Sunday, November 26, 2017

இந்த 7 அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அந்த உறவை முறித்துக் கொள்ளுங்கள்!

By உமா பார்வதி  |   Published on : 24th November 2017 06:43 PM  | 
 நேசிப்பவரை பிரிவது போல் உயிர்வலி தரக் கூடியது வேறெதுவும் இருக்க முடியாது. ஆனால் எதிர்பாராதவிதமாக ஏற்படக் கூடிய அப்பிரிவை மனமொத்து ஏற்றுக் கொள்ளாவிட்டால் உங்களுடைய மிச்ச வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. உங்கள் காதலன் அல்லது காதலி, கணவன் அல்லது மனைவி என நெருக்கமான உறவுகளில் யார் பிரிந்தாலும் அதைப் பக்குவமான மனநிலையில் காரண காரியங்களை யோசித்துச் செயல்பட வேண்டும். ஆனால் பிரிவதற்கு முன் ஆயிரம் தடவை யோசித்துவிடுங்கள். ஏனெனில் பிரிந்துவிட்ட பின்னர் மீண்டும் இணையும் சாத்தியங்கள் குறைவு. உடைந்து போன உறவுகளை என்னதான் செல்லோ டேப் போட்டு ஒட்டினாலும், அவை முன்பு போலிருக்காது என்பது பலரும் அறிந்த உண்மை. பின்வரும் ஏழு விஷயங்களில் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த உறவைத் தொடர வேண்டாம்.

1. திருமணத்துக்குப் பிறகும் உங்களுடைய பழைய காதலைப் பற்றியே எப்போதும் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா?

இது உங்களுடைய வாழ்க்கையை சிதைத்துவிடும் செயல். உங்கள் துணை உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு எதிர்ச் செயல் இது. பழைய காதலைப் பற்றி எப்போதாவது அசைபோடுவது அல்லது மறக்க முடியாமல் தவிப்பது மனித இயல்புதான். நீங்களோ அல்லது உங்கள் துணையோ பழைய காதலை சதா சர்வ காலம் சிலாகித்துக் கொண்டிருந்தால் அல்லது அதை நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்தால் இப்போதைய வாழ்க்கை கசக்கத் தொடங்கும். சிறுகச் சிறுக அதிலிருந்து நீங்கள் விடுபட்டால்தான் உங்களால் புதிய வாழ்க்கைக்குள் உங்களை பொருத்திக் கொள்ள முடியும்.
மேலும் ஒரு உறவுக்கு நீங்கள் மதிப்பு கொடுப்பவர்களாக இருந்தால் முழுமையாக உங்களை அதற்கு ஒப்புக் கொடுக்க வேண்டும். இல்லை எனில் உங்களையும் ஏமாற்றி உங்கள் துணையையும் ஏமாற்றுபவர்களாகி விடுவீர்கள். வண்டி உருண்டோட அச்சாணி தேவை, என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே, ரெண்டு அன்புள்ளம் தேவை என்ற பாடல் வரிகளில் பொதிந்துள்ள உண்மை மறுக்க முடியாதது. உங்களால் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் புதிய வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் பிரிவுதான் இதற்கான ஒரே தீர்வு. இல்லையென்றால் வாழ்க்கை வண்டி ஓடாமல் நின்று விடும் அல்லது விபத்து ஏற்படக் கூடும். 
2. மனக்கசப்புடன் நீடிப்பது அல்லது நீண்ட நாட்கள் மகிழ்ச்சியின்றி இருப்பது
எந்த ஒரு உறவிலும் பிரச்னைகள் வரும் போகும். அது இயல்புதான். அவை சமாளிக்கும் வகையில் இருக்க வேண்டும். ஆனால் இருவரில் ஒருவர் தொடர்ந்து மற்றவரை சீண்டிக் கொண்டிருந்தும், தொடர்ந்து கஷ்டப்படுத்திக் கொண்டும் இருந்தால் அத்தகைய உறவில் அர்த்தம் இல்லை. உங்கள் துணை சந்தோஷத்தையும் பாதுகாப்பையும் தர வேண்டும். மாறாக வெறுப்பையே தந்து கொண்டிருந்தால் உடன் வாழ்வது வதை முகாமில் இருப்பது போலத்தான். கட்டாயத்தின் பிடியில் வாழ்க்கை கசக்கவே செய்யும். எனவே அத்தகைய உறவுநிலையைத் தொடர்வதில் பயனில்லை.
3. கேள்விக்குறியாகும் எதிர்காலம்

ஒருவர் மீது மற்றவர் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டு பிரச்னைகளுடன் வாழ்க்கையைத் தொடர்ந்தால் இறுக்கமான சிக்கலாகி எதிர்காலமே கேள்விக் குறியாகிவிடும். ஏன் வீட்டுக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டால் உங்கள் துணையால் நீங்கள் தீவிரமாக மனம் பாதிப்பு அடைந்துள்ளீர்கள் என்று அர்த்தம். உங்களின் மனக் கசப்பு, மன அழுத்தமாக மாறிவிடலாம். இதற்கு முதல் தீர்வு கவுன்சிலிங். அதன் பின்னாரும் அவ்வுறவு சீர்படவிலை எனில் பிரிந்து விடுவதுதான் ஒரே தீர்வு.  அதுதான் இருவருக்கும் நல்லது. முடிவெடுக்காமல் பிரச்னையை ஜவ்வு போல் இழுத்தடிப்பது சரியாக வராது.
   
4. உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படுகிறதா?
உங்களுடைய துணை உங்களின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் உறுதுணையாக இருக்க வேண்டும். நீங்கள் எடுக்கும் புது முயற்சிகளுக்கும் தொழிலில் அல்லது வாழ்க்கையின் பங்களிப்புக்கும்  பக்கபலமாக இருக்க வேண்டும். உங்களை உற்சாகப்படுத்தி தன்னுடைய ஆதரவைத் எல்லா காலகட்டத்திலும் நிபந்தனை அற்ற அன்புடன் முழு மனத்துடன் தர வேண்டும். அப்படி செய்யாமல், அதற்கு நேர் எதிராக உங்கள் வளர்ச்சியில் பொறாமை கொண்டும், அதைத் தடுக்கும் முயற்சிகளில் அவர் இறங்கினால் நீங்கள் விழிப்படைய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். 

5. உங்கள் சுயமரியாதை குறைகிறதா?
ஒரு உறவை இருவரும் சேர்ந்து அன்பாலும் நம்பிக்கையாலும் கட்டமைத்தால் தான் அது நீடிக்கும். மாறாக உங்கள் சுய மரியாதைக்கும், நேர்மைக்கும் அல்லது நீங்கள் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்கும் நல்லொழுக்கங்களுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் உங்கள் துணையின் செயல்கள் இருந்தால் அதிகம் யோசிக்காமல் பிரிந்துவிடுங்கள். எதை விடவும் மானம் மரியாதை மிகவும் முக்கியம். வாழ்க்கை இந்த உறவுக்கு மேலாக உள்ளது என்ற தன்னம்பிக்கை கொள்ளுங்கள். தனித்து உங்களால் ஜெயிக்க முடியுமெனில் அதையே தேர்ந்தெடுங்கள்.

6. உங்கள் இருவரின் உலகமும் வெவ்வேறாக இருந்தால்?
உங்கள் இருவரின் குணநலன்கள் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தால் ஒரு கூரைக்குக் கீழ் வாழவே முடியாது. ஆரம்ப கட்ட மயக்கங்கள் தீர்ந்த பின் நீங்கள் கிழக்கு என்றால் உங்கள் துணை மேற்கு என்பார். சிறிய விஷயமோ பெரிய விஷயமோ எவ்வித உடன்படிக்கைக்கும் வரவே முடியாது. அத்தகைய நிலையில் தினம் தினம் வீடே யுத்தகளமாகும். இது அடிப்படை கோளாறு எனவே எவ்வளவு முயற்சித்தாலும் சரியாக வராது. இதற்கு பேசாமல் பிரிந்து விடுவதே மேல்.

7. உங்கள் துணை உங்களை ஏமாற்றுகிறாரா?
நம்பிக்கைத் துரோகம் என்பது யாராலும் மன்னிக்க முடியாதது. உங்களை உடலளவில் அல்லது மனத்தளவில் காயப்படுத்தும் செயல்களை உங்கள் துணை தொடர்ந்து செய்து வந்தால் நீங்கள் எதிர்ப்புணர்வை நிச்சயம் காட்ட வேண்டும். அவர்களிடம் எவ்வளவு அன்பைப் பொழிந்தாலும் அவர்கள் திருந்த மாட்டார்கள். விழலுக்கு நீர் இரைத்தாற் போல உங்கள் பொறுமையும் அன்பும் வீணாகிவிடும். இன்று சரியாகிவிடுவார் நாளை இந்தப் போக்கு மாறிவிடும் என்று நீங்கள் விட்டுக் கொடுத்து வாழ்ந்தாலும், அதுவும் அவர்களுக்கு சாதகமாகிவிடும். அவர்கள் ஆட்களை மாற்றிக் கொள்வார்களே அன்றி துரோகம் செய்வதை நிறுத்த மாட்டார்கள். பாம்பை கூடையில் வைத்து சுமப்பதைப் போன்றுதான் துரோகம் செய்பவர்களுடன் குடித்தனம் நடத்துவது. எனவே விரைவில் அந்த உறவிலிருந்து வெளிவந்துவிடுங்கள். துரோகிகளிடம் போராடுவதை விட இந்தப் பெரிய வாழ்க்கையில் செய்வதற்கு அழகான விஷயங்கள் அனேகம் உள்ளது. வெட்டி விட்டு வந்துவிடுங்கள். வாழ்க்கை சுகமாகும்.




No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...