம் விதிக்கவும், போலீசாருடன், சென்னை மாநகராட்சி ஆலோசித்து வருகிறது. அதே போல், அனைத்து சாலைகளிலும் சைக்கிள் பயணம் செய்வதற்கான, சிறிய தடுப்புச்சுவர் கொண்ட தனிபாதை அமைக்கவும், முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சென்னையின் இந்த முன்னோடி திட்டத்திற்கு, மக்களிடம் பெருத்த வரவேற்பு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து, மதுரை, கோவை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட, மத்திய அரசின், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் செயல்படுத்தப்படும்நகரங்களில், வாடகை சைக்கிள் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.- நமது நிருபர் -
No comments:
Post a Comment